மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகத்தின் ஆலோசனையின் பேரில், இந்திய இன்சூரன்ஸ் மற்றும் ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையத்தின் (IRDAI) சார்பில், மூன்றாம் தரப்புக்கான (தேர்ட் பார்ட்டி) வாகன இன்சூரன்ஸ் ப்ரீமியங்களை திருத்தி அமைப்பதற்கான வரைவு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக, இந்த இன்சூரன்ஸ் ப்ரீமியம் என்பது கடந்த 2 ஆண்டுகளாக திருத்தி அமைக்கப்படவில்லை.
கமர்ஷியல் வாகனங்கள் : சரக்குகளை ஏற்றிச் செல்லும் பொது கமர்ஷியல் கனரக வாகனங்களுக்கு ப்ரீமியம் தொகை என்பது ரூ.16,049 முதல் ரூ.44,242 வரையில் இருக்கும். இது வாகனத்தின் மொத்த எடையை அடிப்படையாகக் கொண்டு மாறுபடும். தனியார் வாகனங்களுக்கு இந்த ப்ரீமியம் என்பது ரூ.8,510 முதல் ரூ.25,038 வரையில் இருக்கும்.
நீண்ட கால இன்சூரன்ஸ் : புதிய கார்களுக்கான, 3 ஆண்டு கால சிங்கிள் ப்ரீமியம் இன்சூரன்ஸ் கட்டணமும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ப்ரீமியம் கட்டணம் ரூ.6,521 முதல் ரூ.24,596 வரையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, இரு சக்கர வாகனங்களுக்கு வசூல் செய்யப்படும் 5 ஆண்டு தர்டு பார்ட்டி இன்சூரன்ஸ் ப்ரீமியம் என்பது ரூ.2,901 முதல் ரூ.15,117 வரையில் இருக்கும். இது வாகனங்களின் வசதிகளைப் பொறுத்து மாறுபடும்.
எப்போது அமலுக்கு வருகிறது இந்த புதிய விதிகள் : கொரோனா பெருந்தொற்று காலம் காரணமாக 2 ஆண்டுகளாகவே தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் ப்ரீமியத் தொகை அதிகரிக்கப்படாமலேயே நீடித்து வந்தது. இத்தகைய சூழலில், தற்போது அனைத்து இரு சக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கமர்ஷியல் வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டண முறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.