Home /News /women /

சாதனைப் பெண்கள் 2: அசத்தல் ஆங்கிலம், அயராத உழைப்பு... ஆசிரியர் தொழிலதிபர் ஆன கதை!

சாதனைப் பெண்கள் 2: அசத்தல் ஆங்கிலம், அயராத உழைப்பு... ஆசிரியர் தொழிலதிபர் ஆன கதை!

கிரேஸ் ராணி (ஆங்கிலப் பயிற்சியாளர்)

கிரேஸ் ராணி (ஆங்கிலப் பயிற்சியாளர்)

"நாம பாஸிட்டிவ்வா, தன்னம்பிக்கையோட இருந்தா போதும் நாம மட்டும் வளரமா நம்மால இன்னொருத்தரையும் வளர்க்க முடியும்".

  • News18
  • Last Updated :
நல்ல படிப்பு இல்லை, குடும்பப் பின்னணி இல்லை என்று புலம்பிக்கொண்டு மட்டுமே இல்லாமல், சவால்களைச் சந்தித்து அடுத்தடுத்து முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும் என உணர்த்துகிறார் பெண் தொழில் முனைவோர் ஆன கிரேஸ் ராணி.

வீட்டில் வசதி வாய்ப்பு குறைவாக இருந்தாலும் திறமை இருந்தால், உழைக்கத் தயாராக இருந்தால் வாழ்க்கையை நம் வசப்படுத்த முடியும் என்பதில் உறுதியாக இருக்கிறார் கிரேஸ். ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் இன்று மொபைல்ஃபோன் வழியாக சர்வதேச அளவில் ஆங்கில வகுப்புகள் எடுக்கும் அளவுக்கு தன் சுய முயற்சியால் வளர்ந்துள்ளார்.

தனது வெற்றிப்பயணம் குறித்து நம்மிடம் பேசியவர், “அம்மா, அப்பா, அண்ணன், அக்கா என்று பெரிய குடும்பத்தில் பிறந்தவள் நான். போடிநாயக்கனூர் தான் சொந்த ஊர். ஒரு 25 வருஷத்துக்கு முன்னாடி எல்லாம் ஊர்ப்பக்கம் கந்துவட்டிப் பிரச்னை ரொம்பவே அதிகமா இருக்கும். அந்தக் கந்துவட்டி தான் எங்க குடும்பத்தோட நிம்மதியையும் காணாம ஆக்கிடுச்சு. சொத்து, நிலம், சொந்த வீடு எல்லாம் வெறும் ஒரு லட்ச ரூபாய் கடனுக்கு மொத்தமா காணாமப்போச்சு.அண்ணன், அக்காவையும் ஹாஸ்டலுக்கு அனுப்பிட்டாங்க. ஆனா, சின்னப்புள்ளையா அந்த வறுமையில நா தனியா மாட்டிக்கிட்டேன். அம்மா-அப்பா கஷ்டத்துல என்னைய பார்த்துக்க முடியல. மதுரையில ஒரு மிஷனரி பள்ளியில ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டுட்டாங்க. சின்ன வயசுல இருந்து தனிமைதான். பெருசா எவ்ளோ யோசிச்சாலும் குடும்ப சூழல் வளரவே விடலை.

அந்த சூழல்ல கிடைச்ச ஒரே நம்பிக்கை படிப்பு. படிச்சா மட்டுந்தான் நம்ம வாழ்க்கைய நாம நினைச்ச மாதிரி வாழமுடியும்ன்னு யோசிச்சு எங்க பள்ளியோட ’சுப்பீரியர் மதர்’ கிட்ட நேரடியா விஷயத்தைச் சொன்னேன். அவுங்க உதவியால பள்ளிப்படிப்பும், பி.ஏ ஆங்கில இலக்கியம் படிக்கிற வாய்ப்பும் கிடச்சது. படிச்சு முடிச்சு ஒரு சின்ன ஸ்கூல்ல டீச்சர் வேலைக்குப் போனேன்.

அங்கதான் என் நிலைமை மாறுச்சு. 9 மணிக்குப் போயிட்டு 5 மணிக்கு முடியுற வேலையில நிலையா இருக்க முடியலை. அப்போ தெரிஞ்சவுங்க ஒருத்தர் மூலமா பெங்களூருல ஒரு ஆங்கிலத் திறன் வளர்க்கும் வகுப்புல சேர்ந்து படிக்க ஆரம்பிச்சேன். தனியா நானே எனக்கான வாழ்க்கைய உருவாக்க தைரியம் கிடச்சது. குடும்பத்துல பல சிக்கல்கள் இருந்தாலும் சொந்த ஊருக்கு வந்ததும் பள்ளி, கல்லூரிகள்ன்னு நிறைய எடத்துக்குப் போய் ஆங்கில வகுப்புகளுக்கான வாய்ப்புக் கேட்டேன்.அப்டி கிடைச்ச வாய்ப்புகளால் புது ஜெனரேஷன் கூட பழகுற வாய்ப்புக் கிடைச்சது. என் பசங்க தான் என்னை வளர்த்தாங்கன்னே சொல்லலாம். என் ஸ்டூடண்ட் ஒரு பையன் நான் க்ளாஸ் எடுக்குற நோட்ஸை எல்லாம் வாங்கிட்டுப் போய், டைப் பண்ணி புக் மாதிரி செஞ்சு எனக்கே பரிசா கொடுத்தான். ரொம்பவே ஆச்சர்யமா இருந்துச்சு. அந்த க்ளாஸ் பிள்ளைங்க கொடுத்த ஐடியா தான் இன்னைக்கு ‘16 முறைகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ்’ன்னு ஒரு புக் எழுதி நான் வெளியிடக் காரணம்.

இப்போ சொந்தமா நானே ஒரு இன்ஸ்டிட்யூஷன் தொடங்கி நடத்திட்டு இருக்கேன். எளிமையா எப்படி இங்கிலீஷ் கத்துக்கலாம்ன்னு உள்ளூர் ஸ்கூல்ல இருந்து சர்வதேச அளவுல க்ளாஸ் எடுத்திட்டு இருக்கேன். மதுரை, தேனியில் இருந்து கத்தார், துபாய் வரைக்கும் என் மாணவர்கள் இருக்காங்க. ஒரு நாள் கூட ஓய்வு இல்லாம தனி ஆளா தமிழ்நாடு முழுக்க சுத்திட்டு இருக்கேன். ஸ்போக்கன் இங்கிலீஷ் இல்லாம நா பேசுறது பிடிச்சு, என்னை பல இடங்களுக்கும் ‘மோட்டிவேஷனல் ஸ்பீகர்’ ஆகக் கூப்டுறாங்க.

அப்போதான் புரிஞ்சது. நாம பாஸிட்டிவ்வா, தன்னம்பிக்கையோட இருந்தா போதும் நாம மட்டும் வளராம, நம்மால இன்னொருத்தரையும் வளர்க்க முடியும்ன்னு புரிஞ்சிக்கிட்டேன். என்னோட ஆங்கிலப் பயிற்சிகளுக்காக ஆசிய விருதுகள் வரை நிறைய விருதுகள் வாங்கியிருக்கேன். இன்னும் நிறைய பேர சந்திக்கணும். நாமும் வளரணும் கூடவே சேர்த்து இன்னும் நிறைய பேரையும் வளர்க்கணும்” என்றவர் திருச்சியில் அடுத்த ஆங்கிலப் பயிற்சி வகுப்புக்காக கிளம்பத் தயாரானார் நம்பிக்கையுடன்.
Published by:Rahini M
First published:

Tags: Women achievers, Women Empower

அடுத்த செய்தி