மனித இனத்தின் நாகரீகமே சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டு தான் மூலமாக தான் வளர்ச்சி அடைந்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் சைக்கிள் முதல் வானில் பறக்கும் விமானம் வரை அனைத்திற்குமே சக்கரம் முக்கியமானதாக இருக்கிறது. ஒரு வாகனத்தின் மிக முக்கியமான பாகங்களில் ஒன்றாக உள்ள டயர்களை நாம் அடிக்கடி அலட்சியம் செய்கிறோம்.சக்கரங்கள் ஒரு வாகனத்தின் கால்கள் மற்றும் டயர்கள் அவற்றை சேதத்திலிருந்து காப்பாற்றும். டயர்களை கவனிப்பது என்பது, மற்ற பாகங்களை கவனித்துக்கொள்வது போலவே முக்கியமானது.
1. டயர் தேய்மானம்: பார்த்தவுடனே சிலர் காரின் டயர் தேய்மானத்தை கண்டறிந்து விட முடியும். ஆனால், புதிய கார்களில் சிலவேளை, பட்டன்கள் அதிகம் தேய்ந்து போயிருக்காது. ஆனால், கைகளை வைத்து தேய்க்கும்போது தோசைக்கல் போல வழுவழுப்பாக இருக்கும். 1/17 அங்குலத்திற்கு மேல் தேய்மானம் வந்ததுமே கார் டயர்களை மாற்றுவது நல்லது. டயர் பட்டன்கள் போதுமான அளவு ஆழமாக உள்ளதா அல்லது டயர்கள் மாற்றப்பட வேண்டுமா என்பதை அறிய ஒரு ரூபாய் நாணயத்தை டயருக்கு இடையே உள்ள கோடுகளுக்கு இடையே வைத்து பார்க்கலாம். அதன் அளவை பொறுத்து டயரை மாற்ற வேண்டுமா? வேண்டாமா? என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
2. ஒழுங்கற்ற டிரெட் வியர்: டயர்கள் ஒழுங்காக சுழலாமல் இருந்தாலும் தேய்மானம் அதிகரிக்கலாம். ஒழுங்கற்ற டயர் பட்டன்கள் தேய்மானத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றொரு காரணம், தேய்ந்துபோன சஸ்பென்ஷன் பாகங்கள் மற்றும் காசை கணக்கு பார்த்து நீண்ட காலத்திற்கு பழைய டயர்களைப் பயன்படுத்துதல் போன்றவையும் காரணமாக இருக்கலாம். இதனால் ஸ்டீயரிங் சிஸ்டத்தின், திருப்புதல் திறனை அளிக்கும் உதிரிபாகங்கள் மற்றும் சஸ்பென்ஷன் சிஸ்டத்திற்கும் பாதிப்பு ஏற்படலாம்.
3. டயர்களின் வயது: உங்கள் காரை நீங்கள் எவ்வளவு தூரம் ஓட்டினீர்கள் என்பதை விட டயரின் வயதைப் பொறுத்தே அதன் தரம் நிர்ணயிக்கப்படும். சராசரியாக நல்ல டயர்களை 6 முதல் 7 ஆண்டுகள் வரை மட்டுமே பயன்படுத்த முடியும். உங்கள் டயர்கள் பார்க்க புதிது போல் தோன்றினாலும், அதில் உள்ள பட்டன்கள் தேய்மானம் அடையாமல் இருந்தாலும் 6 முதல் 7 ஆண்டுகளுக்குப் பிறகு டயர்களை மாற்றுவது நல்லது.
4. விரிசல்: நீங்கள் முதலில் பழைய டயர்களை வாங்காத வரை, 6-7 வருட காலத்திற்குள் டயர்களில் வெடிப்பு என்பது ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் டயர் ரப்பர் பழையதாக ஆக, அது உடைந்து சிதையத் தொடங்குகிறது. அது விரிசலாக மாறுகிறது. இத்தகைய டயர்களுடன் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் போது, திடீரென கிழிந்து போக வாய்ப்புள்ளது. இதனால் விபத்து ஏற்பட்டு வருந்துவதை விட விரிசல் உள்ள டயரை மாற்றிவிடுவது பாதுகாப்பானது.
5. டயர் உப்புதல்/ வீக்கமடைவது: டயரில் ஏதாவது ஒரு பகுதி திடீரென வீக்கமாக தோன்றினால், அதன் உட்புறம் அல்லது கட்டமைப்பில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறியாகும். இது காரை திடீரென வேகமாக ஒரு பள்ளத்தில் இறக்கியதால் கூட ஏற்பட்டிருக்கலாம் அல்லது வாகனம் ஓட்டும்போது சாலை தடுப்புகள் மீது மோதியதன் காரணமாகவும் இருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும் இத்தகைய டயருடன் காரை ஓட்டுவது மிகவும் ஆபத்தானது, ஏனெனில் டயரின் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறாக இருந்தால் கடும் விபத்துக்குள்ளாக நேரிடும்.