தாய்ப்பால் பற்றி தாயைத் தவிர வேறு யார் சிறப்பாகக் கூற முடியும்...? குரல் கொடுக்கும் அம்மாக்கள்

”பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்காததால் 99,499 குழந்தைகள் வயிற்றுப் போக்கு , நிமோனியா போன்ற காரணங்களால் இறக்கின்றன”

தாய்ப்பால் பற்றி தாயைத் தவிர வேறு யார் சிறப்பாகக் கூற முடியும்...? குரல் கொடுக்கும் அம்மாக்கள்
”பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்காததால் 99,499 குழந்தைகள் வயிற்றுப் போக்கு , நிமோனியா போன்ற காரணங்களால் இறக்கின்றன”
  • News18
  • Last Updated: August 2, 2019, 4:19 PM IST
  • Share this:
உலக அளவில் 7.6 மில்லியன் குழந்தைகள் தாய்ப்பால் குடிக்க முடியாத அவல நிலையில் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா..! இதுதான் கசப்பான உண்மை. 

தாய்பால் கொடுப்பதில் 76 நாடுகளில் இந்தியா 56 வது இடத்தில் உள்ளது. இப்படி ஒவ்வொரு வருடமும் ஒரு நாளோடு முடித்துக் கொள்ளாமல் ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழு வரை  ஒரு வாரம் இந்த தாய்பால் ஊட்ட வேண்டிய அவசியத்தை விழிப்புணர்வூட்ட  உலகமே கொண்டாடுகிறது. இருப்பினும் இந்த நிலை மாறியபாடில்லை.

உடலுக்கு நல்லது என ஒரு பொருளை விளம்பரப்படுத்த கோடிகள் கொட்டி செலவு செய்ய பல நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் தாய்ப்பால் நல்லது என்பதை மற்றவர்களுக்கு சொல்ல வேண்டுமானால் அது மற்றொரு தாயால் மட்டும்தான் முடியும். பெற்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுங்கள் என மற்றொரு தாய் சொல்லும் அவலம் இன்னும் நிலவும் இதே மண்ணில்தான் தன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போயிற்றே என தினம் தினம் கவலைக் கொள்ளும் ஐஷ்வர்யா போன்ற பெண்களும் இருக்கிறார்கள்.


யார் இந்த ஐஷ்வர்யா..? சென்னையைச் சேர்ந்த சிக்காகோவில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஐஷ்வர்யா ராஜன் பாபு ஃபேஸ்புக்கில் அம்மாக்களுக்கான ’தி மாமி சீரிஸ்’ என்ற ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை இயக்கிவருகிறார். அதை வெறும் ஃபேஸ்புக் பக்கமாக மட்டும் கடந்துவிட முடியாது. அன்பும் தாய்மையும் ஆளும் அந்த பக்கத்தில் நேர்மறை சிந்தனைகள், நம்பிக்கை, எதையும் சாதிக்கலாம் என்ற வலிமை என தைரியத்தையும் தருகிறது.

ஐஷ்வர்யா ராஜன் பாபு


4000 அம்மாக்கள் 40 நாடுகள் என செயல்படும் ’தி மாமி சீரிஸ்’ ( The Mommy Series ) பக்கமானது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தாய்மார்களின் அனுபவங்களால் நிறைகிறது. ஐஷ்வர்யா பரபரப்பான ஐடி மேலாளராக இருந்தாலும் தன் ஆர்வத்தால் குடும்பங்களின் புகைப்படக்கலைஞராக இருக்கிறார். அவ்வாறு பல குடும்பங்களை புகைப்படம் எடுக்க சென்றபோது அம்மாக்களின் அனுபவங்கள் பல இவருக்குக் கிடைத்துள்ளன.இதனால், தினம் தினம் நெகிழ்ந்த ஐஷ்வர்யா ஏன் இதை மற்றவர்களுக்கும் சொல்லக் கூடாது என்று யோசித்து உருவாக்கியதுதான் இந்த மாமி சீரிஸ். தொடங்கிய குறுகிய நாட்களிலேயே பல அம்மாக்கள் இதில் இணைந்துள்ளனர். அவர்களை எப்போதும் ஆக்டிவாக வைத்துக்கொள்ள அடிக்கடி அவர்களுக்கு ஏதேனும் போட்டிகள், கேள்விகளை தொடுப்பது என அந்த பக்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் ஒவ்வொரு தாய்மார்களும் தன் குழந்தையை ஈன்ற போது கிடைத்த அனுபவம், அதிலிருந்து மீண்டு வந்த அனுபவங்கள் என ஒவ்வொருவரும் உணர்வுப்பூர்வமாக பேசுவது எப்பேர்பட்ட இயலாமை கொண்டோரையும் நிமிர வைக்கும்.

