

ஃபோர்ப்ஸ் நிறுவனம் உலகப் பணக்காரர்கள் பட்டியல் 2019-ஐ வெளியிட்டுள்ளது. அதில் வழக்கம் போல டாப் 3 இடங்களைப் பிடிக்க ஜெஃப் பிசோஸ், பில்கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அதே நேரம் இந்திய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி இந்தப் பட்டியலில் வேகமாக முன்னேறி வருகிறார்.


உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் பில்கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளி 131 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஃபோர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.


மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் 96.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.


முதலீட்டாளர்களின் குருவாக உள்ள 88 வயதான வாரன் பஃபெட் 82.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.


ஃபெரெஞ்ச் ஆடம்பர பிராண்டு நிறுவன LVMH தலைமை நிர்வாக அதிகாரியான பெர்னார்ட் அர்னாவுல்ட் 76 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்துள்ளார்.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் 13வது இடத்தைப் படித்துள்ளார். இந்திய கோடீஸ்வர்களில் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு சென்ற ஆண்டு இருந்த 40.1 பில்லியன் டாலரிலிருந்து 2019-ம் ஆண்டு 50 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.


மறு பக்கம் முகேஷ் அம்பானியின் தம்பி மற்றும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான அனில் அம்பானியின் சொத்து மதிப்பு 26 சதவீதம் சரிந்து போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் 1,349வது இடத்தைப் பிடித்துள்ளார்.


ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் கேம்பிட்ஜ் அனலிட்டிகா போன்ற சர்ச்சைகளில் சிக்கியதால் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளார். சென்ற ஆண்டு 5வது இடத்திலிருந்த மார்க் இந்த ஆண்டு 63.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.


ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி 22.6 பில்லியன் டாலருடன் 36வது இடத்திலும், ஹெச்சிஎல் இணை நிறுவனர் ஷிவ் நாடார் 14.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 82வது இடத்திலும் லக்ஷ்மி மிட்டல் 14.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 91வது இடத்திலும் இடம்பெற்று இருந்தனர்.


ஆதித்யா குமார் மங்கலம் பிர்லா 122வது இடத்தையும், கவுதம் அதானி 167வது இடத்தையும், சுனில் மிட்டல் 244வது இடத்தையும், ஆச்சர்யா பால கிருஷ்ணா 365வது இடத்தையும், அஜய் பிர்மல் 436வது இடத்தையும், நாராயண மூர்த்தி 962வது இடத்தையும் ஃபோர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்திருந்தனர்.