பொருளாதார மந்தநிலை பணவீக்கம் என்று ஒரு பக்கம் உலகம் முழுவதுமே பாதிக்கப்பட்டு வருகிறது. அதன் எதிரொலியாக பணிநீக்க நடவடிக்கைகளை உலகம் முழுவதிலும் பல பெரு நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக பெரு நிறுவனங்களில் விற்பனை சரிவு மற்றும் வருமானம் குறைவு என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்நுட்ப சந்தையில் தனக்கென பிரத்தியேகமான இடம் பிடித்திருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை சரிந்துள்ளது என்று அறிக்கை வெளியாகி இருக்கிறது.
பொதுவாகவே விடுமுறை காலத்தில் வீட்டு உபயோக பொருட்கள், சாதனங்கள் உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரிக்கும். ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சப்ளையில் இருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் மற்றும் உலக அளவில் பொருளாதார பாதிப்புகள் ஆகிய இரண்டுமே ஆப்பிள் நிறுவனத்தின் விடுமுறை கால விற்பனையை பாதித்து இருக்கிறது என்று நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
டிசம்பர் மாத காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் அதாவது 115.2 பில்லியன் டாலராக 5.5% குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆப்பிள் நிறுவனத்தின் விடுமுறை காலாண்டு விற்பனை 121.1 பில்லியன் டாலராக இருக்கும் என்று கணித்து வைத்திருந்தது. கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து ஆப்பிள் நிறுவனத்தில் விற்பனை விடுமுறை கால விற்பனை பற்றிய கணிப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கணிப்பு முதல் முறையாக தவறி இருக்கிறது. 2019 ல் இருந்து, முதல் முறையாக விற்பனை சரிந்துள்ளது.
இந்த விற்பனை பற்றிய அறிக்கை வெளியான பிறகு பங்குகளின் மதிப்பும் 5.6% சரிந்தது. ஆப்பிள் நிறுவனத்தில் இருக்கும் உற்பத்தி சார்ந்த பிரச்சனைகள் தற்போது குறைந்துள்ளது என்றும், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான டாம் குக், சீன நாடு கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து மீண்டும் மீண்டு வருகிறது, எனவே விரைவில் விற்பனை அதிகரிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டாம் குக் ‘உலகம் பல்வேறு எதிர்பாராத நெருக்கடிகளை சந்தித்து வருகிறது; பணவீக்கம் முதல் கிழக்கு ஐரோப்பாவில் போர் வரை தொடர்ச்சியாக கோவிட் தொற்று காலத்தில் இருந்து உலகத்தை பாதிக்கும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. ஆப்பிள் நிறுவனம் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், எந்த நிலையாக இருந்தாலுமே அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் இதுவரை இருந்த அணுகுமுறை மாறாது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
கடந்த காலாண்டில் ஐபோன் மற்றும் மேக் உள்ளிட்ட இரண்டு தயாரிப்புகளுமே விற்பனை குறைவாக இருந்தது. விற்பனை சரிவுக்கு சீனாவில் விதிக்கப்பட்ட கோவிட் கட்டுப்பாடுகளும் முக்கிய காரணம். இதனால் மிகவும் பிரபலமாக இருக்கும் ஐபோன் வெர்ஷன்களை உலகம் முழுவதிலும் அனுப்ப முடியவில்லை என்று ஆப்பிள் நிறுவனம் கவலை தெரிவித்திருக்கிறது. மேலும், திட்டமிட்டபடி புதிய தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனத்தால் அறிமுகம் செய்யமுடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.