“தாய்மார்களுக்கான ஃபேஸ்புக் பக்கங்கள் பல இருக்கின்றன. ஆனால் அவை குறுகிய காலத்திற்குள் எதற்காகத் தொடங்கப்பட்டது என்று தெரியாதவாறு எல்லா செய்திகளும் பகிரப்படும். ஆனால், நான் அந்த விஷயத்தில் தெளிவாக இருந்தேன். அதேசமயம் இந்த பக்கத்தில் நேர்மறையான விஷயங்கள் மட்டுமே இருக்க வேண்டும். அவை மற்றவர்களுக்கு ஊக்குவிப்பாக இருக்க வேண்டும் என்ற கோணத்தில் கொண்டு சென்றோம். இன்று வரை இந்த பக்கம் அப்படிதான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது” என்கிறார்.இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அனுபவங்களை கொடுக்கும் இந்த பக்கத்தில் தற்போது தாய்பால் வாரத்திற்காக தாய்ப்பால் இயக்கம் (breastfeeding movement) என்ற பிரசாரத்தை நடத்திக்கொண்டிருக்கிறது. கடந்த ஜூலை மாதம் முதலே தொடங்கப்பட்ட இந்த பிரசாரத்தில் 7 கண்டங்களிலிருந்தும், 40 நாடுகளிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த தாய்மார்கள் தங்களுடைய ஆதரவை அளித்துள்ளனர்.

இந்த பிரசாரத்தில் தாய்ப்பால்தானம், பொது வெளியில் தாய்பாலூட்டுதல் என தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வுகளும் அளிக்கப்படுகிறது.இதை வெறும் வார்த்தைகளால் சொல்வதைவிட புகைப்படங்களால் சொன்னால் இன்னும் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்பதால் இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள 40 பெண் புகைப்படக்கலைஞர்களை அணுகி இந்த பிரசாரம் குறித்து பேசியுள்ளார். அவர்களிடம் தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படங்கள் எடுத்து அனுப்பக் கோரியுள்ளார். அதில் 9 கலைஞர்கள் மட்டுமே அனுப்ப ஒப்புக் கொண்டுள்ளனர். பின் ஐஷ்வர்யாவே எதிர்பார்க்காத அளவில்  குர்ரான் படிக்கும்போதும், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்க அச்சப்படும் இடங்களிலெல்லாம் தாய்ப்பால் ஊட்டுவதுபோன்ற புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளனர்.

”அந்தப் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் ஷேர் செய்ததைப் பார்த்துவிட்டு மற்ற பெண்களும் தாங்களாகவே முன் வந்து  தங்கள் ஆதரவைத் தந்தனர். சிலரின் கணவர்களே மனைவியை பொது இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலூட்டச் சொல்லி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளனர். சிலர் மைசூர் பேலஸ், துபாய் புர்ஜ் கலிஃபா டவர் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலிருந்தும் தாய்ப்பால் கொடுப்பது போன்ற புகைப்படங்களை எடுத்து அனுப்பினர்” நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.”பலருக்கும் குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்பது தெரியாது. இவ்வாறு தெரியாததால்தான் 99,499 குழந்தைகள் வயிற்றுப் போக்கு , நிமோனியா போன்ற காரணங்களால் இறக்கின்றனர். அதே தாய்பாலால் 820,000 குழந்தைகளைக் காப்பாற்ற முடியும் என்கிறது யுனிசெஃப். இதை எத்தனை பேர் தெரிந்து கொண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை. இந்த விஷயங்கள் எனக்கே குழந்தை பிறந்தபோது தெரியாது. அது குறித்து தற்போது வருந்துவதில் பலனில்லை என்பதால்தான் மற்றவர்களுக்கு இதுபோன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இயக்கத்தைத் துவங்கினேன்.இந்த தாய்ப்பால், விழிப்புணர்வு பிரசாரத்தால் பலரும் தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டுள்ளதாக மெயில் அனுப்புகின்றனர். இதுதான் எங்களுடைய வெற்றி” என பெரும் மகிழ்ச்சி கொள்கிறார் ஐஷ்வர்யா.

