இந்தியாவில் பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்கள் இருந்தாலும் மாருதி சுசூகி நிறுவனம் தனக்கென ஒரு தனி மார்க்கெட்டை உருவாக்கி வைத்துள்ளது. ஜப்பானை சேர்ந்த சுசூக்கி மோட்டார் கார்ப்பரேஷனை சேர்ந்த மாருதி சுசூகி நிறுவனம் சமீபத்தில் 2.5 கோடி அளவிலான கார்களை விற்று புதிய மைல் கல்லை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 9 ஆம் தேதி 2023 ஆம் ஆண்டு இந்த சாதனையை செய்ததன் மூலம், இந்தியாவில் மிகப் பெரிய கார் உற்பத்தி நிறுவனமாக தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
மாருதி சுசூகி நிறுவனத்தை பற்றி கூறினால், இந்தியாவில் உள்ள மிகப் பழமையான இன்றும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிறுவனங்களில் முதன்மையானது ஆகும். 1982 ஆம் ஆண்டு மாருதி உத்யோக் நிறுவனத்துடன் சுசூக்கி நிறுவனமானது ஒப்பந்தம் செய்து கொண்டு மாருதி சுசூகி என்ற பெயரில் புதிய கார்களை உற்பத்தி செய்ய துவங்கியது. 1983 ஆம் ஆண்டு மாருதி 800 என்ற தனது முதல் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்தது.
தற்போது வரை இந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 17 மாடல்கள் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. இதை தவிர சமீபத்தில் எஸ்யூவி மாடல்கள் தயாரிப்பதில் இறங்கியுள்ள மாருதி சுசூகி நிறுவனம் தன்னுடைய மார்க்கெட் மிக வலுவாக தக்கவைத்து கொள்ளும் என பலரும் எதிர்பார்க்கின்றனர். இதை தவிர ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி மாடல்களிலும் புதிய கார்கள் தயாரிப்பு முயற்சியில் அந்த நிறுவனம் இறங்கியுள்ளது.
ஹைபிரிட் மற்றும் சிஎன்ஜி மாடல்களை சேர்த்து 21 லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மாருதி சுசூகி தனது தன்னுடைய தரமான, பாதுகாப்பு நிறைந்த, சுற்றுச்சூழலுக்கு நன்மை தரக்கூடிய வகையில் எதிர்காலத்திலும் தற்போது இருப்பதை போலவே கார் உற்பத்தியை செய்து ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என அந்த நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 2012 ஆம் ஆண்டு அந்நிறுவனம் தனது முதல் 1 கோடி விற்பனை என்ற மைல் கல்லை எட்டியது. இதை செய்து முடிக்க அந்த நிறுவனத்திற்கு 30 வருடங்கள் தேவைப்பட்டது. அதன் பிறகு அடுத்த 1 கோடி கார்கள் விற்பனை என்ற இலக்கை வெறும் 7 வருடத்தில் ஜூலை 2019 ஆம் ஆண்டு எட்டியது. அதன் பிறகு தற்போது கூடுதலாக 50 லட்சம் கார்களை விற்பனை செய்ததன் மூலம் 2.5 கோடி விற்பனை என்ற சாதனையை இந்த வருடம் ஜனவரியில் அந்நிறுவனம் எட்டி உள்ளது. இந்த இலக்கை எட்ட மாருதி சுசூக்கி நிறுவனத்திற்கு 3 வருடங்கள் மட்டுமே எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.