சாலை விபத்துகளின் எண்ணிக்கை, வாகனங்கள் விபத்து ஆகியவை கணிசமாக அதிகரித்து வருவதால் சாலை பாதுகாப்பு வாரம் என்று ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில், போக்குவரத்து விதிகள் பற்றிய விவரங்கள், பாதுகாப்பு, வாகனங்கள் பரமாரிப்பு, உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கம் வெளியிட்ட தரவின்படி உடல்ரீதியான குறைபாடுகள், இறப்பு மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு முக்கிய காரணமாக இருப்பது, சாலை விபத்துகள் தான் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் நபர்கள் சாலை விபத்துகளால் பாதிக்கப்படுகிறார்கள். எந்த காரணங்களால் சாலை விபத்து ஏற்படுகிறது மற்றும் அதை தவிர்ப்பது எப்படி என்பதை பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
அதிக வேகமாக ஓட்டுவது : ஒவ்வொரு வகையான சாலைக்கும், ஒவ்வொரு வாகனத்திற்கும் எவ்வளவு வேகத்தில் ஓட்ட வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கின்றது. அதைத் தாண்டி அதிவேகமாக வாகனத்தை ஓட்டும்போது சாலை விபத்து நேரிடுகிறது. அரசாங்கம் வெளியிட்ட தரவில் 70 சதவீத சாலை விபத்துகள் அதிவேகமாக வண்டி ஓட்டுவதால் மட்டும் நடக்கிறது என்றும், இதில் 65 சதவீத நபர்கள் இறந்து விடுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
சிக்னலில் நிற்காமல் செல்வது : வேகமான வாகனம் ஓட்டுவதற்கு அடுத்ததாக சிவப்பு விளக்கு சிக்னலில் நிற்காமல் ஓட்டுவது சாலை விபத்து ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகின்றது. போக்குவரத்து நெரிசலில் எந்த விளக்கு எரிந்தால் என்ன அர்த்தம் என்று குழந்தைகளுக்கு கூட தெரியும். இருப்பினும், வேகமாக அல்லது சீக்கிரமாக செல்ல வேண்டும் என்ற முனைப்பில் சிகப்பு விளக்கு எரியும் பொழுது, ஒரு சாலையை வேகமாக ஏதேனும் ஒரு வாகனம் கடந்து செல்லும். அது அந்த சாலையில் இருக்கும் பெரும்பாலான வாகனங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் விபத்துக்கும் காரணமாக அமைகிறது.
மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுவது : மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்று சட்டமே இருக்கிறது. இருப்பினும் நான் கொஞ்சம் தான் மது அருந்தினேன் என்று காரணம் சொல்லி மது அருந்துபவர்கள் வாகனம் ஓட்டும் நிலை இருக்கிறது. குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதால் கணிசமான எண்ணிக்கையில் சாலை விபத்துகள் ஏற்படுகின்றன என்பதை மறக்கவே முடியாது. எந்த வாகனமாக இருந்தாலும் சரி, ஓட்டும் பொழுது முழு கவனமும், உடனடியாக ரியாக்ட் செய்யும் அளவுக்கு விழிப்புடனும் இருக்க வேண்டும். மதுபானம் அருந்தினால் நம்முடைய உணர்வுகள் நம் கட்டுப்பாட்டில் இருக்காது.