ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்க அனுமதி கிடையாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் இது வரை விற்கப்பட்ட தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை இல்லாமல் இருக்குமோ? அதனால் நாம் வைத்துள்ள தங்க நகைகள் எதிர்காலத்தில் மதிப்பிழக்க நேரிடுமோ என்ற கேள்விகள் தற்போது மக்களிடையே எழுந்துள்ளது. இதில் நகைகளில் HUID எனப்படும் ஹால்மார்க் முத்திரை கண்டிப்பாக இருக்க வேண்டிய அவசியம் ஏன்? ஹால்மார்க் முத்திரை என்றால் என்ன? அது நம் நகைகளில் உள்ளதா என்பதை எப்படிக் கண்டறிவது என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
தங்க நகைக்காக அளிக்கப்படும் ஹால்மார்க் எண் என்றால் என்ன? ஹால்மார்க் முத்திரை (HUID) என்பது 6 எண்கள் கொண்ட ஒரு குறியீடு ஆகும். ஒவ்வொரு நகைக்கும் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை என்பது இடம்பெற்றிருக்க வேண்டும். Assaying & Hallmarking centre என்ற இடத்தில் ஹால்மார்க் முத்திரை பதிக்கப்படும். இது அந்த நகைக்கு மதிப்பளிப்பதுடன், எளிதில் தேடுவதற்கும் உதவுகிறது. இதன் மூலம் நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நகைக்கான நம்பகத்தன்மை உருவாக்கப்படுகிறது.
ஏன் தங்க நகைகளில் ஹால்மார்க் அவசியம் ? தங்க நகைகளின் தரம் மற்றும் தூய்மையை உறுதி செய்யும் வகையில் இந்திய தர நிர்ணய அமைவனம் ( BIS) மூலம் தரப்படும் முத்திரை தான் ஹால்மார்க். தரமான தங்க நகை என்றால் கண்டிப்பாக ஹால்மார்க் எண் கண்டிப்பாகப் பொறிக்கப்பட்டு இருக்கும். நாம் தங்க நகைகளை வாங்கும் முன்பு கண்டிப்பாக அதில் ஹால்மார்க் முத்திரை இடம்பெற்று இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அது முக்கியமாக இருக்கிறது.
உங்கள் தங்க நகைகளில் ஹால்மார்க் முத்திரை உள்ளதா என்பதை எப்படி தெரிந்துகொள்ளுவது? எந்த தங்க நகையும் முழுமையாகத் தங்கம் கிடையாது. கண்டிப்பாகத் தங்கத்தில் இதர உலோகங்கள் கலக்கப்படும். அதன் மூலம்தான் நமக்கு ஏற்றது போல் தங்க நகைகளை வடிவமைக்க முடியும். கலக்கப்படும் உலோகங்களின் அளவை பொருத்து அதனின் விலை அமையும். தரத்திற்குகேற்ற ஹால்மார்க் முத்திரை மாறுப்படும். ஹால்மார்க் முத்திரை என்பது மூன்று குறியீடுகளைக் கொண்டுள்ளது. BIS குறியீடு, தரம் மற்றும் தூய்மை குறியீடு மற்றும் HUID எண் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.
நகைகளில் பதிக்கப்படும் ஹால்மார்க் முத்திரை மூன்று விதமாகப் பிரிக்கப்படுகிறது. 22K 916 என்றால் 22 காரட் தங்கம். இதில் 91.6 சதவீதம் தங்கம் இடம்பெற்று இருக்கும். 18K 750 என்றால் 18 கார்ட் தங்கம். இதில் 75 சதவீதம் தங்கம் இடம்பெற்று இருக்கும். 14K 585 என்றால் 14 கார்ட் தங்கம். இதில் 58.5 சதவீதம் தங்கம் இடம்பெற்று இருக்கும். நீங்கள் வாங்கும் நகைகளில் BIS லோகோ, தங்கத்தின் தரத்தைக் குறிக்கும் முத்திரை (22K 916) மற்றும் HUID 6 இலக்க எண் ஆகியவை கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த குறியீடுகள் இணைந்து நகையின் பின்புறத்தில் பொறிக்கப்பட்டு இருக்கும்.
உங்களிடம் உள்ள தங்க நகையின் நம்பகத்தன்மையைக் கண்டறிவது எப்படி? BIS-இனால் அங்கீகரிக்கப்பட்ட Assaying and Hallmarking Centre-இல் உங்களின் தங்க நகைகளின் நம்பகத்தன்மையைக் கண்டறியலாம். அதற்கு ரூ.200 கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆனால் வாடிக்கையாளர்களால் இதனை மேற்கொள்ள இயலாது. BIS அங்கீகரித்த நகைக்கடை உரிமையாளர்கள் மூலம் இதனை மேற்கொள்ளலாம்.
உண்மையான ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகளை நாம் வாங்கும் போது அதற்கான நன்மைகளும் நமக்குக் கிடைக்கும். வங்கியில் தங்க நகைக் கடன் வாங்க, நகைகளை மீண்டும் விற்பனை செய்வதற்கு ஹால்மார்க் முத்திரை அவசியமாக உள்ளது. நீங்கள் சிறிது சிறிதாகச் சேமித்து வாங்கும் தங்க நகைகளில் கண்டிப்பாக ஹால்மார்க் முத்திரை உள்ளதா என்பதைக் கவனித்து வாங்கவும். அதேவேளையில் மக்கள் ஏற்கனவே வாங்கியுள்ள, 4 இலச்சினைகளுடன் கூடிய பழைய ஹால்மார்க் நகைகள் செல்லுபடியாகும் என்று தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது.