ஒவ்வொரு ரயிலின் டிமாண்ட் பேட்டர்னை (demand pattern) தொடர்ந்து ஆய்வு செய்து, ரிசர்வ்டு செய்யப்பட்ட மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் திறன் பயன்பாடு (capacity utilisation) மற்றும் வருவாயை அதிகரிக்க இந்திய ரயில்வே ஐடியல் ட்ரெயின் ப்ரொஃபைலை (Ideal Train Profile) அறிமுகப்படுத்தி உள்ளது.குறிப்பிட்ட ரயிலை பயணிகள் எப்போது அதிகம் பயன்படுத்துகிறார்கள்.! அந்த ரயிலில் டிக்கெட் தேவை எவ்வளவு அதிகரிக்கிறது.! இதையெல்லாம் சம்பந்தப்பட்ட ரயிலின் ஹிஸ்ட்ரியை பார்த்தால் ரயில்வேயால் தெரிந்து கொள்ள முடியும். இருப்பினும், இது துல்லியமான தகவல்களை அதிகாரிகளுக்கு வழங்கவில்லை. எனவே இந்த சிக்கலில் இருந்து விடுபடவே இந்திய ரயில்வே இம்முறை Ideal Train Profile-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட ரயில் டிக்கெட்டுக்கான உண்மையான தேவையை 'கடந்த காலத்துக்கு' போகாமல் அதிகாரிகள் தெரிந்து கொள்ளலாம். இதனால் தங்களின் வருமானம் அதிகரிக்கும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. அதே சமயம், ஒரே நாளில் கூடுதலாக 5,000 பயணிகள் 'உறுதிப்படுத்தப்பட்ட' டிக்கெட்டுகளுடன் (confirmed tickets) பயணம் செய்யலாம் என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.
ஐடியல் ட்ரெயின் ப்ரொஃபைல் என்றால் என்ன.? : ரயில்வேயின் கூற்றுப்படி இது ஒரு சாஃப்ட்வேர் ஆகும், இதன் மூலம் அதிகபட்ச பயணிகளுக்கு டிக்கெட் வழங்க முடியும். இது தொடர்பாக பேசிய ரயில்வே அதிகாரி ஒருவர் டிக்கெட்டுகளுக்கான தேவை என்பது முதல் மற்றும் கடைசி ரயில் நிலையத்தின் அடிப்படையில் மட்டும் மாறாது. மாறாக, இடையில் உள்ள ரயில் நிலையங்கள், நேரம், கிளாஸ் மற்றும் மாற்று ரயில்கள் மற்றும் போக்குவரத்து முறைகள் ஆகியவற்றை பொறுத்தும் மாறுபடும்.
எனவே இந்த முரண்பாட்டை தீர்ப்பதற்கான சிறந்த வழி இடையில் உள்ள ரயில் நிலையங்களில் காணப்படும் தேவையின் அடிப்படையில் மற்றும் வணிக தேவையின்படியும் டிக்கெட்டுகளை வழங்குவதாகும். ஒரு குறிப்பிட்ட ரயில் அல்லது வழித்தடத்தில் வரும் அனைத்து ரயில்களின் பழைய தரவுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் இதுவரை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இப்போது இதனை மேலும் துல்லியமாக்கவே ஐடியல் ட்ரெயின் ப்ரொஃபைல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.
கோபாலகிருஷ்ணன் தலைமையிலான ரயில்வே குழுவினரின் 2 வருட கடின உழைப்பிற்குப் பிறகு இந்த AI அடிப்படையிலான இந்த Ideal Train Profile தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் புக்கிங் சிஸ்டமிற்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகளை எவ்வாறு வழங்குவது என்பதில் இது பெருமளவு உதவுகிறது. கிழக்கு, மத்திய, வடக்கு, தெற்கு, தெற்கு மத்திய, மேற்கு மற்றும் மேற்கு மத்திய ரயில்வே உள்ளிட்ட ஏழு மண்டல ரயில்வேக்களில் இந்த திட்டம் முன்னோடியாக தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய ரயில்வேயில் இதுவரை 200-க்கும் மேற்பட்ட ரயில்களில் இந்த முன்னோடித் திட்டம் முயற்சி செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
விடுமுறைகள், பண்டிகை சீசன்கள் போன்றவற்றின் காரணமாக மாறிவரும் டிக்கெட் டிமாண்டை நிவர்த்தி செய்ய மற்றும் அவ்வப்போது ட்ரெயின் கோட்டாவை (train quota) மறுபரிசீலனை செய்ய இது ரயில்வேக்கு உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த முன்னோடி முயற்சி மூலம் உறுதிப்படுத்தப்பட்ட சீட்கள் பயணிகளுக்கு கிடைப்பது அதிகரிக்கும். இதனால் ரயிலில் பயணிகளின் எண்ணிக்கையை 5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை அதிகரித்து ரயில்வேக்கான வருமானமும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மற்றொரு ரயில்வே அதிகாரி பேசுகையில், வானிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கூட டிக்கெட் தேவை மாறுகிறது. இப்போது புதிய அமைப்பு நடைமுறையில் இருப்பதால் டிக்கெட் தேவைகளை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். Ideal Train Profile மூலம், பல மண்டலங்களில் உள்ள பல ரயில்களின் விவரங்களை ரயில்வே அறிந்து கொள்ளும். சீசன் மற்றும் விடுமுறைக்கு ஏற்ப டிக்கெட் தேவை மாறுபடும் நிலையில் தற்போது துல்லியமான தகவல்கள் கிடைத்துள்ளதால், ரயில்களில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல ரயில்வே துறையால் முடியும். இதனால், ரயில்வேயின் வருவாய் அதிகரிக்கும், அதிக பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட டிக்கெட்களும் கிடைக்கும் என்றார்.