2023-24 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், நாட்டின் வருமானம் மற்றும் செலவுகள் குறித்த பதிவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அவரது அதிகாரிகள் குழுவும் இரவு பகல் பாராது தயாரித்து வருகின்றனர். அப்படி உழைக்கும் குழு உறுப்பினர்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டாமா?
டி.வி.சோமநாதன் மத்திய நிதிச் செயலாளராகவும், நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரியாகவும் உள்ளார். நிதியமைச்சகத்தின் செலவுத் துறையின் பொறுப்பாளராக உள்ள இவர் 1987-பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். செலவினத் துறை செயலாளராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராகவும், இணைச் செயலாளராகவும் இருந்தார். உலக வங்கியில் இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார் .
அஜய் சேத், நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளராக உள்ளார். பொருளாதார விவகாரங்கள் துறையின் வரவு செலவுத் துறையானது பட்ஜெட்டைத் தயாரிப்பதற்குப் பொறுப்பான குழுவாக இருப்பதால், பட்ஜெட்டைத் தீர்மானிப்பதில் அவருக்கு ஒரு முக்கிய பங்கு உள்ளது. சேத் 1987-ம் ஆண்டு பேட்ச் கர்நாடக கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்து 2000 இல் செலவினத் துறை மற்றும் பொருளாதார விவகாரத் துறையின் துணைச் செயலாளராகவும் இயக்குநராகவும் பணியாற்றினார். 2004-2008 காலகட்டத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிர்வாக இயக்குநரின் ஆலோசகராகவும் பின்னர் பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநராகப் பதவி வகித்தார்.
விவேக் ஜோஹ்ரி, மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் (CBIC) தலைவர் மற்றும் இந்திய அரசின் சிறப்பு செயலாளராக உள்ளார். 1985 ஆண்டில் IRS (சுங்கம் மற்றும் மறைமுக வரிகள்) அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ஜோஹ்ரி மறைமுக வரி நிர்வாகத்தின் முழு வரம்பையும் உள்ளடக்கிய பல பதவிகளில் பணியாற்றியுள்ளார். அவர் ஜிஎஸ்டி குழு உறுப்பினராக இருந்த காலத்தில் வரி செலுத்துவோர் மீதான சுமையை எளிதாக்குவது மற்றும் வரி ஏய்ப்பைச் சமாளிப்பதற்கான இரண்டு ஜிஎஸ்டி சட்டம் மற்றும் நடைமுறைகள் கொண்டுவரப்பட்டது.
சஞ்சய் மல்ஹோத்ரா ராஜஸ்தான் கேடரின் 1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். நிதிச் சேவைகள் துறையில் செயலாளராகப் பணியாற்றி வந்தார். அக்டோபர் 2022 முதல் வருவாய்த் துறையில் சிறப்புப் பணியில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். டிசம்பர் 2022 இல் நிதி அமைச்சகத்தின் வருவாய் செயலாளராக பணியாற்றி வருகிறார்.மேலும் ஜிஎஸ்டி கவுன்சிலின் அதிகாரப்பூர்வ செயலாளராகவும் உள்ளார்.
ஹரியானா கேடரின் 1989-பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான விவேக் ஜோஷி, உள்துறை அமைச்சகத்தின் பதிவாளர் ஜெனரலாகவும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையராகவும் இருந்தார். நவம்பர் 2022 இல், வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் NPS ஆகியவற்றின் செயல்பாட்டைக் கவனிக்கும் நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறையின் (DFS) செயலாளராகப் பொறுப்பேற்றார்.
வி அனந்த நாகேஸ்வரன் அரசாங்கத்தின் பிரதான பொருளாதார ஆலோசகர் ஆவார். அவர் பொருளாதார ஆய்விற்கு பொறுப்பானவர், மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரைக்கும் உள்ளீடுகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐஐஎம்-அகமதாபாத்தில் எம்பிஏ மற்றும் ஐசென்பெர்க் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட், யுமாஸ் ஆம்ஹெர்ஸ்டில் முனைவர் பட்டம் பெற்ற நாகேஸ்வரம், இதற்கு முன்பு யுபிஎஸ், ஜூலியஸ் பேர் மற்றும் கிரெடிட் சூயிஸ்ஸுடன் போன்ற நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார்.