இந்தியா மாறுபட்ட தட்பவெப்ப நிலையைக் கொண்ட நாடு. அதிகப்படியான வெப்பம், அதிகப்படியான உள்ளிட்ட கால நிலை மாற்றங்களால் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். ஒரு காலத்தில் சீரான பருவ சுழற்சி இருந்ததால் அந்தந்த காலத்திற்கு ஏற்றார் போல் பயிர்களை பயிரிட்டு நல்ல லாபமும் பெற்று வந்த விவசாயிகள், இப்போதெல்லாலம் சீரற்ற பருவ நிலைகளால் பெரிய அளவில் நட்டத்தை சந்தித்து வருகிறார்கள்.
மிகவும், அதிகப்படியான வெப்பத்தால் வறட்சி, அதிகப்படியான மழையால் வெள்ளம் என எதிரெதிர் பருவநிலை ஏற்பட்டு விவசாயம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவின் பாரம்பரிய விவசாயமான நெல் மற்றும் கோதுமை உற்பத்தி தான் மிகப்பெரிய அளவில் நட்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பீகாரில் விவசாயிகள் தற்போது காய்கறி விவசாயத்திற்கு மாறி, அதில் குறிப்பிட்ட அளவு லாபமும் ஈட்டி வருகிறார்கள்.
காலமாற்றத்திற்கு ஏற்றார் போல விவசாயத்தில் தற்போது நவீன தொழில்நுட்பம் பயன்படுத்த வேண்டியது கட்டாயமாகியுள்ளது. அதன்படி இந்திய விவசாயிகள் நவீன தொழில்நுட்பக் கருவிகளையும் பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி நவீன கால காய்கறி விவசாயத்திற்கு மாறியுள்ளனர் பீகார் மாநிலம் லக்கிம்பூரைச் சேர்ந்த விவசாயிகள். குறிப்பாக பாரம்பரிய நெல் மற்றும் கோதுமை வேளாண்மையில் ஈடுபட்டு தொடர் நட்டத்தை சந்தித்து வந்த விவசாயிகள் இப்போது காய்கறி விவசாயத்திற்கு மாறி வருகிறார்கள்.
பீகார் மாநிலத்தின் பஹ்ரியா, பிபாரியா, சூர்யகார்க், ஹால்சி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் மிகவும் குறுகிய பரப்பளவில் நெல், கோதுமை பயிரிடுகிறார்கள். மேலும், நல்ல லாபம் தரும் எளிமையான காய்கறி வேளாண்மையில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதன் மூலம் போதுமான வருவாயும் கிடைப்பதால் விவசாயிகள் காய்கறி விவசாயத்திற்கு மாறி வருகிறார்கள்.
நிறைய செலவு செய்து, அதிகப்படியான உழைப்பையும் கொடுத்தாலும் நெல் மற்றும் கோதுமை விவசாயத்தில் போதிய அளவு மகசூல் கிடைப்பதில்லை என்பதால் குறைந்த செலவில், குறைந்த உழைப்பில் நல்ல லாபம் கிடைக்கும் காய்கறி விவசாயத்திற்கு மாறி வருவதாக கூறுகிறார்கள் விவசாயிகள். முதலில் சிறிய பரப்பளவில் காய்கறி விவசாயம் செய்து வந்தவர்கள் அதில் நல்ல லாபம் கிடைப்பதால் இப்போது பெரிய அளவில் காய்கறி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காய்கறி விவசாயத்தில் நல்ல லாபம் கிடைப்பதால் தங்கள் குழந்தைகள் நல்ல பள்ளிக்கு செல்வதாகவும், தங்களால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ முடிவதாகவும் கூறுகிறார் நவீன காய்கறி விவசாயி பாப்லு மஹோட்டா. இதைப் பார்த்த அருகில் உள்ள கிராம விவசாயிகளும் காய்கறி வேளாண்மைக்கு மாறி வருகிறார்கள். தங்கள் நிலங்களில் விளையம் பச்சை காய்கறிகளை பொதுமக்கள் நேரடியாக வந்து அவர்களே நல்ல விலைக்கு வாங்கிச் செல்வதால் அலைச்சல் இல்லாத லாபம் கிடைப்பதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.