இந்திய பாரம்பரியத்தில், அதிலும் தமிழ் கலாச்சாரத்தில் தங்க நகைகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உண்டு என்பது நாம் எல்லோரும் அறிந்த விஷயம்தான். சேமிப்பு நோக்கத்தில், தங்க நகை அணிய வேண்டும் என்ற ஆசையில் அல்லது எதிர்காலத்தில் நடைபெற இருக்கும் திருமணம், காதுகுத்து போன்ற விழாக்களின் தேவைகளுக்காக தங்க நகை வாங்குவதை நாம் வாடிக்கையாக வைத்திருக்கிறோம்.
என்றுமே நிலையான மதிப்பு கொண்டுள்ள தங்க நகைகளை வாங்குவதில் எந்தத் தவறுமே இல்லை. ஆனால், எந்த சமயத்தில் தங்கத்தின் மதிப்பு சீரான அளவில் இருக்கும் என்று நாம் கணித்து வாங்குவதில்லை. சில சமயம் தங்கத்தின் விலை கிடுகிடுவென்று உயர்ந்து உச்சத்தில் இருக்கும். அந்த சமயத்தில் நாம் தங்கம் வாங்குவது நமக்கு இழப்பை ஏற்படுத்துவதாக அமையும்.
உதாரணத்திற்கு கடந்த ஜனவரி மாதத்தில், இதுவரை இல்லாத உச்சமாக, 24 காரட் தரம் கொண்ட 10 கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.57,000 வரை தொட்டது. தற்போது கூட ஒரு கிராம் ரூ.5,700 என்ற அளவிலேயே நீடிக்கிறது. வாடிக்கையாளர்கள் வாங்கக் கூடிய 22 காரட் தரம் கொண்ட தங்கமும் ஒரு கிராம் ரூ.5,300க்கு மேற்பட்ட விலையிலேயே விற்பனையாகி வருகிறது.
கடைசியாக பிப்ரவர் 25ம் தேதியான நேற்று கிராம் ரூ.5210க்கு விற்பனையானது. பிப்ரவரி 3 மற்றும் பிப்ரவரி 25 ஆகிய தினங்களை ஒப்பிட்டால், கிட்டத்தட்ட பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.2360 குறைந்துள்ளது. விஷேச மாதம் நெருங்கி வரும் நிலையில் தங்கம் விலை மெல்ல மெல்ல சரிவதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இன்னமும் விலை அதிகரிக்கும் : இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நெருங்குவதற்குள் தங்கத்தின் மதிப்பு மென்மேலும் அதிகரித்திருக்கும் என்று நிபுணர்கள் பலர் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து நிதி ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த நிஷா ஹர்ஷேகர், “கடந்த சில மாதங்களில் மற்ற அனைத்து பொருட்களை காட்டிலும் தங்கத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. ரூபாய் மதிப்பு சரிந்து வரும் நிலையில், 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.63,000 வரை அதிகரிக்கலாம். அதற்கு அடுத்த சில மாதங்களில் மீண்டும் ரூ.53,000 வரை இறங்கலாம்’’ என்று கூறினார்.