இந்தியாவில் இருக்கும் பல எஸ்யூவி கார்களுக்கு, குறிப்பாக மஹிந்திராவின் தாருக்கு போட்டியாக இந்திய சந்தையில் மாருதி சுசுகி களமிறக்க இருக்க உள்ள கார் மாடல் ஜிம்னி. ஜனவரி மாதம் நடைபெற்ற வாகன கண்காட்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டதில் இருந்தே, அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்தது. இந்த காருக்கான புக்கிங் தொடங்கிவிட்டது.
இப்போது ஜிம்னி காரின் எஞ்சின் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். 1.5 லிட்டர் நேச்சுரல்லி அஸ்பைரேட்டட் பெட்ரோல் எஞ்சின் இந்த காரில் உள்ளது. இந்த எஞ்ஜின் 103 எச்பி மற்றும் 134 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இத்துடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் ஜிம்னியில் உள்ளன. மேனுவல் டிரான்ஸ்மிஷன் தேர்வு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 16.94 கிமீ மைலேஜையும், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ஒரு லிட்டருக்கு 16.39 கிமீ மைலேஜையும் வழங்கும் திறன் கொண்டது.
மஹிந்திரா தார் எஸ்யூவியைக் காட்டிலும் அதிக மைலேஜ் திறன் இவை ஆகும். இதேபோல், விலையிலும் தாருக்கு டஃப் கொடுக்கும் வகையிலேயே ஜிம்னி இருக்கப் போகின்றது. ரூ. 9.99 லட்சம் என்கிற குறைவான ஆரம்ப விலையிலேயே ஜிம்னி விற்பனைக்கு வர இருக்கின்றது. ஜிம்னியில் பாதுகாப்பு அம்சங்கள் மிக தாராளமாக வழங்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில், 6 ஏர் பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், ஹில் ஹோல்டு அசிஸ்ட், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், பிரேக் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் கேமிரா என எக்கச்சக்க பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
மேலும், 9 அங்குல டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஆட்டோ எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உள்ளிட்ட பிரீமியம் தர அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் இன்ஃபோடெயின்மென்ட் திரை ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய இணைப்பு வசதிக் கொண்டுள்ளது.