இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பனிமூட்டம் மிகுதியாகவே இருந்தது. சமூக வலைதளங்களில் பலரும் “எங்க ஊரு ஊட்டி போல இருக்கிறது; இப்போது கொடைக்கானலில் இருப்பதை போல உணருகிறேன்’’ என்று பல கோணங்களில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால், அதற்கு நேர் எதிரான கடும் வெயில் காலமும் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயில் மிகுதியாக இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதத்திலேயே வெயில் வாட்டி வதைக்க தொடங்கியிருக்கிறது. வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க பலரும் உடனடியாக தேர்வு செய்வது ஏசி-யைத் தான். அதை வாங்கும்போது என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
பட்ஜெட்டிற்கு முதல் கவனம் : ஒரு டன் ஏசி, ஒன்றரை டன் ஏசி, 2 டன் ஏசி மற்றும் 2 ஸ்டார், 5 ஸ்டார் பவர் ரேட்டிங் என பல வித வேரியன்டுகளை கொண்ட ஏசிக்கள் அதற்கேற்ற விலையில் விற்பனைக்கு வருகின்றன. பொதுவாக 30 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது. நம்முடைய மாத பட்ஜெட்டை பதம் பார்த்துவிடாத அளவுக்கு கட்டுப்படியான விலையில் ஏசி வாங்கிக் கொள்வது நல்லது.
ஸ்பிலிட் அல்லது விண்டோ ஏசி : பொதுவாக ஸ்பிலிட் ஏசிக்கும், விண்டோ ஏசிக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது. ஆனால், விண்டோ ஏசி சற்று விலை குறைவாக இருக்கும். அதே சமயம் அதிக ஒலியை எழுப்பும். ஜன்னல் பகுதியில் மட்டுமே இதை மாட்ட முடியும். ஆனால், ஸ்பிலிட் ஏசியை உங்கள் வசதிக்கு தகுந்தபடி எங்கு வேண்டுமானாலும் மாட்டிக் கொள்ளலாம்.