முகப்பு /செய்தி /மகளிர் / Women's Day 2021: இரண்டு கைகளை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத மாளவிகா ஐயர்..

Women's Day 2021: இரண்டு கைகளை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காத மாளவிகா ஐயர்..

டாக்டர் மாளவிகா ஐயர்

டாக்டர் மாளவிகா ஐயர்

”முதுகலை வந்ததும் நான் எடுத்த சோஷியல் ஒர்க் என்ன ரொம்ப மாத்திடுச்சி. எல்லாத்துலயும் பாஸிட்டிவ மட்டும் பாக்க சொல்லிக் கொடுத்துச்சு.”

  • 4-MIN READ
  • Last Updated :

 சில ஆண்டுகளுக்கு முன்பு மாளவிகாவை சந்தித்தது இன்னும் நினைவிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் அவர் அப்போது சென்னை வந்திருந்தார். அவர் பி.ஹெச்டி முடித்த விஷயத்தை சமூக வலைதளங்களில் பார்த்து விட்டு, நேரில் சந்திக்க முயன்ற போது தான், அதிர்ஷ்டவசமாக அவர் சென்னையில் இருந்தது தெரிந்தது.

தாம்பரத்தில் இருக்கும் அவரது வீட்டுக்கு சென்றபோது, வெளியில் வந்து இன்முகத்தோடு வரவேற்று கேட்டை தாழிட்டார். உள்ளே சென்றதும் தண்ணீர் பாட்டிலை கொண்டு வந்து கொடுத்தார் மாளவிகா. இதில் என்ன ஆச்சர்யம் என உங்களுக்கு தோன்றலாம். ஆம் ஆச்சர்யம் தான்.. காரணம் 13 வயதில் ஏற்பட்ட ஒரு குண்டு வெடிப்பில் தனது இரண்டு கைகளையும் இழந்தவர் அவர். அதோடு அவரது இரு கால்களும் வெகுவான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆனால் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. தன்னைப் போல் பாதிக்கப்பட்ட பலருக்கும் ஊக்க மருந்தாய் செயல்பட்டு வருகிறார் மாளவிகா.

கடந்தாண்டு பெண்கள் தினத்தில், இந்திய பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கை ஒருநாள் நிர்வகிக்கும் பொறுப்பு 7 சாதனைப் பெண்களுக்கு வழங்கப்பட்டது. அதில் ஒரு சாதனைப் பெண்தான் இந்த டாக்டர் மாளவிகா ஐயர்.

நம்மிடம் தனக்கு ஏற்பட்ட விபத்து குறித்தும், அதன் பிறகான வாழ்க்கை குறித்தும் அந்த சந்திப்பில் பகிர்ந்துக் கொண்டார். ”நான் பிறந்தது கும்பகோணம், அப்பா கிருஷ்ணன் ராஜஸ்தான்ல இன்ஜினியரா இருந்தாரு. அதனால குடும்பம் அங்க மாறிடுச்சி. ராஜஸ்தான்ல இருக்க பீகானிர் சிட்டில தான் நாங்க இருந்தோம், 2002 மே 26-ல எனக்கு சரியா 13 வயசு இருக்கும் போது, நான் அந்த குண்டு வெடிப்பை சந்திச்சேன்.

ராணுவத்துக்குத் தேவையான வெடிமருந்துகள் எல்லாத்தையும் அந்த இடத்துல தான் சேமித்து வைப்பாங்க. விபத்து நடக்குறதுக்கு 6 மாசத்துக்கு முன்னாடியே அங்க ஒரு தீ விபத்து நடந்து, அணு துகள்கள் எல்லாம் அந்த சிட்டி முழுக்க பரவியிருக்கு. அப்படித்தான் எங்க வீட்டுக்கும் அது வந்திருக்கு. ஸ்கூல் நாட்கள்ல நான் தான் கை வேலைப்பாடுகளுக்கு (கிராஃப்ட்) சிறந்த பரிசு வாங்குவேன். எனக்கு அது அவ்வளவு பிடிக்கும். அந்த அணு துகள்கள் வந்ததும், நம்ம கிராஃப்ட்ஸ் எல்லாம் எரிஞ்சிடுமேன்னு, ஓடிப்போய் அத எடுத்துப் பாதுகாக்கப் போனேன். ஆனா எதிர்பாராதவிதமா கைகள பாதுகாக்க மறந்துட்டேன்.

