ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ மிகவும் பிரபலம். இந்த கண்காட்சியில் இந்தியாவின் பிரபலமான கார் மற்றும் இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகின்றன. மேலும் ஏற்கனவே இருக்கும் மாடல்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்தும் அறிவிப்புகளை் வெளியாகும். எனவே, வாகனப்பிரியர்கள் இந்த எக்ஸ்போவை தவறவிடுவதில்லை. கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளால் கடந்த சில ஆண்டுகளாக இந்த எக்ஸ்போ முறையாக நடைபெறவில்லை.
இந்நிலையில் வரும் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போ கிரேட்டர் நொய்டாவில் ஜனவரி 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 2023 ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் தங்களின் புதிய மாடல்களை அறிமுகம் செய்ய பல நிறுவனங்கள் தயாராகி வரும் நிலையில் இந்தியாவின் முன்னனி நிறுவனங்கள் இந்த எக்ஸ்போவில் கலந்து கொள்ளாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த நிறுவனங்கள் 2023ஆம் ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவை தவிர்க்கப்ப போகிறார்கள் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.
ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் : இந்தியாவின் முக்கியமான இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம். இந்நிறுவனம் பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகிறது. அதிலும் ஹீரோ நிறுவனத்தின் பட்ஜெட் வகை பைக்கான ஸ்ப்ளெண்டர் மிகப் பிரபலம். இந்த நிறுவனம் வரும் ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்ளப் போவதிலலை என அறிவித்துள்ளது.
ஹோண்டா நிறுவனம் : இந்திய இருசக்கர வாகன சந்தையில் தவிர்க்க முடியாத மற்றொரு நிறுவனம் ஹோண்டா நிறுவனம். ஸ்கூட்டர் வகை பைக்குகளில் இந்திய வாடிக்கையாளர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்ற ஆக்டிவா இந்த நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான தயாரிப்பு. ஹோண்டா நிறுவனமும் 2023-ஆட்டோ எக்ஸ்போவை தவிர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹார்ட்லி டேவிட்சன் நிறுவனம் : இந்திய தயாரிப்புகளைப் போலவே இந்திய வாடிக்கையாளர்களிடம் மிகவும் வரவேற்பை பெற்றுள்ள வெளிநாட்டு நிறுவனம் தான் ஹார்ட்லி டேவிட்சன் நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஸ்டைலான அதிவேக பைக்குகள் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்ற மாடல்கள். வரும் 2023 ஆட்டோ எக்ஸ்போவை ஹார்ட்லியும் தவிர்க்க உள்ளதாக கூறப்படுகிறது.
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் : கனரக பைக்குகளை தயாரித்து இந்திய வாடிக்கையாளர்களை அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கவர்ந்து வரும் இந்திய நிறுவனம் தான் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம். பெரிய, கம்பீரமான புல்லட்டுகளை விரும்பாதவர்களே இருக்க முடியாது. அப்படி மிகவும் பிரபலமான ராயல் என்ஃபீல்ட் நிறுவனமும் ஆட்டோ எக்ஸ்போவில் கலந்து கொள்ளாதாம்.