சாலை பாதுகாப்பு விஷயத்தில் போக்குவரத்து சின்னங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. எனவே தான் டிராவிங் லைசென்ஸ் வாங்குவதற்கான பயிற்சியின் போது கூட ஒவ்வொரு நபருக்கும் போக்குவரத்து அடையாளங்கள் மற்றும் குறியீடுகள் குறித்து விரிவாக விளக்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலான இந்தியர்களுக்கு தெரியாத பல டிராபில் அடையாளங்கள் மற்றும் குறியீடுகள் உள்ளன.சமீபத்தில் கூட பெங்களூருவைச் சேர்ந்த நெட்டிசன் ஒருவர் அதிகம் அறியப்படாத போக்குவரத்து குறியீடு குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தது சோசியல் மீடியாவில் விவாதத்தைக் கிளப்பியது. “இது என்ன போக்குவரத்து சின்னம்?” என அந்த நபர் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பெங்களூரு போக்குவரத்து காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “இது சாலையில் செல்லும் வாகனங்களுக்கு பார்வையற்றவர்களைப் பற்றி எச்சரிக்கும் சின்னம். நீங்கள் குறிப்பிட்டுள்ள ஹோப்ஃபார்ம் சந்திப்பில் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளி உள்ளது” என பதிலளித்திருந்தது. இதுபோல் இந்தியாவில் வாகன ஓட்டிகளால் அதிகம் கவனிப்படாத அல்லது அர்த்தம் தெரியாத சில போக்குவரத்து அடையாளங்கள் மற்றும் குறியீடுகள் குறித்து பார்க்கலாம்...
தளர்வான சரளை (Loose Gravel):சாலையில் தளர்வான சரளை கற்கள் நிறைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் பயணிக்க வேண்டும் என்பதை குறிக்க இந்த அடையாளம் பயன்படுத்தப்படுகிறது. வாகன ஓட்டிகள் செல்லும் சாலையில் இந்த அடையாளத்தைக் கண்டால், வேகத்தை குறைத்து, வாகனத்தை கட்டுப்பாட்டுடன் செலுத்த வேண்டும். அதேபோல் தளர்வான சரளைகள் உள்ள பகுதியில் பயணிக்கும் போது திடீரென பிரேக் போடுவது, கொண்டை ஊசி வளைவுகளில் முந்துவது ஆபத்தானது என்பதையும் எச்சரிக்கிறது.
பார்வையற்றோர் குறித்த எச்சரிக்கை:வரிசையாக 4 புள்ளிகளைக் கொண்ட முக்கோண வடிவ போக்குவரத்து குறீயிடு, வாகன ஓட்டிகளுக்கு சாலையில் உள்ள பார்வையற்றோர் பற்றி எச்சரிக்கிறது. பார்வையற்றோர் பள்ளி இருக்கும் பகுதிகளில் இந்த சைன் போர்ட்களை பார்க்க முடியும். எனவே அந்த பகுதிகளில் வாகனம் ஓட்டும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்
ஆபத்தான பள்ளம்:மலைப்பாதையில் அதிக அளவில் பயணம் செய்த வாகன ஓட்டிகள் பலருக்கும் ஆபத்தான வளைவுகள் குறித்த போக்குவரத்து அடையாளங்கள் நன்கு பரிட்சயமாகியிருக்கும். ஆனால் இந்த அடையாளம் சாலையில் மிகப்பெரிய பள்ளம் இருப்பதை வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கக்கூடியது. எனவே ஓட்டுநர்கள் இந்த அடையாளத்தைக் காணும்போது, சாலையில் செல்லும் போது வேகத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்.
கேப் இன் மீடியன்: இந்த எச்சரிக்கை அடையாளத்தை 4 முனை மற்றும் 5 முனை சந்திப்புகள் வரும் சாலைகளில் நீங்கள் பார்க்கலாம். அதாவது நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் சாலைக்கு நடுவே பயணிகள் மற்றும் வாகனங்கள் கடக்கக்கூடிய இடைவெளி உள்ளதால் குறைவான வேகம் மற்றும் கட்டுப்பாட்டுடன் வாகனத்தை ஓட்டும்படி எச்சரிப்பது ஆகும்.