இந்தியாவின் முன்னோடி இரு சக்கர வாகனம் தயாரிப்பு நிறுவனமாக திகழ்கிறது பஜாஜ் மோட்டார்ஸ் நிறுவனம். இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு இரு சக்கர வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது பஜாஜ் நிறுவனம். இந்நிலையில் இங்கிலாந்து நாட்டு நிறுவனத்துடன் கைகோர்த்துள்ள பஜாஜ் நிறுவனம் அசத்தலான ஒரு மாடலை இந்தியாவில் இறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
பஜாஜ் நிறுவத்தின் மைல்ஸ்டோன் மாடலான பல்சர் எப்படி இந்திய இளைஞர்களின் விருப்ப வாகனமாக இருக்கிறதோ, அதே போல் இந்த புதிய பைக்கும் சாதனை படைக்கும் என திடமாக நம்புகிறது பஜாஜ் நிறுவனம். அந்த புதிய பைக்கின் சோதனை ஓட்டம் அண்மையில் நடைபெற்றுள்ளது. இதையடுத்து அந்த புதிய பைக் தொடர்பான விபரங்கள் வெளியாகியுள்ளன.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த பைக், வரும் ஜூன் 27ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராஜீவ் பஜாஜ் இந்த தகவலை பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த புதிய பைக்கின் அறிமுகம் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஜாஜ் நிறுவனம் தற்போது கூட்டணி அமைத்துள்ள டிரையம்ப் நிறுவனம் இங்கிலாந்தை சேர்ந்தது என்பதால், புதிய பைக்கின் உலகளாவிய அறிமுகத்தை லண்டனில் நடத்த திட்டமிட்டுள்ளது பஜாஜ் நிறுவனம். உலகளாவிய அறிமுகம் வரும் ஜூன் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதை தொடர்ந்து நடப்பு 2023ம் வருடத்தின் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்திலேயே இந்த பைக்கின் விலை அறிவிக்கப்பட்டு, முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விடும் எனக் கூறப்படுகிறது.
பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி இந்த ஒரு பைக் மட்டுமல்லாது, இன்னும் வேறு சில பைக்குகளையும் தயாரிக்கும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறது. பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி களமிறக்கவுள்ள 2வது மாடல் அனேகமாக ஸ்க்ராம்ப்ளர் ரகத்தை சேர்ந்த பைக்காக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த 2வது பைக்கும், வரும் ஜூலை-செப்டம்பர் காலகட்டத்திலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி களமிறக்கவுள்ள புதிய பைக்குகளில், 300 சிசி - 400 சிசி லிக்யூட் கூல்டு சிங்கிள் சிலிண்டர் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய பைக்குகள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் கேடிஎம் ட்யூக் 390 மற்றும் ராயல் என்ஃபீல்டு ஆகிய பைக்குகளுக்கு அவை மிக கடுமையான சவாலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கிற்காக இப்போதே ஆர்வத்துடன் காத்திருக்ககத் தொடங்கிவிட்டனர் பைக் பிரியர்கள்.