பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் கிடு கிடு விலை உயர்வு காரணமாக மாற்று எரிபொருளான சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவால் இயங்கும் எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கான தேவையும் வரவேற்பும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறிய ரக கார்கள் முதல் பெரிய கனரக வாகங்கள் வரை சிஎன்ஜி எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. சிஎன்ஜிக்கு கிடைக்கும் வரவேற்பால் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சிஎன்ஜி வேரியண்ட் வாகனங்கள் தயாரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றன.
ஏற்கனவே கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவின் போதே பிரீஸ்ஸா சிஎன்ஜி அறிமுகம் செய்யப்பட்டது. மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட பிரீஸ்ஸா எஸ்-சிஎன்ஜி இப்போது விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அந்தக் காரின் தொழில்நுட்ப சிறப்பம்சங்கள், விலை உள்ளிட்ட அதிகாரப்பூர்வ விபரங்களை இப்பொது பார்க்கலாம் :
எலெக்ட்ரிக் சன்ரூஃப், அலாய் வீல்கள், 7 அங்குல ஸ்மார்ட் ப்ளே ப்ரோ இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் பிரீஸ்ஸா எஸ்-சிஎன்ஜியில் உள்ளன. மைலேஜையும் இந்த கார் வழங்கும் என மாருதி சுஸுகி தனது அதிகாரப்பூர்வ அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருக்கின்றது. ஒரு கிலோ சிஎன்ஜிக்கு பிரீஸ்ஸா எஸ்-சிஎன்ஜி 25.51 கிமீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
பிரீஸ்ஸா எஸ்-சிஎன்ஜி நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. எல்எக்ஸ்ஐ எஸ்-சிஎன்ஜி (LXi S-CNG), விஎக்ஸ்ஐ எஸ்-சிஎன்ஜி (VXi S-CNG), இசட்எக்ஸ்ஐ எஸ்-சிஎன்ஜி (ZXi S-CNG) மற்றும் இசட்எக்ஸ்ஐ எஸ்-சிஎன்ஜி டூயல் டோன் (ZXi S-CNG Dual Tone) என நான்கு வேரிண்டுகள் தான் அவை. ரூ. 9.14 லட்சம் தொடங்கி ரூ. 12.05 லட்சம் வரையில் இந்த கார்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.
அடுத்த தலைமுறை கே-சீரிஸ் 1.5 லிட்டர் டூயல் ஜெட், டூயல் விவிடி எஞ்ஜின் பிரீஸ்ஸா எஸ்-சிஎன்ஜி காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 64.6 கிலோவாட் பவரை 5,500 ஆர்பிஎம்மிலும், 121.5 என்எம் டார்க்கை 4,200 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே இந்தக் காரில் உள்ளது. இனி மைலேஜைப் பற்றிய கவலையே இல்லாமல் காம்பாக்ட் எஸ்யுவி காரை பயன்படுத்தலாம்.