அதுல ஒரு நல்ல விஷயம் என் முகத்துக்கும், உள்ளுறுப்புகளுக்கும் எதுவும் ஆகல. ரெண்டு கால் மற்றும் கைகளோட முக்கிய நரம்புகள் எல்லாமே கட் ஆகிடுச்சி. 80 சதவீத ரத்தத்த அன்னைக்கு இழந்தேன். மருத்துவர்கள் பல பேர் நான் பிழைக்க மாட்டேன்னு சொன்னாங்க. கை கூட ஓரளவு சமாளிச்சிட்டேன். ஆனா கால்கள் ரெண்டும் ரொம்ப பாதிச்சிருக்கு. இது நிறைய பேருக்குத் தெரியாது. ரெண்டு காலுமே மல்டிபில் ஃபிராக்ச்சர், ஒரு கால்ல உயரம் கூட கம்மியாகிருக்கு. எலும்புகள் நொறுங்கி, கால்கள் வடிவமிழந்துருக்கு. அந்த அணு துகள்கள் சின்ன சின்னதா ரெண்டு கால்லயும் ஒட்டிருந்தது. அதை தினமும் கிளீன் பண்ணி எடுக்க 2 மாசமானது. முதல் 2 நாள் உடம்பு மரத்துப்போனதால எனக்கு எதுவுமே தெரில. மூணாவது நாள் தான் வலியின் கொடுமையை உணரத் தொடங்குனேன். இந்த உலகத்துல வேற யாருமே இந்த மாதிரி வலியை அனுபவிக்கக் கூடாதுன்னு அப்போ தான் நினைச்சேன்.

ரெண்டு தொடைகள்ல இருந்தும் தோலை எடுத்து கால்களை கவர் பண்ணிருக்காங்க. அதிர்ஷ்டவசமா முதல் முயற்சிலேயே என் கால்கள் அந்த மாற்றுத் தோலை ஏத்துக்கிச்சு. அது தான் முதல் சர்ஜரி. அதுக்கப்புறம் எத்தனை சர்ஜரி பண்ணிருக்கேன்னே தெரில, என் உடம்புல அவ்வளவு சர்ஜரி இருக்கு. அழுதுட்டு இருந்து எதுவும் பிரயோஜனமில்லங்கற நிதர்சனத்தை புரிஞ்சிக்கிட்ட என் அம்மா ஹேமமாலினி, 2003-ல என்னை கூட்டிட்டு சென்னை வந்து, அண்ணாநகர்ல இருக்க ஒரு எலும்பு மற்றும் மூட்டு மருத்துவமனைல சிகிச்சைக் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அப்பா ராஜஸ்தான் கவன்மென்ட்ல வேலை செஞ்சதால அவரால வர முடியல. என்னையும் பாத்துக்கிட்டு அக்காவையும் பாத்துக்க முடியாதுன்னு, அக்காவை பெரியம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. இப்படி எனக்கு நடந்த அந்த விபத்துனால எங்க குடும்பம் அப்படியே பிரிஞ்சிடுச்சி.

Women's Day - Dr Malvika Iyer

ஒன்றரை வருஷம் பெட் ரெஸ்ட்ல இருந்தேன். கால்ல நிறைய கார்பென்ட்ரி வேலை செஞ்சாங்க. அம்மாவோட கால் எலும்புகளை சுரண்டி என் கால் எலும்புகளை ஜாயிண்ட் பண்ணுனாங்க. ஒருவழியா நடக்க ஆரம்பிச்சேன். ஆனாலும் தனியா நடக்க ரொம்ப நாளாச்சு. என் கூட படிச்சவங்க எல்லாரும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதுறதா சொன்னாங்க. ஸோ, பிரைவேட் கோச்சிங் சென்டர்ல படிச்சு தேர்வு எழுதலாம்னு நினைச்சேன். அப்போ தான் முதன்முதல்ல நான் வெளியுலகத்தப் பாக்குறேன். அப்போ எனக்கு ரொம்ப இன்ஃபீரியரா இருந்துச்சு, கை இல்லையேன்னு எல்லாரும் என்ன பாவமா பாக்குறது எனக்கு சுத்தமா பிடிக்கல. முழு கை வச்ச டிரெஸ் போட்டு ஆர்டிஃபிஷியல் கைகளை அதுக்காகவே பயன்படுத்துனேன். அந்த நேரத்துல எனக்கு அவ்வளவு கான்ஃபிடென்டெல்லாம் கிடையாது.

