பெட்ரோல், டீசல் எரிபொருள்களின் கடுமையான விலை உயர்வு, இந்த வாகனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவற்றுக்கு ஒருங்கிணைந்த தீர்வளிக்கும் வகையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு உலக நாடுகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. ஆனால், இந்தியாவில் கடந்த ஆண்டு சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் அடுத்தடுத்து தீ விபத்துகள் ஏற்பட்டதால் அவற்றின் மீதான நம்பகத்தன்மை குறைந்தது. இந்த நிலையில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி புதுப்புது அறிமுகங்களை செய்ய எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
வாடிக்கையாளர்களுக்கான தேவையும் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதை மனதில் வைத்து உற்பத்தியை பெருக்கும் வகையில் தொழிலை விரிவாக்கம் செய்வது தொடர்பாக பல்வேறு மாநில அரசுகளுடன் ஏதர் எனர்ஜி நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின், வணிகப் பிரிவு தலைவர் ராவ்நீத் பொக்கேலா கூறுகையில், “உற்பத்தியை பெருக்குவதற்கு எங்களது நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது ஆண்டுதோறும் 4 லட்சம் வாகனங்களை நாங்கள் உற்பத்தி செய்து வரும் நிலையில், மேலும் 10 லட்சம் வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டு வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.
சார்ஜிங் நிலையங்கள் : மக்களிடையே எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரிக்கும் நிலையில், அவற்றை சார்ஜிங் செய்வதற்கான வசதியை மேம்படுத்த வேண்டியுள்ளது. இதுகுறித்து ராவ்நீத் பொக்கேலா கூறுகையில், “எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில், பொது சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான துறை சார்ந்து நாங்கள் முதலீடுகளை செய்து வருகிறோம். நாட்டில் ஏற்கனவே ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சார்ஜிங் நிலையங்களை அமைத்து, டூ வீலர்களுக்கான சார்ஜிங் நிலைய எண்ணிக்கையில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க உள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
வாகன விற்பனை அதிகரிப்பு : பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஏதர் நிறுவனம் கடந்த டிசம்பர் மாதத்தில் 9,187 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்த காலங்களை ஒப்பிடுகையில் 389 சதவீதம் கூடுதலாகும். எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இந்தியாவை சர்வதேச அளவிலான எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பு மையமாக மாற்றுவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதே சமயம், தமிழக அரசு சார்பிலும் பசுமைப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.