இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெற்றதையடுத்து, ஏராளமான மக்கள் ரொக்கமாக பணமாக கொடுத்து நகைகள் வாங்குவதாக புகார்கள் எழுந்துள்ளது. அதாவது, வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.2000 நோட்டுகளை நகைக்கடைகளில் கொடுத்து நகை வாங்க முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆதார் அட்டை, பான் கார்டு போன்ற அடையாளச் சான்றுகள் இல்லாமல் சட்டப்பூர்வமாக எவ்வளவு தங்கம் வாங்க முடியும் என்ற குழப்பம் மக்கள் இடையே எழுந்துள்ளது. அதே சமயம், அடையாளச் சான்றுகளை சமர்ப்பித்தாலும் எவ்வளவு தங்கத்தை ரொக்கமாக கொடுத்து வாங்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. உங்களுக்கும் இந்த கேள்வி இருந்தால், இதற்கான பதிலை நாங்கள் கூறுகிறோம்.
உதாரணமாக, ஒரு நபர் ரூ.4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை ரொக்கமாக வாங்கினால், அதாவது 269ST பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள பரிவர்த்தனையின் அளவு ரூ.2 லட்சத்திற்கு மேல் இருந்தால், அவருக்கு பிரிவு 271D இன் கீழ் அபராதம் விதிக்கப்படும். அபராதத் தொகை பரிவர்த்தனையின் தொகைக்கு சமமாக இருக்கும். அதே சமயம், ரொக்கப் பெறுபவருக்கும் அபராதம் விதிக்கப்படும். அதாவது ரூ.4 லட்சம் ரொக்கப் பரிவர்த்தனை நடந்திருந்தால், நகைக்கடைக்காரர் ரூ.4 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.
2 லட்சத்துக்கும் அதிகமான தங்க நகைகளை வாங்க பான்/ஆதார் அவசியம்? : 1962 இன் வருமான வரி விதிகளின் 114B விதியின் கீழ் 2 லட்சம் மற்றும் அதற்கு மேல் தங்கம் வாங்குவதற்கு பான் விவரங்களை வழங்குவது கட்டாயமாகும். எனவே, ஒரு ரொக்கமாக ரூ.2 லட்சத்திற்கு மேல் தங்கம் வாங்கினால், பணம் செலுத்தும் முறை (cash or electronic) எதுவாக இருந்தாலும், நகைக்கடைக்காரர்களுக்கு பான் விவரங்களை வழங்குவது கட்டாயமாகும்.