ரிமோட் கீ தொழில்நுட்பத்தின் அடுத்த படியாக இப்போது ஸ்மார்ட் போனையே காரின் சாவியாக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்திருக்கிறது பிஎம்டிபிள்யூ நிறுவனம். நவீன தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்படும் இப்போதைய கார்களில் எஞ்சின் ஆன்-ஆஃப் சிஸ்டம் பல்வேறு வடிவங்களில் வைக்கப்படுகிறது. ரிமோட். எஞ்சின் ஸ்டார்ட், கீலெஸ் எண்டரி என தொழில்நுட்பங்கள் மாறி விட்டன. இப்போது அதற்கும் ஒரு படி மேலே போய் நாம் வைத்திருக்கும் ஸ்மார்ட் போனையே காரின் சாவியாக பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது பிஎம்டிபிள்யூ நிறுவனம்.
இந்த செல்போனில் சாவிக்காக அல்ட்ரா வைடுபேண்ட் ரேடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது பிஎம்டபிள்யூ நிறுவனம். இந்த தொழில்நுட்பம் டிஜிட்டல் ரேடியோ தொழில்நுட்பத்தில் இயங்கும் திறன் கொண்டது. ரேஞ்ச் மற்றும் பேண்ட்வித் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்த தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் காரின் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களையும் வழங்கும். இதற்காகப் பிரத்தியேகமான செயலியை செல்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்த ஆப்பை பிஎம்டபிள்யூ நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.
இந்த ஆப் ஐபோன், ஆண்ட்ராய்டு, ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட எந்த சாதனத்தில் வேண்டுமானாலும் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும். தற்போது இந்த தொழில்நுட்பம் கேலக்ஸி எஸ் 23+, கேலக்ஸி எஸ் 22 பிளஸ், கேலக்ஸி எஸ் 21 பிளஸ், அல்ட்ரா Z Fold 3, நோட் 20 அல்ட்ரா கூகுள் பிக்ஸல் 7 மற்றும் 6 ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களில் உள்ள பிரத்தியேக ஹார்டுவேர் மூலம் இயக்கப்படுகிறது.
எஞ்சினை ஆன் /ஆப் செய்யவும் முடியும். செல்போனின் பேட்டரி தீர்ந்து போய் ஆப் ஆன பிறகும் ஐந்து மணி நேரத்திற்கு செல்போனை பயன்படுத்தாமலேயே காரை கையாள முடியும் என்கிறது பிம்டபிள்யூ நிறுவனம்.
நவம்பர் 2022ம் ஆண்டிற்குப் பிறகு தயாரிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ கார்களில் இந்த ஆப்பை இப்பொழுதே பயன்படுத்த முடியும்.
அதற்கு முந்தைய கார்களில் பயன்படுத்த வசதியாக ஓடிஏ அப்டேட்டை வழங்க பிஎம்டபிள்யூ நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த அப்டேட் செய்யப்பட்டவுடன் 2022 நவம்பருக்கு முந்தைய தயாரிப்புகளிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும். ஆனால் எதுவரையில் தயாரிக்கப்பட்ட கார்களில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்ற முழுமையான தகவலை பிஎம்டபிள்யூ நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இன்னும் என்னவெல்லாம் அப்டேட்கள் வர உள்ளதோ?