கனரக வாகனங்களில் எலக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் இல்லையே என்ற குறையை போக்கியுள்ளது அசோக் லேலண்ட் நிறுவனம். எலக்ட்ரிக் மற்றும் நெக்ஸ்ட் ஜென் ஃப்யூல் வெகிகிளான ஹைட்ரஜன் செல் என 7 வாகனங்களை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது அசோக் லேலண்ட் நிறுவனம்.மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தொடங்கியுள்ள ஆட்டோ எக்ஸ்போ புதிய வாகனங்களின் வருகையால் களகட்டி வருகிறது.
இந்தியாவின் முன்னோடி கனரக வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலண்ட் நிறுவனம் பல சாதனைகளை படைத்திருக்கிறது. பல சிறிய நிறுவனங்கள் அடிக்கடி புதிய புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனம் அமைதியாகவே இருந்து வருகிறது. நிறைகுடம் தளும்பாதல்லவா?. ஆனால் இப்போது அதிரடியாக எலக்ட்ரிக் வாகனங்களை மட்டுமல்ல, பயன்படுத்த முடியுமா முடியாதா என ஆய்வில் இருக்கும் ஹைட்ரஜன் செல் கனரக வாகனத்தையே சாலையில் பறக்கவிட தயாராகிவிட்டது அசோக் லேல்ண்ட் றிறுவனம்.
ஹைட்ரஜன் செல் என்றால் என்ன ? : அது எப்படி வாகனங்களில் பயன்படுத்த முடியும் என்பதை பற்றி நாம் ஏற்கனவே கட்டுரை எழுதியிருந்தோம். அது சாத்தியமா இல்லையா என முடிவெடுப்பதற்கு முன்பாகவே ஹைட்ரஜன் செல் வாகனத்தை அறிமுகம் செய்திருக்கிறது அசோக் லேலண்ட் நிறுவனம். கிளீன் எனர்ஜி என்ற கொள்கை அடிப்படையில் நாங்கள் அறிமுகம் செய்திருக்கும் வாகனங்கள் அதிலும் பஸ், ட்ரக் என கனரக வாகனப்பிரிவில் இந்த முயற்சி அடுத்த கனரக வாகன போக்குவரத்தில் நாங்கள் முன்னோடியாகவும் தயாராகவும் இருப்போம் என்பதற்கான கட்டியம் என்று சொல்லியிருக்கிறார் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் செயல் தலைவர் தீரஜ் ஹிந்துஜா.
அதோடு சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு வாகனங்களின் அடுத்த அப்டேட்டாக எல்என்ஜி(liquefied natural gas) எரிபொருளை வெற்றிகரமாக பயன்படுத்தி வாகனங்களை தயாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,இது கனரக வாகனங்களுக்கான சரியான சக்தி மிகுந்த எரிபொருளாகவும் இருக்கும் என்றும் தீரஜ் கூறியுள்ளார்..
எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனம் அடுத்த முயற்சியாக அதையும் தாண்டி மேம்பட்ட, அடுத்த தலைமுறை தேவையை பூர்த்தி செய்யும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இது காலத்தின் கட்டாயம். ஜீரோ எமிசன் என்பது அரசால், சமூகத்தால், சட்டத்தால் அல்ல.. தனிமனித முயற்சியால் மட்டும் தான் முழுமையாக சாத்தியமாகும். அதற்கான முதல் படியை அசோக் லேலண்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது. வாழ்த்துவோம்.. வரவேற்போம்..