ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அப்போதெல்லாம் பெண்களை பெருமைப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். பெண்கள் தினத்தன்று மட்டுமே பெண்களை பெருமைப்படுத்தும் நிகழ்வுகளுக்குப் பதில், ஒவ்வொரு நாளும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி, அவர்களை முன்னிலைப்படுத்தும் விதமான செயல்கள் தான் பெண்களுக்கு நிரந்தரமான பெருமையை தேடித் தரும். அப்படி ஒரு முன்னெடுப்பைத் தான் செயல்படுத்தியுள்ளது இந்தியாவின் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான அசோக் லேலாண்ட் நிறுவனம்.
அசோக் லேலண்டின் ஓசூர் தொழிற்சாலையில் புதிய என்ஜின் லைனில் பணியமர்த்தப்பட்டுள்ள 80 பெண் தொழிலாளர்கள் ஆலையில் தயாரிக்கப்படும் கமர்ஷியல் மற்றும் கனரக வாகனங்களில் பொருத்தப்படும் என்ஜின்களை உற்பத்தி செய்யும் பணியை மேற்கொள்ள உள்ளனர். இதற்காக இந்த பெண் தொழிலாளர்களை பயிற்றுவிக்கவும், அவர்களது திறன்களை மேம்படுத்தவும் குறிப்பிடத்தக்க தொகையை அசோக் லேலண்ட் முதலீடு செய்துள்ளது.
அசோக் லேலண்ட்டின் ஓசூர் தொழிற்சாலையில் எச்1 யூனிட்டில் புதிய பி15 ரக என்ஜின்களை இந்த 80 பெண் பணியாளர்கள் உற்பத்தி செய்து அசெம்பிள் செய்வது மட்டுமின்றி, வாகனத்தில் பொருத்துவதற்கு முன்பாக சோதனை செய்யவும் உள்ளனர். புதிய பி15 என்ஜின் ஆனது எடை குறைவான கமர்ஷியல் வாகனங்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 2 ஷிஃப்ட்களாக இயக்கப்பட உள்ள இந்த புதிய பிரோடக்ஷன் லைனில் வருடத்திற்கு 62,000 என்ஜின்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது அசோக் லேலண்ட் நிறுவனம்.
பாலின மற்றும் இன வேறுபாடின்றி சம வாய்ப்புகளை அசோக் லேலண்ட் வழங்கி வருவதாகவும், பெண்களுக்கு இந்த வாய்ப்புகளை வழங்குவது அவர்களின் வாழ்க்கையை மட்டுமல்ல, அவர்களின் குடும்பம் மற்றும் சமூகத்தின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் என்றும் பெருமையுடன் கூறியுள்ளார் அசோக் லேலணட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஷேனு அகர்வால்.
மேலும், பெண்களின் திறமைகளை மேம்படுத்தி வேலை வாய்ப்புகளை உருவாக்கி அவர்களின் கனவுகளை நிஜமாக்குவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம். அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பாலின சமநிலையை நிறுவுவதன் முக்கியத்துவத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்றும் ஷேனு அகர்வால் கூறியுள்ளார். நல்ல முயற்சி பெரிய வெற்றியின் தொடக்கம்… அப்படி ஒரு முயற்சியை முன்னெடுத்திருக்கிறது அசோக் லேலண்ட் நிறுவனம்