இந்த தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு மட்டுமல்ல மார்பகப் புற்றுநோய் பாதிப்பையும் தவிர்க்க முடியும் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. அப்படி 20,000 தாய்மார்கள் தாய்ப்பாலால் ஒவ்வொரு வருடமும் உயிர் பிழைப்பதாக ஐஷ்வர்யா குறிப்பிடுகிறார்.  ”இதுபோன்ற தகவல்களை இந்த மாமி சீரிஸ் மூலமாக ஒவ்வொரு குழந்தையைப் பெற்ற தாய்மார்களுக்கும் விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது. மேலும் ஒரு மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பதன் பலன், பொது வெளியில் தாய்ப்பால் கொடுப்பதன் அச்சத்தை விலக்குதல், தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கும், தாய்க்குமான நன்மைகள் என்னென்ன என ஒவ்வொரு அம்மாக்களுக்கும் புரிய வைப்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம்” என்கிறார் ஐஷ்வர்யா.

இதை வெறும் தகவல்களாக மட்டும் பதிவு செய்யாமல், தாய்ப்பால் கொடுப்பதால் ஒவ்வொரு தாயும் பெற்ற அனுபவத்தை உணர்வுப் பூர்வமக பகிரச் சொல்லி அதன்மூலம் மற்ற அம்மாக்களுக்கு அந்த எண்ணத்தைத் தூண்ட வைக்கிறார் ஐஷ்வர்யா.ஐஷ்வர்யா இந்த தாய்ப்பாலூட்டுதல் தினத்தை இத்தனை பெரும் அளவில் முன்னெடுத்துச் செல்வதற்கு மற்றொரு பெரிய காரணம் இருக்கிறது. “எனக்குக் குழந்தைப் பிறந்தவுடன் சில உடல் பிரச்னைகளுக்கு உள்ளாக்கப்பட்டு ஆறு மாதங்கள் வரை படுக்கையாக இருந்தேன். அதனால் என் குழந்தைக்கு தாய்ப் பால் சரியாகக் கொடுக்க முடியாமல் போயிற்று.அந்த ஆரம்ப காலகட்டத்தில் தாய்ப்பால் கொடுக்கும் அனுபவத்தையும் நான் பெறவில்லை. குடுவையில் சேகரித்துதான் எனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தேன்.

என்னதான் அவள் தற்போது ஆரோக்கியமாக இருந்தாலும் தீவிரமாக பால் கொடுத்திருந்தால் கூடுதல் வலிமையும் ஆரோக்கியத்தையும் கொண்டிருப்பாளோ? என்ற ஏக்கம் உண்டு. தற்போது அவள் நான்கு வயது என்றாலும் இன்னும் என்னால் அந்த துயரத்திலிருந்து மீள முடியவில்லை. தினம் தினம் அவளிடம் அதற்காக மன்னிப்பு கேட்கிறேன். இப்போது அவளுக்குப் புரியவில்லை என்றாலும் அவள் வளர்ந்த பின் நிச்சயம் புரிந்து கொண்டு அவள் என் மன்னிப்பை ஏற்று கொள்ள காத்துக் கொண்டிருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் நிறைவு செய்கிறார் ஐஷ்வர்யா.
First published: August 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading