இந்தியாவில் நடைபெறும் சாலை விபத்துகளில் இரு சக்கர வாகன விபத்துகளே அதிகம். கடந்த 2019ஆம் ஆண்டு 1 லட்சத்து 67 ஆயிரம் சாலை விபத்துகளும், 2020ஆம் ஆண்டு 1லட்சத்து 56 ஆயிரம் சாலை விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. இதில் 2019ஆம் ஆண்டு 56, 136 பேரும், 2020ஆம் ஆண்டு 56, 873 பேரும் உயிரிழந்துள்ளனர். அதாவது சாலை விபத்துகளில் மூன்றில் ஒரு விபத்தில் உயிரிழப்பு ஏற்படுகிறது என்கிறது ஒரு புள்ளி விபரம். ஆண்டு தோறும் விபத்துக்களும், விபத்தில் மரணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.
எதிர்காலத்தில் டூவீலர் விபத்தில் ஏற்படும் மரணங்களைக் குறைக்க பலர் புதிய கருவிகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அதில் ஹோண்டா நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் டூவீலர்களுக்கான ஏர் பேக்குகளை உருவாக்க முயற்சி செய்துவருகிறது. இதற்காக 2 விதமான ஏர்பேக்குகளை உருவாக்கியுள்ளது. அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளது. ஹோண்டா நிறுவனம் தற்போது ஸ்கூட்டர் மற்றும் பைக் ஆகியவற்றிற்கு ஏற்ற ஏர்பேக்குகளை உருவாக்கி வருகிறது.
இதை அட்வான்ஸ் ஸிமுலேஷன் டூலில் வைத்து பரிசோதனையும் செய்யப்பட்டு விட்டது. மேலும் கிராஷ் டெஸ்டும் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த கான்செப்ட் மாடலை ஹோண்டா நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏர்பேக்கை மொத்தம் 2 விதமாகத் தயார் செய்துள்ளது ஹோண்டா நிறுவனம். முதல் வகை ரைடர் சீட்டிற்குக் கீழே பொருத்தப்பட்டுள்ளது. இது டூவீலர் விபத்தில் சிக்கினால் ரைடருக்கு பாதுகாப்பை வழங்கும். மற்றொரு வகை ரைடர் மற்றும் பில்லியன் சீட்டிற்கு இடையில் பொருத்தப்படும்.
இதற்காக அந்நிறுவனம் ஆட்டோலைவ் என்ற நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. இந்த ஆட்டோலைவ் நிறுவனம் ஆட்டோமெட்டிக் சேப்டி சிஸ்டங்களை உருவாக்கி வருகிறது. இந்த முயற்சிகள் வெற்றியடைந்தால் வரும் காலத்தில் பாதுகாப்பான ஏர் பேக்குகள் பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களில் நாம் பயணிக்கலாம். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது.