நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக வீடு வாங்குவது அல்லது கட்டுவது என்பது மிகவும் முக்கியமான கனவு. இந்த கனவை நிறைவேற்றி கொள்ள வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கடன்களை வழங்குகின்றன. வீட்டு கடன் என்பது கடன் வாங்குபவர்களுக்கான நீண்ட கால நிதி பொறுப்பாக அமைகிறது. மேலும் வீட்டு கடன் என்பது நீண்ட கால EMI மற்றும் பெரிய கடன் தொகையை உள்ளடக்கியதாக இருக்கிறது. வீட்டு கடனை பெற முயற்சிக்கும் ஒருவர் விண்ணப்பிக்கும் போது செய்யும் சிறிய தவறு கூட வீட்டு கடன் கிடைப்பதற்கான வாய்ப்பை வெகுவாக குறைக்கலாம். எனவே வீட்டு கடன் வாங்கும் போது சரியான முறையில் விண்ணப்பிக்கிறோமா மற்றும் போதுமான அளவு திட்டமிடுகிறோமா என்பது முக்கியம். வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் போது தவிர்க்க வேண்டிய சில தவறுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.
கிரெடிட் ஸ்கோரை செக் செய்யாமல் விட கூடாது: கடன் வழங்குநர்கள் வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும், விண்ணப்பதாரரின் கடன் தகுதியை மதிப்பிட முக்கிய ஒன்றாக குறிப்பிட்ட நபரின் கிரெடிட் ஸ்கோர் எப்படி இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்கிறார்கள். . 750 மற்றும் அதற்கும் மேல் கிரெடிட் ஸ்கோர் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு வீட்டு கடனுக்கான ஒப்புதலும், அந்த கடனுக்கு குறைந்த வட்டி விகிதமும் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இதை மனதில் கொண்டு கடனுக்கு விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டை சீரான இடைவெளியில் பெற வேண்டும். இது தேவைப்பட்டால் தங்களின் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க விண்ணப்பதாரர்களுக்கு உதவும்.
போதுமான டவுன் பேமென்ட்டை தயார் செய்யாமல் விடுவது: வாங்க உள்ள சொத்து மதிப்பில் 75 - 90% மட்டுமே ஒருவரால் வீட்டு கடன் பெற முடியும். மீதமுள்ள தொகையை முன்பணமாக செலுத்த வேண்டும். எனவே வீட்டு கடனுக்கு விண்ணப்பிக்கும் ஒருவர் வாங்க உள்ள சொத்து மதிப்பில் 10% - 20% அளவிற்கான முன்பணத்தை தயார் செய்து கொள்ள வேண்டும். ஆனால் தங்களது அவசர நிதியில் ஒருவர் இதற்காக கை வைக்க கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மொத்த கடன் தொகையை குறைக்க மற்றும் வீட்டு கடனுக்கான சிறந்த ஒப்பந்தத்தை பெற முடிந்தவரை அதிக முன்பணம் செலுத்த நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஒப்பிட்டு பார்க்காமல் கடன் வாங்க முயற்சிப்பது : விண்ணப்பதாரரின் கிரெடிட் ப்ரொஃபைலை பொறுத்து, கடன் வழங்குநர்கள் வட்டி விகிதம், ப்ராசஸிங் சார்ஜஸ், ரீபேமென்ட் பீரியட், கடன் தொகை மற்றும் LTV விகிதம் ஆகியவை மாறுபடும். எனவே ஒரு குறிப்பிட்ட கடன் வழங்குநரிடம் நீங்கள் வீட்டு கடன் பெற திட்டமிடும் முன், முடிந்தவரை பல கடன் வழங்குநர்கள் அளிக்கும் வீட்டுக் கடன் மீதான சலுகைகளை எப்போதும் ஒப்பிட்டு பார்த்து முடிவு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் ஏற்கனவே உள்ள நுகர்வோர் உறவை (consumer relationship) கொண்ட வங்கிகள் மற்றும் NBFC-க்களை அணுகுவதன் மூலம் இதற்கான முயற்சிகளை தொடங்க வேண்டும். ஆன்லைன் நிதி சந்தைகள் மூலம் பிற அம்சங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
EMI-ஐ மிகைப்படுத்தி மதிப்பிடுதல்: வீட்டுக் கடன் EMI-களை 20 வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக ஒருவர் செலுத்த வேண்டியிருக்கலாம். எனவே, ஒருவர் செலுத்த கூடிய சமமான மாதாந்திர தவணைகளின் அளவைக் கணக்கிடுவது மிக முக்கியம். EMI ஒருவரது மொத்த வருமானத்தில் 40 சதவீதத்திற்கு மேல் இருக்க கூடாது என்பது நிபுணர்களின் அறிவுரை. எனவே ஒருவர் தனக்கான உரிய EMI-ஐக் கணக்கிட ஹோம் லோன் EMI கால்குலேட்டரை பயன்படுத்தலாம்.
ஸ்டாக்ஸ் வாங்குவது போலில்லை: பங்குகளில் முதலீடு செய்வது போல் இதிலும் சரியான நேரத்திற்காக காத்திருந்து முடிவெடுப்பது சரியான யோசனையாக இருக்கிறது. வட்டி விகிதங்கள் குறையும் வரை ஒருவர் காத்திருந்தால், அவருக்கு ஏற்ற ஒரு சொத்தை வாங்குவதை இழக்க நேரிடும். மறுபுறம் வட்டி விகிதங்கள் குறைவாக இருப்பதால், போதுமான ஏற்பாடு இல்லாமல் ஒரு சொத்தை வாங்க அவசரப்படுவது முட்டாள்தனமாகவும் இருக்கலாம். எனவே ஒரு வீட்டை வாங்குவது நடைமுறையில் உள்ள வட்டி விகிதங்களைச் சாராமல் இருக்க வேண்டும்.