80ஸ் கிட்ஸின் கனவு வாகனமாக திகழ்ந்த யமஹா ஆர்.எக்ஸ். 100 பைக், மீண்டும் புதுப்பொலிவுடன் சந்தைக்கு வர உள்ளது. வீட்டில் சைக்கிள் இருந்தாலே பெரிய விஷயமாக இருந்த 1980களில் பணக்காரர்களின் அடையாளமாக பார்க்கப்பட்டவை பைக்குகள். அதில் பல பணக்காரர்கள் கவுரமாக கருதிய மோட்டார் சைக்கிள்கள் என்றால் ராயல் எல்ஃபீல்டு புல்லட் மற்றும் ராஜ்தூத்...அவற்றுடன் விற்பனை செய்யப்பட்ட இண்ட் சுசூகி, ஹோண்டா சிடி 100, கவாசகி கேபி 100 ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக களமிறக்கப்பட்டதுதான் யமஹா நிறுவனத்தின் ஆர்.எக்ஸ். 100..
ஜப்பான் நாட்டின் யமஹா நிறுவனத்தை இந்தியாவில் ஆழமாக கால் ஊன்ற செய்ததில், RX100 மாடலுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. ஆரம்ப காலகட்டத்தில் உதிரி பாகங்களை இறக்குமதி செய்து, இந்தியாவில் ஒருங்கிணைத்து RX100 மாடலை விற்று வந்தது யமஹா..இந்த மாடலுக்கு இந்தியர்களிடையே இருந்த வரவேற்பை பார்த்து, இங்கேயே ஆலை அமைத்து உற்பத்தியைத் தொடங்கியது அந்த நிறுவனம்..
ஒரிஜினல் யமஹா ஆர்.எக்ஸ். 100 மாடலில் 98 சிசி, 11 ஹெச்.பி. பவருடன் கூடிய 2 ஸ்டிரோக் எஞ்சின் ஆகியவை முக்கிய சிறப்பம்சங்கள். மைலேஜ் 40 கிலோ மீட்டர் தான் என்றாலும், சூப்பர் பாஸ்ட் வேகம், காதை கிழிக்கும் சப்தம் போன்றவையே அப்போதைய இளைஞர்களின் ஈர்ப்புக்கு முக்கிய காரணம்.1990களில் விற்பனை நிறுத்தப்பட்டாலும், இளைஞர்களை இன்றளவும் சுண்டி இழுக்கிறது யமஹா ஆர்.எக்ஸ். 100. இதனாலேயே, தற்போது நல்ல பராமரிப்பில் இருக்கும் யமஹா ஆர்.எக்ஸ். 100 பைக்கின் விலை, தற்போது பழைய மோட்டார் வாகனச் சந்தையில் புது வாகனத்திற்கு இணையாக இருக்கிறது...
பொதுவாக எந்த ஒரு வாகனத்தையும், வாங்கி மறுநாளே விற்றாலும் பாதி விலைக்குத்தான் போகும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால், 1990களில் சுமார் 20 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட யமஹா ஆர்.எக்ஸ்.100 வாகனத்தின் விலை பழைய வாகனச் சந்தையிலேயே தற்போது 50 ஆயிரம் ரூபாய்.. இன்னும் சொல்லப் போனால், பல லட்சம் ரூபாய் செலவு செய்து, ஒரு விண்டேஜ் வாகனமாக ஆர்.எக்ஸ். 100 பைக்கை இன்றும் பயன்படுத்தி வருகிறார்கள் சிலர்...
BMW, KTM, டுகாடி என இன்று பல பைக்குகள்.. ஏன் யமஹா நிறுவனமே பல புதுமையான இருசக்கர வாகனங்களை சந்தைப்படுத்தியிருந்தாலும், ஆர்.எக்ஸ். 100 வாகனத்தின் மீதான ஈர்ப்பு குறையவில்லை பலருக்கு. இதை சரியாக புரிந்து கொண்ட யமஹா நிறுவனம், ஆர்.எக்ஸ்.100 மாடலை மீண்டும் இந்திய சந்தைக்கு கொண்டு வர விரும்புவதாக கூறியிருப்பதுதான் தற்போது ஹைலைட். தற்போது அமலில் இருக்கும் புகை விதிகள் காரணமாக 2 ஸ்டிரோக் எஞ்சின் இல்லாமல், பி.எஸ். 6 தரத்தில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது யமஹா..
எடுத்தவுடன் ஆர்.எக்ஸ். 100 பெயரில் வேறொரு மாடலை அறிமுகம் செய்து விட முடியாது என்பதால், 2026ஆம் ஆண்டுக்குப் பிறகே இந்திய சந்தைக்கு வர இருக்கிறது யமஹா ஆர்.எக்ஸ். 100..அதுவரை, யமஹா ஆர்.எக்ஸ். 100 காதலர்கள் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை... காத்திருப்பது காதலர்களுக்கு எப்போதும் சுகம்தானே... காத்திருக்கலாம்...