கடந்த சில ஆண்டுகளாக, மிகப்பெரிய ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த தொழில் துறைகளில் ஆட்டோமொபைல் துறையும் ஒன்று. ஆனால் நிதியாண்டு 23 ல் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு இந்தியாவின் பாசஞ்சர் வாகனப் பிரிவு மிகப்பெரிய அளவுக்கு சாதனையை செய்துள்ளது. இதுவரை 36,00,000 கார்கள் விற்பனையாகி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. இதற்கு முன்பு, 2019 நிதியாண்டில் 32,00,000 புதிய கார்கள் பதிவானது. அதையடுத்து, பெருந்தொற்றுக்குப் பிறகு 2023 ல் அந்த சாதனை முறியடிக்கப்பட்டு பட்டுள்ளது. இந்தியாவின் கார்களுக்கான சந்தை கணிசமாக வளர்ந்துள்ளது என்பதை இது குறிக்கிறது.
கடந்த செவ்வாய் கிழமையன்று, ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் அமைப்பு (FADA) வெளியிட்ட தரவின்படி, பேசஞ்சர் வாகனத் துறை ஒவ்வொரு ஆண்டும் 22 சதவிகிதம் வளர்ச்சியை கண்டு வருகிறது என்பதைக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையிலேயே இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையின் வளர்ச்சி, அதிலும் குறிப்பாக பயணிகள் வாகனங்கள் விற்பனை இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பது கொண்டாட்டத்துக்கு உரிய ஒரு விஷயமாகும். ஏனென்றால் கொரோனா பெருந்தொற்று காலத்தில் அடுத்தடுத்து பலமுறை முழு ஊரடங்கு, பகுதியளவு ஊரடங்கு என்று இருந்த கால கட்டங்களில் ஆட்டோமொபைல் துறை பெரிய அளவில் சரிந்தது.
அதுமட்டுமில்லாமல் பெருந்தொற்று முடிந்த பிறகும் உதிரி பாகங்கள், செமிகண்டக்டர் ஷார்ட்டேஜ் உள்ளிட்ட பல விதமான பிரச்சனைகளை சவால்களையும் ஆட்டோமொபைல் துறை எதிர்கொண்டது. தற்பொழுது கூட உதிரி பாகங்கள் போதிய அளவு இருப்பு இல்லை மற்றும் உடனடியாக கிடைப்பதில்லை, உள்ளிட்ட குறைகள் மற்றும் புகார்கள் இருந்தாலுமே இந்தியாவில் கார்களுக்கான மார்க்கெட் வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு பின்வரும் ஐந்து முக்கிய விஷயங்கள் காரணமாக கூறப்படுகின்றது.
புதிது புதிதாக பல விதமான கார்கள் அறிமுகம் : ஊரடங்கு காலத்தில் புதிய கார்களை அறிமுகம் செய்வ முடியாமல் பல உற்பத்தியாளர்களும் சவால்களை எதிர்கொண்டு வந்தனர். அதாவது புதிய கார்கள் பைப்லைனில் இருந்தாலுமே ஊரடங்கு காரணத்தால் அவை தற்காலிகமாக தள்ளி போடப்பட்டு இருந்தது. ஊரடங்கு முடிந்த பின்பு அடுத்தடுத்து பல புதிய மாடல்கள் அறிமுகமானது. ஏற்கனவே இருக்கும் மாடலின் அப்கிரேடட் வெர்ஷன் அல்லது கூடுதலான அம்சங்கள் என்பவை அல்லாமல் புத்தம் புதியதாக பல விதமான கார்களின் அறிமுகம் வாடிக்கையாளர்களை ஈர்த்தது என்றே கூறலாம்.
செமிகண்டக்டர் இருப்பு பிரச்சனைக்கான தேர்வு : ஏற்கனவே கூறியிருப்பது போல, இந்தியாவில் கார்கள் மற்றும் ஆட்டோமொபைல் சந்தையில் எதிர்கொள்ளப்படும் மிகப் பெரிய சவால் செமிகண்டெக்டர் ஷார்ட்டேஜ். டீலர்களிடம் இருக்கும் கார்களின் எண்ணிக்கை மற்றும் வாடிக்கையாளர்கள் வாங்கவிருக்கும் கார்களின் எண்ணிக்கை, ஆகியவை சமீப காலமாக அதிகரித்ததை கவனித்த FADA, உற்பத்தி திறனையும் மேம்படுத்தி இருக்கிறது. இதனால் செமிகண்டெக்டர் ஷார்ட்டேஜ் என்பது கணிசமாக குறைந்துள்ளது.
SUV வாகனங்கள் மீதான ஈர்ப்பு : எஸ்யுவி என்பது நடுத்தர குடும்பங்கள் விரும்பும் சொகுசு வாகனம் ஆகும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எஸ்யூவியும் லக்சூரி வாகனமாக கருதப்பட்டது. ஆனால் இப்பொழுது பலரும் SUVஐ விரும்புகிறார்கள். அது மட்டுமில்லாமல் எஸ்யூவி வாகனங்களும் நடுத்தர குடும்பங்கள் வாங்கும் அளவுக்கு ஓரளவுக்கு பட்ஜெட் விலையில் கிடைக்கின்றது. இதை அறிந்து கொண்ட மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, மாருதி சுஸுகி ஆகிய நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் எஸ்யூவி வாகனங்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார்கள். மார்ச் மாதம் மட்டுமே 36,000 எஸ்யூவி வாகனங்களை மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவனம் விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்கள் மீதான விருப்பம் ஒரு பாசிடிவ் கண்ணோட்டத்தைக் குறிக்கிறது : இந்தியாவை பொறுத்தவரை கார்கள் வாங்குவது என்பது ஒரு சமூக அந்தஸ்தின் அடையாளம் மற்றும் அது பலருடைய கனவும் ஆகும். எனவே கார்களுக்கான சந்தை என்பதைப் பொறுத்தவரை ஒரு பாசிட்டிவான கண்ணோட்டத்துடன்தான் பெரும்பாலும் பார்க்கப்படுகிறது என்று துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகிறார்கள்.பெருந்தொற்று காலத்தில் சேமிப்பும் கணிசமாக அதிகரித்தது. பலரும் சேமிக்கும் பழக்கத்தை அந்த காலத்தில் தொடங்கி இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அந்த சேமிப்பு பேசஞ்சர் வகை வாகனப் பிரிவில் முதலீடு செய்யப்படுகிறது. இதனால் தான் இந்தியாவில் லக்ஸூரி கார் மேக்கர்களுக்கும் கணிசமான எண்ணிக்கையில் கார்கள் விற்பனையாகி இருக்கின்றது.
பண்டிகை கால விற்பனை அதிகரிப்பு : இந்தியாவை பொறுத்தவரை பண்டிகை காலங்களில் பலரும் முதலீடுகளை செய்வது வழக்கம். வீட்டுக்குத் தேவையான பொருட்களையும் கூட, பண்டிகை நாட்களில் வாங்குவது விசேஷமாகக் கருதுகிறார்கள். இதில் கார்கள் மற்றும் பைக்குகள் வாங்குவது என்பது ஒரு பாரம்பரியமான விஷயமாகவே கருதப்பட்டு வருகிறது.கோவிட் பெருந்தொற்று தாக்கம் இல்லாத முதல் ஆண்டாக நிதியாண்டு 2023 இருக்கிறது. எனவே இந்த ஆண்டில் பல விசேஷங்களில் பலரும் வாகனங்களை முதலீடு செய்துள்ளனர். இதனால் பண்டிகை கால விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.