உலகின் மிக வேகமாக வளரும் வாகன சந்தையாக இந்தியா உள்ளது. அதிலும் கார் உற்பத்தியில் உலகின் பல முன்னணி நாடுகளோடு போட்டி போடும் அளவிற்கு இந்திய கார் உற்பத்தி வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் தான் உலகின் பல பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் தங்கள் உற்பத்தி மையங்களை திறந்து வருகிறார்கள். புதிய மற்றும் அட்வான்ஸ்ட் டெக்னாலஜியுடன் வாடிக்கையாளர்கள் விரும்புவதே இந்த வளர்ச்சிக்கு காரணம். அந்த வகையில் தங்கள் வாடிக்கையாளர்களை கவர பல முன்னனி நிறுவனங்களும் இந்தியாவில் தங்களது புதிய புதிய மாடல்களை அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறார்கள். அதன் வரிசையில் இன்னும் பல புதிய கார்கள் அறிமுகமாக உள்ளன. அந்த கார்கள் விபரங்கள் இதோ உங்களுக்காக…
டாடா சஃபாரி : ஒரு காலத்தில் இந்திய சாலைகளில மிகப் பிரம்மாண்டமாக வலம் வந்த கார்தான் டாடா சஃபாரி. சிறிது காலம் டாடா சஃபாரிக்கு போதாத காலம் போல. அவ்வளவு பெரிதாக எடுபடவில்லை. அதனால் தான் டாடா சஃபாரியில் பல மாற்றங்களை செய்து மீண்டும் களமிறக்கி வருகிறது டாடா நிறுவனம். அந்த வகையில் இன்னும் பல அப்டேட்டுகளுடன் சந்தைக்கு வர இருக்கிறது புதிய டாடா சஃபாரி. புதிய சஃபாரியின் முன்புறத் தோற்றமே அசத்தலாக இருக்கிறது. டாடா ஹாரியர் இவி காரைப் போலவே பானட் முழுவதும் லைட் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்லிம்மான அலாய் வீல்கள், எல்இடி டெயில் லேம்ப், டு ஸ்போன் ஸ்டியரிங் வீல், அசத்தலான உட்புறம், நவீன டேஸ்போர்டு என பல்வேறு மாற்றங்களுடன் தயாராகி வருகிறது புதிய சஃபாரி. இது பெட்ரோல் மற்றும் டீசல் என இரணடு வேரியண்டுகளில் தயாராகி வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது.
ஹூண்டாய் எக்ஸ்டெர் : புதிய கார்களை அறிமுகம் செய்வதில் ஹூண்டாயும் சளைத்ததல்ல. அந்த நிறுவனமும் புதிய புதிய மாடல்களில் கார்களை அறிமுகம் செய்தபடி தான் இருக்கிறது. அதன் அடுத்த மாடலும் அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. காம்பாக்ட் எஸ்யுவி ரக காராக அறிமுகமாக உள்ள எக்ஸ்டெர். எக்ஸ்டெர் இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் எட்டாவது எஸ்யுவி காராகும். எக்ஸ்டெர் டாடா பஞ்ச், மாருதி இக்னிஸ் உள்ளிட்ட கார்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தயாராகி வருகிறது. இந்த புதிய கார் இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வந்து விடும் என்றும், மே மாதம் இதற்கான புக்கிங் தொடங்கிவிடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறு முதல் எடடு லட்சம் ரூபாயாக இதன் விலை இருக்கும் என்றும், பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாகவும் ஹூண்டாய் நிறுவனம் கூறியுள்ளது.
எம்ஜி காமெட் இவி : இந்தியாவிற்குள் கால் பதித்த சில ஆண்டுகளிலேயே குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்த சில நிறுவனங்களில் எம்ஜி நிறுவனமும் ஒன்று. இந்திய சாலைகள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப கார்களை அறிமுகம் செய்வதால் வெற்றிகரமான சந்தையை பிடித்துள்ள எம்ஜி. அதனால் புதிய புதிய மாடல்களை தொடர்நது அறிமுகம் செய்து வருகிறது அந்த நிறுவனம். அதன் தொடர்ச்சியாக இந்திய சந்தையில் காமெட் என்ற பெயரில் தனது அடுத்த காரை எலெக்ட்ரிக் காராக அறிமுகம் செய்ய உள்ளது எம்ஜி நிறுவனம். ஜனவரியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே காமெட்டை காட்சிப்படுத்தியிருந்தது எம்ஜி நிறுவனம். அப்போதிருந்தே அதன் எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியது. 45 HP பவர் மோட்டாருடன் வர உ்ளள இந்தக் காரின் விலை 10 முதல் 15 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மாருதி சுசுகி ஜிம்னி : பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜிம்னி கார் ஜனவரி கார் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட போதே புக்கிங் தொடங்கிவிட்டது. இதையடுத்து தற்போது வரை 18 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. 5 கதவுகள் கொண்ட எஸ்யுவி ரக காராக மாருதியின் குருகிராம் தொழிற்சாலையில் இதன் உற்பத்தி தொடங்கிவிட்டது. தேவை அதிகமாக இருப்பதால் ஆண்டிற்கு 1 லட்சம் ஜிம்னி கார்களை தயாரிக்க மாருதி சுசுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜீட்டா, ஆல்பா என இரண்டு வேரியண்டுகளில் ஜிம்னி கார் கிடைக்கும்.
சிட்ரியோன் சி3 ஏர்கிராஸ் : புதிய கார்களின் அறிமுகத்தில் முதலில் அறிமுகமாக உள்ளது சிட்ரியோன சி3 தான். ஆம் இந்த மாதம் 27 ஆம் தேதி இந்தக் கார் அறிமுகமாக உள்ளது. இந்தியாவில் இரண்டாவதாக தயாரிக்கப்பட்டுள்ள சிட்ரியோன் நிறுவனத்தின் கார் இது. 5 மற்றும் 7 இருக்கைகள் கொண்ட காம்பாக்ட் எஸ்யுவி காராக வெளிவர இருக்கிறது சிட்ரியோன் சி3 கார். பெட்ரோல் எஞ்சினுடன் வெளிவர உள்ள இந்தக் காரில் அதி நவீன தொழில்நுட்பங்கள் பயனபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரும் காலத்தில் இதே வேரியண்டை எலக்ட்ரிக் காராக தயாரிக்கும் திட்டத்திலும் இருக்கிறதாம் சிட்ரியோன் நிறுவனம்.