இன்றைய இளம் தலைமுறையினர் பலருக்கு எப்படி சம்பாதிப்பது என்பது பற்றிய தெளிவான புரிதல் இருக்கிறது. ஆனால், நாம் எதற்காக சம்பாதிக்கிறோம், அதை எப்படி செலவு செய்ய வேண்டும், எந்தெந்த விஷயங்களில் நாம் செலவு செய்ய வேண்டும் என்பதை பற்றிய புரிதல் சரியாக இல்லை. இந்த பண்புகளை குழந்தை பருவத்தில் இருந்தே அவர்களுக்கு எடுத்து கூறி வளர்த்திருக்க வேண்டியது மிக அவசியம். இதற்கான பொறுப்பு பெற்றோர்களின் கையில் அதிகம் உள்ளது. குழந்தைகளுக்கு பணத்தை எப்படி நிர்வகிப்பது என்பதை எளிதாக எடுத்து கூற சில வழிமுறைகள் உண்டு. அவற்றை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்ப்போம்.
சேமிப்பு : குழந்தைகள் கையில் பணம் என்கிற ஒன்றை நீங்கள் அறிமுகம் செய்வதோடு அவற்றை எப்படி சேமிக்க வேண்டும் என்பதை பற்றியும் எடுத்து கூற வேண்டும். குறிப்பாக சிறுதுளி பெருவெள்ளம் என்பதை அடிப்படையாக கொண்டது தான் சேமிப்பு என்கிற முக்கிய தத்துவத்தை அவர்களுக்கு விளக்கி கூறுங்கள். மேலும் பதின் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு இதனை சரியான முறையில் கையாளுவது எப்படி என்பதையும் கற்று கொடுங்கள்.
கருவிகள் : முன்னதாக, குழந்தைகள் தாங்கள் சேமிக்கும் பணத்தை உண்டியலில் வைத்து சேமித்து கொள்வார்கள். ஆனால் காலப்போக்கில் பணத்தை நிர்வகிக்கும் புதிய முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. தனியார் வங்கிக் கணக்குகள் மற்றும் டெபிட் கார்டுகள் இப்போது பிரபலமாக பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இவற்றை பற்றி குழந்தைகளுக்கு முழுமையாக அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதே போன்று இந்த நவீன முறையை எப்படி அணுக வேண்டும் என்பதையும் கற்று கொடுங்கள். இப்படி செய்து வந்தால் குழந்தைகளுக்கு பணத்தை சரியாக கையாள முடியும் என்கிற நம்பிக்கை பிறக்கும்.
செலவினங்கள் : சேமிப்பு பற்றிய கற்று தருவது ஒருபுறம் இருக்க, அதை எப்படி செலவிடுகிறோம் என்பதை கற்றுவது மற்றொரு புறம் கற்று தர வேண்டும். வீட்டில் எந்தெந்த பொருட்கள் வாங்குவதற்கு எவ்வளவு செலவு செய்கிறோம், மாத மாதம் எவ்வளவு செலவு ஆகிறது, இதர செலவுகள் போன்றவற்றை தெளிவாக எடுத்து கூறுங்கள். இது அவர்களின் எதிர்காலத்திற்கும் பெரிதும் உதவும்.
பாக்கெட் மணி : குழந்தைகள் தங்களது வயதில் வேலைக்கு செல்ல இயலாததால், அவர்களின் தேவைகளை சில நேரங்களில் அவர்களே பார்த்து கொள்ளும்படி நேர்ந்திடும். எனவே வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு குறிப்பிட்ட அளவு பணத்தை கொடுங்கள். அதை எப்படி செலவு செய்கிறார்கள், எதற்காக செலவு செய்கிறார்கள் என்பதை எழுதி வைத்து அதை நிர்வகிக்க சொல்லி கொடுங்கள்.