இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர தின ஸ்பெஷலாக பல்வேறு ஆட்டோமொபைல்ஸ் நிறுவனங்களும் தங்களது புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் பண்டிகை கால விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தோடு ரெனால்ட் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. இந்திய சந்தையில் தற்போது விற்பனையாகி வரும் ரெனால்ட் க்விட், ரெனால்ட் டிரைபர் மற்றும் ரெனால்ட் கிகர் என மூன்று கார் மாடல்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. ரெனால்ட்டின் ஃப்ரீடம் கார்னிவல் திட்டம் ஆகஸ்ட் 16ம் தேதி வரை மட்டுமே நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் ரெனால்ட் நிறுவனத்தின் புதிய காரை வீட்டிற்கு கொண்டு வர நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கு என்னென்ன மாதிரியான சலுகைகள் கிடைக்கிறது என பார்க்கலாம்...
ரெனால்ட் க்விட்: ஆகஸ்ட் மாதத்தில் ரெனால்ட் க்விட் காரை வாங்க விரும்பும் மகாராஷ்டிரா, கோவா, குஜராத் மற்றும் கேரளா மாநில மக்களுக்கு இந்நிறுவனம் 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது. பிற மாநில மக்களுக்கு ரூ.45 ஆயிரம் வரை மட்டுமே தள்ளுபடி கிடைக்கும். ரெனால்ட் நிறுவனத்தின் ஹேட்பேக் மாடல் காரான இதன் ஆரம்ப விலை 4.46 லட்சம் ரூபாய் ஆகும். இந்த காரை இப்போது வாங்கினால் ஃப்ரீடம் கார்னிவல் சலுகையாக ரூ. 5,000 மதிப்புள்ள ஆக்சஸெரீஸ்கள் வழங்கப்படும். மேலும் R.E.Li.V.E ஸ்கிராப்பேஜ் திட்டத்தின் எக்ஸ்சேஞ்ச் ஆபராக ரூ.10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ரெனால்ட் ட்ரைபர்: ரெனால்ட் நிறுவனத்தின் 7 இருக்கைகளைக் கொண்ட எஸ்யூவி காரான இதன் ஆரம்ப விலை ரூ.5.91 லட்சம் ஆகும். ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது மற்ற மாடல்களை விட இந்த காருக்கு அதிக சலுகைகளை அள்ளிக்கொடுத்துள்ளது. மஹாராஷ்டிரா, கோவா, குஜராத் மற்றும் கேரளா மாநிலத்திற்கு 60 ஆயிரம் ரூபாயும், பிற மாநில வாடிக்கையாளர்களுக்கு 55,000 ரூபாய் வரையிலும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.45,000 வரை ரொக்க தள்ளுபடியும், ரூ.5,000 வரை மதிப்புள்ள ஆக்சஸரீஸ்களும் மற்றும் ஸ்கிராபேஜ் பாலிசியின் கீழ் எக்ஸ்சேஞ்ச் ஆபராக 10 ஆயிரம் ரூபாயும் அடங்கும்.
ரெனால்ட் கிகர்: ரெனால்ட்டின் காம்பாக்ட் எஸ்யூவியான கிகர் மாடல் காரின் ஆரம்ப விலை ரூ.5.99 லட்சம் ஆகும். இந்த காருக்கு ஃப்ரீடம் கார்னிவல் சலுகையாக அனைத்து மாநில வாடிக்கையாளர்களுக்கும் ரூ.25,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக கிராமப்புற வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ரூ.10 ஆயிரம் வரையிலான சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் ரூ.10 ஆயிரம் வரையிலான கார்ப்பரேட் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்ச் ஆபராக ரூ.10 ஆயிரம் வரையிலான கேஷ் ஆபர் மற்றும் ஃப்ரீடம் கார்னிவல் சலுகையின் கீழ் ரூ.5,000 வரையிலான ஆக்சஸெரீகளும் வழங்கப்படுகின்றன.