உலகின் பல நாடுகளில் சாலைகள் மற்றும் ஆகாயம் என இரண்டு வழிகளில் செல்லக்கூடிய பறக்கும் கார்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த வினாட்டா நிறுவனம் உருவாக்கி வரும் பறக்கும் காரானது ஆசியாவின் முதல் ஹைபிரிட் பறக்கும் கார் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இந்தக் கார் பயோ எரிபொருள் மற்றும் மின்சார ஆற்றல் என இரண்டு வழிகளில் இயங்கக் கூடியது கூடுதல் சிறப்பாகும்.
லண்டனில் நடைபெற்ற எக்ஸெல் எனும்ம் உலகின் மிகப்பெரிய ஹெலிடெக் தொழில்நுட்ப கண்காட்சியில் இந்தக் காரின் ப்ரோடோடைப் காட்சிப்படுத்தப்பட்டது, மேலும் சமீபத்தில் இந்திய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம், இந்தக் காரின் புரோட்டோடைப்பை காட்டி இது குறித்து இந்நிறுவனத்தார் விளக்கியுள்ளனர். சிந்தியாவும் இந்தக் கார் குறித்து புகழ்ந்து பேசியிருக்கிறார்.
2023ம் ஆண்டு முதல் இந்த கார் பயன்பாட்டுக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. 2 சீட்டர் கொண்ட இந்த பறக்கும் கார் செங்குத்தாக எழுந்து, கீழிறங்கும் திறன் கொண்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக 3000 அடி உயரத்தில் இக்காரால் பறக்க இயலும். மணிக்கு அதிகபட்சமாக 120 கிமீ வேகத்தில் தொடர்ந்து 60 நிமிடங்கள் இந்தக் காரால் வானில் பறக்க முடியும் என்பது சிறப்பாகும். இந்தக் காரின் ரேஞ்ச் 100 கிமீ என சொல்லப்படுகிறது.
இக்காரின் மொத்த எடை 1100 கிலோவாகும். மேலும் டேக் ஆஃப்பின் போது 1300 கிலோ எடை வரை தாங்கக் கூடியதாகும். இக்காரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ருமெண்ட் பேனல்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இடம்பெற்றுள்ளன. நேவிகேஷன் வசதியுடன் கூடிய பெரிய டச் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர மேலும் 3 ஸ்கிரீன்கள் இதில் கொடுக்கபப்ட்டுள்ளது, இதன் மூலம் வானிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.