சிம்பிள் எனர்ஜி நிறுவனம் சார்பில் அறிமுகம் செய்யப்படுகின்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஒரு லட்சம் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘சிம்பிள் ஒன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டருக்கு வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு காணப்படுகிறது. இது மட்டுமல்லாமல், சுமார் 20 மில்லியன் டாலர் அளவுக்கான முதலீடுகளைக் கொண்டு உற்பத்தி நடவடிக்கையை படிப்படியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிம்பிள் ஒன் ஸ்கூட்டருக்கான தேவை மற்றும் விநியோகத்திற்கு இடையே உள்ள பற்றாக்குறையை குறைக்கும் வகையில் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதுகுறித்து சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி சுஹாஸ் ராஜ்குமார் கூறுகையில், “இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு மிகப் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்வதில் முக்கிய நிறுவனமாக நாங்கள் உருவெடுப்போம் என்று நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்நிலையில், எங்களுக்கு அதிகப்படியான முன்பதிவுகள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு தகுந்தாற்போல உற்பத்தியை பெருக்குவதற்கான முதலீடுகளை உரிய நேரத்தில் திரட்டி வருகிறோம்.
சிம்பிள் எனர்ஜி நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில் நாடெங்கிலும் இருந்து முதலீட்டாளர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, தைரோகேர் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர், மருத்துவர் ஆரோக்கியசாமி வேலுமணி, கோகல்தாஸ் குழுமத்தின் நிறுவனர் அஸ்வின் ஹிந்துஜா, நாஷ் தொழில்துறை உரிமையாளர் சஞ்சய் மற்றும் சந்தீப் வாதவா, லாம்ப்டா டெஸ்ட் நிறுவனத்தின் முதன்மை உத்திசார் பிரிவு அதிகாரி ஸ்ரீபிரியா கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற பிரதான தொழிலதிபதிகள் ஆவர்.
தமிழகத்தில் உற்பத்தி மையம் : முன்னதாக, தமிழகத்தின் சூளகிரி பகுதியில் சுமார் ரூ.100 கோடி முதலீட்டில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி மையத்தை சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அண்மையில் தொடங்கியது. இந்த நிறுவனம் சார்பில் அடுத்தடுத்து எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ள நிலையில், உற்பத்தி மற்றும் முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சுஹாஸ் ராஜ்குமார் மேலும் கூறுகையில், “எங்கள் பிராண்ட் மீது நம்பிக்கை கொண்டுள்ள மற்றும் டெலிவரிக்கு பொறுமையாக காத்துக் கொண்டிருக்கின்ற அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். வாகன தயாரிப்பு நடவடிக்கைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் இந்தியாவின் சிறப்புத்தரம் வாய்ந்த, ப்ரீமியம் 2 தரம் உடைய சிம்பிள் ஒன் ஸ்கூட்டரை டெலிவரி செய்ய நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்’’ என்று தெரிவித்தார்.