டிரிம்ப் டைகர் 1200 பைக் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் இதன் ஷோரூம் விலை ரூ.19.19 லட்சம் ஆகும். சாகச பயணங்களுக்கான மற்றும் விலை உயர்ந்த பைக் ரகங்களான பிஎம்டபிள்யூ ஜிஎஸ் 1250, டுக்காட்டி மல்டிஸ்ரதா வி4 மற்றும் ஹோண்டா ஆப்ரிக்கா போன்ற பைக்குகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில், டிரிம்ப் பைக்கில் எண்ணற்ற மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் டிரிம்ப் 1200 பைக் என்பது கேடிஎம் 1290 பைக்குடன் போட்டி போடுகிறது. இதே ரகத்தில் சுஸுகி வி ஸ்டிராம் 1050, கவாஸகி வெர்சிஸ் 1000, எமஹா எக்ஸ்டி1200இசட் சூப்பர் போன்ற பைக்குகளும் போட்டியில் இருக்கின்றன.
நிறைய மாற்றங்களுடன் டைகர் 1200
தற்போது வெளியிடப்பட்டுள்ள டைகர் 1200 வெர்சனில், முந்தைய வெர்சனைக் காட்டிலும் நிறைய மாற்றங்கள் மற்றும் அப்கிரேடு செய்யப்பட்டுள்ளன. இன்னும், சொல்லப்போனால் இது முழுவதுமாக புதிய மாடல் என்றே சொல்லலாம். டிரிம்ப் டைகர் 1200 மாடலில் என்ன மாற்றங்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
லீனர் டிசைன்
முதலில் நாம் பார்க்க கூடிய விஷயம் டிரிம்ப் டைகர் 1200 பைக் லீனான டிசைன் கொண்டது என்பது தான். பைக்கில் செய்யப்பட்டுள்ள எடை குறைப்பே அதை உறுதி செய்வதாக உள்ளது. முந்தைய மாடலைக் காட்டிலும் இது மிகவும் சிலிம்மான பைக் ஆகும். இதற்கு முன்பு இருந்த டூயல் ஹெட் லேம்ப் செட்டப் என்பது தற்போதைக்கு ஒற்றை எல்ஈடி செட்டப்பாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிய டைகர் பைக் மாடலில், இதற்கு முந்தைய இதன் சின்ன வடிவமாகக் கருதப்படும் டைகர் 900 பைக்கில் இருந்த பல்வேறு அம்சங்கள் இதிலும் இடம்பெற்றுள்ளன.
சாலையிலும், சாலை அல்லாத இடங்களிலும் நல்ல செயல்திறனுடன் செயல்படக் கூடியதாக ஒட்டுமொத்த டிசைன் அமைந்துள்ளது. நீங்கள் அமர்ந்து கொண்டு இயக்கினாலும் அல்லது நின்று கொண்டே இயக்கினாலும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும். முந்தைய மாடல்களில் உள்ள வெற்றிகரமான பல அம்சங்கள் இந்த மாடலிலும் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஷேஃப்ட் டிரைவ், டிரிப்பிள் சிலிண்டர் லே அவுட் போன்றவை சிறப்பான அனுபவத்தை தருகின்றன.
லைட் வெயில் சேசிஸ்
பைக்கின் ஒட்டுமொத்த டிசைன் ஸ்லிம்மாக இருப்பதற்கு அதன் சேசிஸ் தான் காரணமாகும். இது மிக, மிக குறைவான எடை கொண்டதாகும். மொத்தத்தில் டிரிம்ப் டைகர் 1200 ஜிடி ப்ரோ பைக் என்பது 245 கிலோ கொண்டதாக இருக்கிறது. அதுவே ரேலி ப்ரோ பைக் 249 கிலோ கொண்டதாகவும், ஜிடி எக்ஸ்ப்ளோரர் மற்றும் ரேலி எக்ஸ்ப்ளோரர் ஆகியவை 255 கிலோ மற்றும் 261 கிலோ கொண்டதாகவும் இருக்கின்றன.