ஒரு நபர் தனது வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும்? பணத்தை வைத்திருப்பது பற்றிய வருமான வரி விதிகள் என்ன கூறுகிறது? வருமான வரித்துறை அதிகாரிகள் ரொக்கமாகப் பணத்தை உங்கள் வீட்டில் கண்டு பிடித்தால் என்ன நடக்கும்? வீட்டில் பணத்தை வைத்திருந்தால் நீங்கள் பின்பற்ற வேண்டிய வருமான வரி விதிகள் இங்கே.
விதிகளின்படி, வீட்டில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இதுதொடர்பாக அரசால் எந்த வரம்பும் நிர்ணயம் செய்யப்படவில்லை, ஆனால் உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது, அது எங்கிருந்து வந்தது, அதன் ஆதாரம் என்ன என்பது பற்றிய முழுமையான தகவல்கள் உங்களிடம் இருக்க வேண்டும். வருமான வரித்துறையினரோ அல்லது மற்ற அதிகாரிகளோ அதிகப் பணத்தைப் பிடித்தால், அந்தப் பணம் எப்படி வந்தது, எங்கிருந்து வந்தது..? யாரிடம் இருந்து வந்தது..? போன்ற முக்கியமான ஆதாரத்தை நீங்கள் அவர்களிடம் சொல்ல வேண்டும். இல்லையெனில் பெரும் பிரச்னை வரும். உங்கள் கையில் இருக்கும் பணத்திற்குச் சரியான முறையில் உரிய கணக்கு, ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும், இல்லாத நிலையில் வருமான வரித்துறை பெரும் தொகை அபராதம் விதிக்கும்.
இது மட்டும் அல்லாமல் வருமான வரி துறையின் விசாரணை, வழக்கு எனப் பலவும் இதில் அடங்கும். எனவே எப்போதும் கையில் இருக்கும் பணத்திற்கு வருமான வரிக் கணக்கை நீங்கள் பூர்த்திச் செய்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்தவும். மத்திய நேரடி வரி அமைப்பின் விதிமுறைகள் படி பணத்திற்கான ஆதாரத்தைக் காட்ட முடியாவிட்டால், வரித் துறை பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்குச் சுமார் 137 சதவீதத்திற்கு இணையான அபராதத்தை விதிக்க முடியும். இதனால் நியாயமாகச் சேர்த்த பணத்தைச் சேமிக்கும் போது நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இப்போது பார்ப்போம்.
ஒரு நிதியாண்டில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தால் அபராதம் விதிக்கப்படும். இதோடு 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ வேண்டுமானால், உங்கள் பான் விவரங்களை வங்கியில் அளிக்க வேண்டும். ஒருவர் 1,20,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்தால், வங்கியில் பான் மற்றும் ஆதார் அட்டைகளைச் சமர்ப்பிக்க வேண்டும். இதன் மூலம் வருமான வரி துறைக்கும் உங்கள் பான் எண் கீழ் வைப்பு நிதிகுறித்து விபரங்கள் சேர்க்கப்படும்.
இதேபோல் ரொக்கமாக ரூ.2 லட்சத்துக்கு மேல் செலவு செய்ய முடியாது. 2 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புடைய பொருட்களை வாங்கினால், உங்கள் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையைக் கட்டாயம் வழங்க வேண்டும். மேலும் கிரெடிட் - டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி 1 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் செலுத்துபவர் வருமான வரித்துறை கண்காணிப்புக்குக் கீழ் வரலாம். இந்தியாவில் எந்த வங்கியாக இருந்தாலும் 2 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாகப் பணத்தை வித்டிரா செய்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டும்.
வருமான வரி விதியின்படி, உங்கள் நண்பர் அல்லது உறவினர்களிடம் இருந்து 2 லட்ச ரூபாய்க்கு மேல் பணத்தைப் பெறக்கூடாது. அவ்வாறு செய்தால், வங்கி வாயிலாகப் பணப் பரிமாற்றம் செய்ய வேண்டும். இப்படி ரொக்கப் பரிவர்த்தனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் பணத்தை கையாண்டால் சிக்கல் தான். காசும் பணமும் நம்முடையது என்றாலும் அதை செலவு செய்வதிலும் கனவமாக இருக்க வேண்டும்.