பெட்ரோல் வாகனங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு எலக்ட்ரிக் வாகனங்கள் இப்போது மெதுவாக சாலைகளை ஆக்கிரமித்துக் கொண்டு வருகின்றன. சாதாரண ஸ்கூட்டர் முதல் பெரிய டிரக்குககள் வரை எலக்ட்ரிக்மயமாகி வருகின்றன. அதனால் சாமானிய மக்களும் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள். வாகன தயாரிப்பு நிறுவனங்களும் புதிய புதிய எலக்ட்ரிக் வாகனங்களை தயாரித்து அறிமுகப்படுத்தி வருகிறார்கள். இதில் நடைமுறைச் சிக்கல் என்னவென்றால் விலைதான்.
பொதுவாகவே எலக்ட்ரிக் வாகனங்களின் விலை சற்று கூடுதலாகவே இருக்கும். அதனால் தான் விற்பனை டல்லடிக்கிறது. இந்தக் குறையைப்போக்கும் விதமாக பட்ஜெட் விலையில் தரமான பவருடன் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று சந்தைக்கு வந்துள்ளது. இந்தியாவை சேர்ந்த பிரபலமான இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெமோபாய் நிறுவனம் தான் இந்த பட்ஜெட் விலை இ-ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
ரைடர் சூப்பர்மேக்ஸ் என்ற பெயரில் களத்தில் இறங்கியுள்ள இந்த புதிய இ-ஸ்கூட்டருக்கு எக்ஸ்ஷோ ரூம் விலை 79,999 ரூபாய் என நிர்ணயம் செய்திருக்கிறது ஜெமோபாய் நிறுவனம். இந்த புதிய இ-ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் ப்ளூ, கிராபைட் க்ரே, பிளாசிங் ரெட், ஸ்பார்க்கிளிங் ஒயிட், ஜாஸி நியான் மற்றும் ஃப்ளோசரண்ட் யெல்லோ என 6 வண்ணங்களில் கிடைக்கிறது. ரைடர் மேக்ஸ் ஸ்கூட்டரில் அதிகபட்சமாக 2.7 kW பவரை வெளிப்படுத்தும் BLDC Hub Motor பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டாருக்கு தகுந்தபடி ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும் ஏஐஎஸ்-156 -1.8 கிலோவாட் பேட்டரி இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ளது.
தினசரி இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களுக்கு ரைடர் சூப்பர்மேக்ஸ் ஸ்கூட்டர் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். ரைடர் மேக்ஸ் திறனிலும் குறைவைக்கவில்லை. இது அதிகபட்சமாக மணிக்கு 60 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பறக்கும் என்றும் ஜெமோபாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. நகர் பகுதி பயனர்களுக்கு இது போதுமான வேகம் தான். ரைடர் சூப்பர்மேக்ஸ் ஸ்கூட்டரில் ஜெமோபாய் கனெக்ட் செயலி தொழில்நுட்ப வசதியும் உள்ளது. இதன் மூலம் உங்கள் ஸ்கூட்டரை நீங்கள் எளிதாக கண்காணிக்க முடியும். அதோடு, பேட்டரியின் நிலை, எவ்வளவு வேகத்தில் ஸ்கூட்டர் செல்கிறது, அதிக வேகம் தொடர்பான எச்சரிக்கைகள், சர்வீஸ் தொடர்பான நினைவூட்டல்கள் உள்ளிட்ட தகவல்களையும் இந்த செயலி வழங்கும்.
79,999 ரூபாய் என்பது அறிமுக சலுகை விலையாகும். அடுத்தடுத்து விலை உயர்த்தப்படலாம். எனவே முந்திக்கொண்டால் நல்லது. வரும் பத்தாம் தேதி முதல் ரைடர் சூப்பர்மேக்ஸ் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு தொடங்கும் என ஜெமோபாய் நிறுவனம் அறிவித்துள்ளது. வெறும் 2,999 ரூபாயை முன்பணமாக செலுத்தி, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை புக்கிங் செய்து கொள்ளலாம்.
ஜெமோபாய் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது அங்கீகாரம் பெற்ற டீலர்கள் மூலமாகவோ புதிய ரைடர் சூப்பர்மேக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ள முடியும். பட்ஜெட் விலை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் ரைடர் சூப்பர்மேக்ஸ் சந்தையில் ஒரு கலக்கு கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.