Women's Day - Dr Malvika Iyer

ஸ்கூல் படிக்கும்போது டான்ஸ், கதாக், கிராஃப்ட்ன்னு என்ன சுத்தி இருந்த எல்லாத்தையும் லவ் பண்ணேன். ஸோ, அப்போ நான் ரொம்ப ஆவரேஜ் ஸ்டூடெண்ட். ஆனா இப்போ என்னால படிக்கிறத தவிர வேற எதுவும் பண்ண முடியாது. 3 மாசம் நல்லா படிச்சேன். அம்மா துணையோட எக்ஸாம் ஹாலுக்கு போய், அழுகாம, மத்தவங்க பாக்குறாங்கன்னு கவலை படாம விடைகளை டிக்டேட் பண்ணுனேன். அம்மாவுக்கு நான் எக்ஸாம் எழுதுனதே பெரிய சாதனையா இருந்தது. கணிதம் மற்றும் அறிவியல்ல சென்டம் வாங்குனேன், இந்தில ஸ்டேட் ஃபர்ஸ்ட் வாங்குனேன், மொத்தம் 483 மார்க். அதுக்கப்புறம் என் வாழ்க்கை ரொம்பவே மாறிடுச்சி.

இனி பின்னால் திரும்ப வேண்டாம்னு, நடக்க வேண்டிய தூரத்தைப் பத்தி யோசிச்சேன். ரெகுலர் ஸ்கூல்ல 11, 12-ம் வகுப்பு படிச்சேன். டெல்லில இளங்கலை, முதுகலை படிச்சேன். எம்.ஃபில், பிஹெச்.டி சென்னைல முடிச்சேன். இதுல என்னோட பி.ஹெச்.டி தீஸிஸ் முழுக்க நானே டைப் பண்ணேன். எப்படி தெரியுமா? என்னோட வலது கைல ஒரு சின்ன எலும்பு நீட்டிட்டு இருக்கும். முதல்ல அத வச்சி மொபைல்ல மெஸேஜ் டைப் பண்ணி பாத்தேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா என் எலும்புக்கு பயிற்சி கொடுத்து, மொத்த தீஸிஸையும் டைப் பண்ணி முடிச்சேன்.

Women's Day - Dr Malvika Iyer

முதுகலை வந்ததும் நான் எடுத்த சோஷியல் ஒர்க் என்ன ரொம்ப மாத்திடுச்சி. எல்லாத்துலயும் பாஸிட்டிவ மட்டும் பாக்க சொல்லிக் கொடுத்துச்சு. ஒருநாள் ஹாஸ்பிடல் போகும்போது, ஒரு பெண் என்ன பாத்து, ஐயோ பாவம், இந்தப் பொண்ணுக்கு கை இல்லையேன்னு சொன்னப்போ தான், நான் முதல் முறையா எனக்கு கை இல்லையேன்னு அழுதேன். மாற்றுத்திறனாளிகள் மேல காட்டுற அந்த பரிதாப ஆட்டிட்யூட் மனநிலையை பத்தி தான் பி.ஹெச்டில ஆராய்ச்சி பண்ணி, தீசீஸ் சப்மிட் பண்ணுனேன்.

26 மே 2012-ல என்னோட விபத்து நடந்து 10 வருஷம் ஆகிருக்குன்னு ஃபேஸ்புக்ல போஸ்ட் போட்டேன். அப்போ தான் எல்லாருக்கும் என்னப் பத்தி தெரிஞ்சது. அதுக்கு நிறைய ரெஸ்பான்ஸ் கிடைச்சது. நாம இதப்பத்தி நிறையப் பேசணும்ன்னு நினைச்சேன். 2013-ல இருந்து பொது மேடைகள்ல பேசுறேன். உங்கக் கதையைப் படிச்சு எனக்கு தன்னம்பிக்கை வந்திருக்குன்னு நிறைய பேர் சொல்லும்போது, எல்லாமே நல்லதுக்குத்தான்னு தோணும். இந்தியாவைத் தவிர வெளிநாடுகள்லயும் பேசுறேன். நியூயார்க்ல இருக்க ஐ.நா சபைல கூட பேசியிருக்கேன்.

Women's Day - Dr Malvika Iyer

அப்புறம் 2018-ம் வருஷம் பெண்கள் முன்னேற்றத்துல பங்கெடுத்துக்குறவங்களுக்கு இந்திய அரசு வழங்குற அங்கீகாரமான “நாரி சக்தி புரஸ்கார்” விருதை நம்ம ஜனாதிபதி கிட்ட வாங்குனேன். ”நெவர் கிவ் அப்” தான் என்னோட தாரக மந்திரம். நானோ, இல்ல என் ஃபேமிலியோ என்னை விட்டுக் கொடுத்திருந்தா நான் இன்னைக்கு இந்த நிலைமைல இருந்திருக்க மாட்டேன். அதனால பிரச்னைகளை உங்க கண்ணு  முன்னாடி வச்சு பாக்காம தள்ளி வச்சு பாருங்க. சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் நொடிஞ்சு போய் உக்காந்துடாதீங்க” என மாளவிகா பேசியதோ பலருக்கும் ஊக்கமளிக்கும் வார்த்தைகள்!

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: International Women's Day, Women's Day