மூத்த குடிமக்கள் பெரும்பாலானோருக்கு ஓய்வூதியம் மட்டுமே ஒரே நிதி ஆதாரமாக இருப்பதால் அதிகரித்து கொண்டே செல்லும் பணவீக்கம் மற்றும் விலைவாசியை சமாளிக்க முடியுமா என்ற கவலை எழுகிறது. இவர்களின் கவலைக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் அரசு சார்பில் மூத்த குடிமக்களுக்காக பல முதலீட்டு திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை மூலம் மூத்த குடிமக்கள் தங்கள் செலவுகளை பார்த்து கொள்ள கூடுதல் நிதி கிடைக்கும். மூத்த குடிமக்கள் கருத்தில் கொள்ள கூடிய அரசின் பிரபல முதலீட்டு திட்டங்கள்:
அடல் பென்ஷன் யோஜனா: அமைப்புசாரா துறைத் தொழிலாளர்கள் தங்களின் ஓய்வுக்கு பின் தேவையான நிதி பாதுகாப்பை பெற உதவும் அடல் பென்ஷன் யோஜனா (Atal pension Yojana), மத்திய அரசு வழங்கும் பென்ஷன் திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் டெப்பாசிட் செய்பவர்கள் தங்களின் 60 வயதிற்கு பிறகு பென்ஷன் பெற தொடங்குகின்றனர். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். முதலீட்டாளர்கள் தங்களின் 60 வயதிற்கு பின் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமாக ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.5,000 வரை பெறலாம். இந்த திட்டத்தில் ஒருவர் எவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்ய தொடங்குகிறாரோ அவ்வளவு அதிக பலன்கள் கிடைக்கும். அதே போல இந்த பென்ஷன் திட்டத்தின் கீழ் பலன்களை பெற விரும்புவோர் பேங்க் அல்லது போஸ்ட் ஆபிஸ் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும்.
நேஷ்னல் பென்ஷன் ஸ்கீம்: தேசிய ஓய்வூதியத் திட்டம் எனப்படும் NPS, அரசால் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய திட்டங்களில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2004-ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த திட்டம் முதலில் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே கிடைத்த நிலையில் 2009-ல் அனைத்து துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. 18-60 வயதுக்குட்பட்ட இந்தியக் குடியுரிமை பெற்ற மற்றும் KYC விதிமுறைகளுக்கு இணங்க வேலை செய்யும் நிறுவனங்களால் பதிவுசெய்யப்பட்ட கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் இத்திட்டத்தின் கீழ் சந்தாதாரர்களாக பதிவு செய்து கொள்ளலாம். சிறு வயதிலேயே முதலீடு செய்ய தொடங்கினால் இத்திட்டம் மிகுந்த பலனளிக்கும். மொத்த டெபாசிட் தொகையில் 25% தொகையை முன்கூட்டியே திரும்ப பெறும் வசதியும் உண்டு. ஒருவர் சராசரியாக டெபாசிட் செய்த தொகையில் கிட்டத்தட்ட 10% திரும்ப பெற முடியும். 60 வயது வரை இத்திட்டத்தில் முதலீடு செய்து, மெச்சூரிட்டியின் போது 60% மொத்த தொகையாகவும், 40% மாதாந்திர ஓய்வூதியமாகவும் வழங்கப்படும்.
பிரதான் மந்திரி வயா வந்தனா யோஜனா: மூத்த குடிமக்களுக்கான அரசு ஆதரவுடன் கூடிய இந்த ஓய்வூதியத் திட்டத்தை LIC நிர்வகித்து வருகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த திட்டம், தொடங்கப்படும் போது ரூ.7.5 லட்சமாக இருந்த முதலீட்டு வரம்பு, தற்போது ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களின் வயது 60 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். மாதம் ரூ.9250 - ரூ.10000 வரை ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் வருமானம் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
சீனியர் பென்ஷன் இன்ஷூரன்ஸ் ஸ்கீம்: இது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கானது மற்றும் LIC-ஆல் நிர்வகிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு 10 ஆண்டுகள் மற்றும் ஆண்டுக்கு 8% வட்டி விகிதம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் திரும்பப் பெறுவது மாதாந்திர, 3 மாதங்கள், 6 மாதங்கள் மற்றும் ஆண்டு அடிப்படையில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த திட்டம் 15 நாட்கள் ஃப்ரீ லுக் அப் பீரியட்டுடன் வருகிறது.
சீனியர் சிட்டிசன் சேவிங்ஸ் ஸ்கீம்: போஸ்ட் ஆபிசால் நிர்வகிக்கப்படும் இத்திட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே முதலீடு செய்ய அனுமதி உண்டு. குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ரூ.1000 மற்றும் அதிகபட்ச தொகை ரூ.15 லட்சம் ஆகும். இதில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது.