ஓய்வுக்கு பிந்தைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள போதிய நிதி இல்லாததே ஒருவர் ஓய்வைத் தள்ளிப் போடுவதற்கு முக்கிய காரணம். ஒரு கணக்கெடுப்பில் சுமார் 80% பேர் ஓய்வுக்கு பிறகான உறுதியான திட்டமிடல் எதுவும் தெரியவில்லை என்றும், அதே சமயம் 62% பேர் 30 வயதிற்குப் பிறகு ஓய்வுக் காலத்திற்கு பிறகான வாழ்க்கைக்குத் தீவிர சேமிப்பில் ஈடுபடத் துவங்குவதாகத் தெரியவந்துள்ளது. ஒரு பெரிய ஓய்வூதிய நிதியை உருவாக்குவதற்கு எதிராகச் செயல்படும் வேறு பல காரணிகள் உள்ளன. ஒருவர் தனது ஓய்வூதிய நிதியை 70-80 வயதுகள் என்பதற்குப் பதில் 80-90 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவம் (14-15%) மற்றும் கல்வி பணவீக்கம் (4-5%) உயர்ந்துள்ளது. குழந்தைகளின் நிதி இலக்குகள் மற்றும் சுகாதாரத் தேவைகளுக்காக ஒருவர் அதிக நிதி செலவிடுவதால் ஓய்வுக் காலத்திற்காகச் சேமிக்கும் உங்கள் திறனைப் பாதிக்கிறது.
சீனியர் சிட்டிசன்களால் பெரிதும் விரும்பப்படும் சிறுசேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் குறைந்து வருவது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. PPF விகிதங்கள் 2012-ல் 8.8% இருந்து 7.1% ஆகக் குறைந்திருந்தாலும், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்ட விகிதங்கள் 2012-ல் 9% ஆக இருந்து தற்போது 7.4% ஆகக் குறைந்துள்ளது. தவிர ஓய்வுக்கு பிறகான அதிக வாழ்க்கை செலவுகள் உங்கள் ஓய்வு நிதியில் பற்றாக்குறையை ஏற்படுத்தலாம்.
நாளுக்குநாள் மருத்துவ தேவைகளின் விலை உயர்வதால், ஓய்வுக் காலத்தில் உங்கள் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்ள போதுமான காப்பீடு வைத்திருக்க வேண்டும். போதுமான மருத்துவ நிதி இல்லாமல் ஓய்வு பெற்றால் உங்களின் அதீத மருத்துவச் செலவுகளைப் பிள்ளைகள் சுமக்க வேண்டியிருக்கலாம் அல்லது நீங்கள் அவதிப்பட நேரிடலாம்.
திருமணங்கள் தள்ளிப்போவதால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகள் தள்ளிப் போகின்றன. எனவே பெரும்பாலான சீனியர் சிட்டிசன்கள் தங்கள் கடமைகளை முடிக்கும் வரை தங்கள் ஓய்வுக் காலத்தைத் தாமதப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தாமதமாக ஓய்வு பெறுவதால் முக்கியமாக நிதி ஆதாயங்கள் கிடைக்கும் என்றாலும் இதோடு சேர்த்துப் பிற நன்மைகளும் உள்ளன.
60 வயதில் ஓய்வு பெறும் ஒருவர் திறமை மற்றும் சம்பளத்தின் அடிப்படையில் தொழில் வாழ்க்கையின் உச்சத்தில் இருப்பார். எனவே கூடுதலாக 2 வருடங்கள் வேலை பார்க்கும் போது கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50-70% கிடைத்தாலும், ஓய்வு நிதியானது மேலும் சில ஆண்டுகள் நீட்டிக்கப்படும் மற்றும் செலவுகளில் பணவீக்க தாக்கத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம்.
வேலையிலிருந்து ஓய்வு பெற்றாலும் வருமானத்திற்காகத் தொடர்ந்து உழைக்க விரும்பும் ஒருவர் ஏற்கனவே உள்ள பணியிடத்தில் உங்கள் ஓய்வுக் காலத்தை நீட்டிக்க முடியுமா அல்லது புதிய வேலையைத் தேட வேண்டுமா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அதே போல முழு நேர வேலை வேண்டுமா அல்லது பகுதி நேர வேலை வேண்டுமா, வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டுமா அல்லது வெளியே செல்ல வேண்டுமா என்பதைத் தெளிவாகத் திட்டமிடுவது முக்கியம்.