இந்தியாவில் தற்போது ஆட்டோமொபைல் சந்தையில் முன்னிலையில் இருக்கும் ஹோண்டா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களை மக்கள் பெருமளவில் விரும்பி வாங்குகின்றனர். மேலும் மக்களின் மனநிலைக்கேற்ப புதிய புதிய வசதிகளை சேர்த்து அவர்களை மகிழ்விக்கும் வகையில் வாகனங்களை தயாரித்து அறிமுகப்படுத்துவதால், எப்போதுமே ஹோண்டா நிறுவனத்தின் வாகனகளுக்கு சந்தைகளில் மவுசு அதிகம்.
குறிப்பாக நடுத்தர வர்க்கத்து மக்களில் பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்களை வாங்கும் போது, ஹோண்டா நிறுவனத்தின் வாகனங்களையே அதிகம் விரும்புகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஆக்டிவா 6ஜி என்ற ஸ்மார்ட் ஸ்கூட்டர் பெரும் வெற்றி அடைந்தது. ரிமோட் கீ போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களின் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்ட அந்த வாகனத்திற்கு மக்கள் கொடுத்த வரவேற்பை அடுத்து, அதேபோல் தற்போது ஹோண்டாவின் புதிய ஆக்டிவா 125 H- ஸ்மார்ட் இரு சக்கர வாகனமானது சந்தையில் அறிமுகமாக உள்ளது.
இது ஹோண்டா 6ஜி மாடலின் இரட்டையராக கருதப்படுகிறது. இதன் வடிவம் மற்றும் சில வசதிகள் ஏற்கனவே இருந்த 6ஜி மாடலை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதை போல் தெரிகிறது. ஆனால் தற்போது வரை இந்த இரு சக்கர வாகனத்தை பற்றிய முழு விவரங்களை ஹோண்டா நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட புகைப்படங்களில் மிகத் தெளிவாக சில வசதிகளையும் அதன் வடிவமைப்பையும் நம்மால் கண்டறிய முடிகிறது.
ஹோண்டா நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புகைப்படங்களின் படி, இந்த ஆக்டிவா 125 H ஸ்மார்ட் ஸ்கூட்டர் ஆனது ஏற்கனவே அறிமுகமான 6ஜி-ல் இருந்து சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுள்ளது. எரிபொருள் செயல்திறன், மைலேஜ் மற்றும் ஆர்பிஎம் ஆகியவற்றை காண்பிக்கும் டிஜிட்டல் இன்செட்டில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதற்கு முன் வெளியான ஆக்டிவா 6ஜி மாடலில் இருந்து சில அம்சங்களும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. ரிமோட் கீ, புஷ் ஸ்டார்ட் பட்டன், ஸ்மார்ட் ஃபைன்ட் வசதி ஆகியவை இதில் உள்ளடக்கம்.
இதற்கான விலை பற்றி தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆனால் வியூகங்களின்படி பார்க்கையில் ஏற்கனவே வெளியான ஆக்டிவா மாடலை விட பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை வாடிக்கையாளர்கள் கூடுதலாக செலவு செய்ய வேண்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில் ஹோண்டா நிறுவனமானது ஆக்டிவா 125 மாடலை மூன்று வேரியண்டுகளில் விற்பனை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.