கோடை காலம் தொடங்கிவிட்டது. கோடையின் வெப்பத்தில் சிக்காமல் இருப்பதற்கு நாம் நாடுவது ஏசியைத் தான். அதிலும் காரில் பயணம் செய்யும் போது ஏசி இல்லை என்றால் நம் பாடு திண்டாட்டம் தான். கோடை வெயில் உக்ரம் அடைவதற்குள் உங்கள் காரில் உள்ள ஏசியின் செயல்பாடு எப்படியிருக்கிறது? ரெஃப்ரேஜன் லெவல் சரியாக இருக்கிறதா, ஏர் ஃபில்டர் எப்படி உள்ளது? இப்படி அனைத்தையும் சரிபார்த்துவிட்டு ஏதேனும் குறையிருந்தால் அதை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.
பொதுவாகவே குறிப்பிட்ட கிலோமீட்டர் ஓட்டத்திற்குப் பிறகு நமது கார் ஏசியை நல்ல மெக்கானிக் மூலம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நமது கார் ஏசி நீண்ட காலம் பயன்படும். ஏசியில் உள்ள முக்கியமான ஒன்று ஏர் ஃபில்டர். ஃபில்டர் அழுக்கு படியாமல் பாதுகாப்பது மிக முக்கியம். அழுக்கு படிந்த ஏசி ஏர் ஃபில்டர், காரின் கேபினுக்கு உள்ளே மோசமான காற்றைதான் வழங்கும். எனவே நீங்கள் மோசமான காற்றை சுவாசிக்க நேரிடும் என்பதுடன், இது காரின் மைலேஜையும் குறைத்து விடும்.
இந்த பிரச்னைகள் உங்களுக்கு ஏற்படாமல் இருக்க வேண்டுமென்றால், ஏசி ஏர் ஃபில்டரை அவ்வப்போது சுத்தம் செய்து விடுங்கள். எஞ்சினை ஸ்டார்ட் செய்த பிறகு மட்டுமே ஏசி-யை 'ஆன்' செய்ய வேண்டும். அதேபோல் ஏசி-யை 'ஆஃப்' செய்த பிறகு எஞ்சினை 'ஆஃப்' செய்வதையும் பழக்கமாக்கி கொள்ளுங்கள். மேலும் கார் நீண்ட நேரம் சூரிய வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தால், உடனடியாக ஏசி-யை 'ஆன்' செய்ய வேண்டாம். அனைத்து கதவுகளையும் திறந்து வைத்து, உள்ளே இருக்கும் சூடான காற்றை முதலில் வெளியேற்றுங்கள். அதன் பிறகு ஏசி-யை 'ஆன்' செய்யுங்கள்.