ஸ்மார்ட்போனில் இருக்கும் போன்பே, கூகுள்பே போன்ற யூபிஐ மூலம் யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். அதேபோல, கடைகளுக்கு ரொக்கம் கொடுப்பதெல்லாம் இப்போது குறைந்துவிட்டது. சிங்கிள் டீ குடித்துவிட்டு ஸ்கேன் செய்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். பணம் புழங்கும் இடமாக மாறிவிட்ட யூபிஐ பரிவர்த்தனைகளில் மோசடி நடக்கவும் அதிக வாய்ப்புள்ளது. எனவே நாம் அதனை கவனமாக கையாள வேண்டும். மோசடி நடக்கிறது என்பதற்காக நாம் அதனை முழுமையாக ஒதுக்கி வைத்துவிட முடியாது. டிஜிட்டல் உலகத்தை பாதுகாப்பாக உஷாராக பயன்படுத்தினாலே போதும்.
தனி அக்கவுண்ட்:
உங்களது போன்பே,கூகுள்பே கணக்குகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது ஒருகதை என்றால் உங்கள் வங்கிக்கணக்கை சரியாக பயன்படுத்துவதன் மூலம் சில பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம். உங்களது சேமிப்புக்கு என தனி வங்கிக்கணக்கை வைத்துக்கொள்ளுங்கள். அதாவது சேமிப்புக்கு பயன்படுத்தும் வங்கிக்கணக்கு உங்கள் போன்பே, கூகுள்பே போன்ற யூபிஐகளுடன் இணைக்கப்பட்டிருக்கக் கூடாது. ஏடிஎம் கார்டு இருந்தாலே போதும். தேவை என்றால் ஏடிஎம் பயன்படுத்துங்கள்.
யூபிஐ பரிவர்த்தனைக்கு தனி வங்கிக்கணக்கை வைத்துக்கொள்ளுங்கள். அதாவது உங்கள் சேமிப்பு என்ற பணம் தனியான பெட்டிக்குள் இருப்பதுபோல தனி அக்கவுண்டில் இருக்க வேண்டும். உங்களது மாத செலவு எவ்வளவு இருக்கும் என்பது சராசரியாக உங்களுக்கு தெரியும். அதற்கு ஏற்ப யூபிஐக்கு தனி அக்கவுண்டில் பணத்தை போட்டுக்கொண்டு பயன்படுத்தலாம். தினசரி பரிமாற்றத்துக்கு இப்படியான தனி கணக்கு இருந்தால் ஏதேனும் மோசடி,சிக்கல் என்றாலும் பெரிய தொகைக்கு சிக்கல் வராது.