இன்று இளைஞர்கள் பைக் சாகசம் செய்வது, பைக்கிலேயே ஆல் இந்தியா டூர் செல்வது, பைக் பயணத்தை யூ-டியூப்பில் வீடியோவாக பதிவிடுவது போன்ற பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றனர். இதற்காக பல சூப்பர் பைக்குகள் மார்க்கெட்டில் வரிசை கட்டி இறங்கினாலும், அன்று முதல் இன்று வரை இளைஞர் பட்டாளத்தின் கனவு பைக்காக ராயல் என்ஃபீல்டு இருந்து வருகிறது. இதற்கு காரணம் இதனுடைய வரலாறும், காலக்கட்டத்திற்கு ஏற்ப அப்டேட் செய்யப்படுவதும் தான். ஆம், முதலாம் உலகப் போரின் போதில் இருந்தே மோட்டார் சைக்கிள் பிராண்ட் ஒன்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றால் அது ராயல் என்ஃபீல்டு மட்டுமே.
முதலாம் உலகப்போரில் அறிமுகம்: 1914ம் ஆண்டு பல்வேறு நாடுகளும் முதலாம் உலகப்போரில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் ராயல் என்ஃபீல்டு தனது முதல் 2-ஸ்ட்ரோக் பைக்கை அறிமுகப்படுத்தியது. இதில் 770 சிசி வி-ட்வின் 6 ஹெச் பி மோட்டார் பொருத்தப்பட்டது. 1924ம் ஆண்டு அதைவிட வேகமாக 6 புதிய பைக்குகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 351 cc OHV 4-ஸ்ட்ரோக் எஞ்சினுடன் அறிமுகப்படுத்தியது. முதலாம் உலகப்போரில் தொடங்கி தற்போது 21ம் நூற்றாண்டு வரை ராயல் என்ஃபீல்டு பல கட்ட வளர்ச்சிகளையும், சாதனைகளையும் படைத்துள்ளது.
இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு உற்பத்தி: சுதந்திரத்தின் போது இந்தியா - பாகிஸ்தான் என இருநாடுகளாக பிரிக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் எல்லையில் பதற்றம் அதிகம் இருந்ததால் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அப்போது ராணுவ வீரர்கள் எல்லையில் ரோந்து பணிகளை மேற்கொள்ள மோட்டார் சைக்கிள் தேவைப்பட்டது. அப்போது இந்திய ராணுவத்துடன் கரம் கோர்ந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனம் முதற்கட்டமாக 800 யூனிட் 350 மாடல் ராயல் என்ஃபீல்டு பைக்கை தயாரிப்பதற்கான ஆர்டரைப் பெற்றது. அதன் பின்னர் இந்திய சந்தையில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு 350-யின் விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்தது. அதனைத் தொடட்ந்து தண்டர்பேர்ட், கான்டினென்டல் ஜிடி, ஹிமாலயன், கிளாசிக், சமீபத்திய அறிமுகமான ஹண்டர் 350 வரை பல மாடல்களை விற்பனை செய்து வருகிறது.
முதல் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 அறிமுகம்: 2009 ஆம் ஆண்டு ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மற்றும் கிளாசிக் 500 ஆகிய இரண்டு மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. கிளாசிக் 350 சிங்கிள் சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், ட்வின்-ஸ்பார்க், 346 கியூபிக் ஏர்-கூல்டு இன்ஜின் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. 19.1 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வழங்குகிறது.
கிளாசிக் 350 ரீ-எண்ட்ரி: நவீன தோற்றம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக், இரண்டாம் முறையாக 2021ம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. 349 சிசி ஜே-சீரிஸ் சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6,100 ஆர்பிஎம்மில் 20.3 பிஎச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரெட்ரோ கிளாசிக் வடிவமைபுடன் ரவுண்ட் எல்இடி ஹெட்லைட், டெயில் லைட், டியர் ட்ராப் வடிவ 13 லிட்டர் எரிபொருள் டேங்க், ஸ்பிலிட் சீட்கள் ஆகியவையும், முன் மற்றும் பின்பக்க சக்கரத்தில் டிஸ்க் பிரேக் அமைப்பையும் கொண்டுள்ளது.