ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு ரீதியாக உதவக் கூடிய மேம்பட்ட தொழில்நுட்பம் தான் சுருக்கமாக ADAS என்று அழைக்கப்படுகிறது. வாகனத்தை ஓட்டும்போது, அதை பார்க்கிங் பகுதியில் நிறுத்தும்போது சென்சார் அடிப்படையில் பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்த தொழில்நுட்பம் வழங்குகிறது.சென்சார் மற்றும் கேமராக்களின் துணை கொண்டு, கார் எதன் மீதாவது மோத இருக்கின்ற சூழலில் இது பாதுகாப்பு எச்சரிக்கையை தருகிறது. இந்த தொழில்நுட்பம் கொண்ட விலை குறைவான கார்களை பார்க்கலாம்..
எம்ஜி அஸ்தார் : ADAS தொழில்நுட்பம் கொண்ட மிகக் குறைவான விலையில் விற்பனை ஆகும் கார் இதுதான். இது எஸ்யூவி மாடல் கார் ஆகும். ADAS தொழில்நுட்பம் கொண்ட வேரியண்ட் விலை ரூ.14.68 லட்சம் ஆகும். பிளைண்ட் ஸ்பாட் டிடெக்சன், தடம் மாறுவதற்கான உதவி, ரியர் கிராஸ் டிராஃபிக் அலர்ட் போன்ற ஒத்துழைப்பை இது தருகிறது. இதில் அப்டேட் வெர்சனை நீங்கள் தேர்வு செய்யும்பட்சத்தில் இன்னும் கூடுதலான பாதுகாப்பு அம்சம் கிடைக்கும்.
மஹிந்திரா எஸ்யூவி700 - ஏஎக்ஸ்7 : மஹிந்திரா நிறுவன தயாரிப்புகளில் இந்த ஒரு காரில் மட்டுமே தற்போது ADAS தொழில்நுட்பம் வருகிறது. முன்பக்கம் வாகனம் மோத இருப்பது குறித்த எச்சரிக்கை, அவசர கால பிரேக்கிங் வசதி, அதிக வெளிச்சத்தை எதிர்கொள்வது, போக்குவரத்து அடையாளக் குறியீடுகளை உள்வாங்குவது என பல்வேறு மேம்பட்ட வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. இதன் விலை ரூ.19.44 லட்சம் ஆகும்.
ஹோண்டா சிட்டி இ ஹெச்இவி - இசட் எக்ஸ் : இது ஹைப்ரிட் மாடல் கார் ஆகும். இதன் விலை ரூ.19.89 லட்சம் ஆகும். விபத்து ஏற்படும் வாய்ப்பு உருவாகும் பட்சத்தில் பிரேக் அடிப்பதற்கு ஒத்துழைப்பு, ஒரே தடத்தில் பயணிக்க வழிகாட்டுதல் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. ADAS தொழில்நுட்பம் கொண்ட செடான் வகை கார்களில் இதுதான் விலை குறைவாகும்.
ஹூண்டாய் டக்ஸன் : ஹூண்டாய் நிறுவன கார்களில் முதல் முறையாக ADAS தொழில்நுட்பம் கொண்டது இந்த டக்ஸன் கார் ஆகும். இதில் மிக கூடுதலான பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதற்கு ஏற்றவாறு இதன் விலையும் சற்று அதிகமாக உள்ளது. இதன் விலை ரூ.27.70 லட்சம் ஆகும். பிளைண்ட் ஸ்பாட் வியூ, சரவுண்ட் வியூ மானிட்டர், ஓட்டுநர் அலட்சியமாக இருக்கையில் எச்சரிக்கை செய்வது உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.