கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து அதன் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க் செலவை குறைக்க வேண்டி சுமார் 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கினார். அதைத் தொடர்ந்து மெட்டா நிறுவனமும் 10,000 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. அமேசான் நிறுவனத்தில் சுமார் 18,000 ஊழியர்களும் நீக்கப்பட்டனர். கூகுள் நிறுவனமும் சுமார் 12,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது. கோவிட்-19 லாக்டவுன்களின் மிகப்பெரிய பயனாளிகளில் ஒன்றான ஜூம் டெக்னாலஜிஸ் இன்க்., இந்த வாரம் 15% ஆட்களை குறைப்பதாக அறிவித்தது. ஆனால் ஆப்பிள் தனது ஆட்குறைப்பு நடவடிக்கையை தவிர்த்தது எப்படி என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கடந்த 1997-ல் ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் தலைமை பொறுப்பை கவனித்தபோது ஒரே நேரத்தில் சுமார் 4,100 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்னர் அந்த நிறுவனத்தில் அதிக அளவில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. 2020ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை ஆப்பிள் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை வெறும் 20 % மட்டுமே அதிகரித்தது. ஆனால் இதே காலக்கட்டத்தில் ஆல்பபெட் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை 60 %அதிகரித்துள்ளது. அதாவது 2020 முதல் 2022 வரையில் ஆப்பிள் நிறுவனம் ஊழியர்களை வேலைக்காக சேர்த்த நபர்களின் எண்ணிக்கை 7000 மட்டும்தான். அதாவது மொத்தமாக உள்ள 1.64 லட்ச ஊழியர்களில் வெறும் 6 %எண்ணிக்கையில்தான் புதிதாக ஊழியர்களை பணிக்கு தேர்வு செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.
இருந்தாலும் பிப்ரவரி முதல் வாரத்தில் ஆப்பிளின் காலாண்டிற்கான வருவாய் குறித்த விவரம் வெளியாகும் போது ஆட்குறைப்பு நடவடிக்கை உள்ளதா என்பது தெரியவரும். ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்ட சில ஊழியர்களும் சில்லறை வர்த்தகப் பிரிவில் பணி செய்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அந்த எண்ணிக்கை கூட அதிகபட்சம் 100-க்கு மேல் இருக்காது என கூறப்படுகிறது.
கொரோனா பொதுமுடக்கம் போன்ற காலக்கட்டத்தில் பெருவாரியான மக்கள் ஆன்லைனில் வேலைப்பார்ப்பதை விரும்பினர், நிறுவனங்களும் அதனை கணக்கில் கொண்டு அதிக ஆட்களை சேர்த்தன. தற்போது அந்த எண்ணிக்கையை அப்படியே அந்நிறுவனங்கள் குறைத்து வருவதுதான் கூகுள் போன்ற ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு காரணம் என்கின்றனர் வல்லுனர்கள்.