Home /News /women /

சாதனைப் பெண்கள் 3: 3 ஆண்டுகள்... 300 ரூபாய் முதலீடு... இன்று கோலிவுட்டின் ’ஸ்டார் காஸ்ட்யூமர்’!

சாதனைப் பெண்கள் 3: 3 ஆண்டுகள்... 300 ரூபாய் முதலீடு... இன்று கோலிவுட்டின் ’ஸ்டார் காஸ்ட்யூமர்’!

’ஸ்டார் காஸ்ட்யூமர்’ செளபர்ணிகா

’ஸ்டார் காஸ்ட்யூமர்’ செளபர்ணிகா

”ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட குழந்தையோட தான் போறேன். என் குழந்தையையும் சினிமா ஸ்பாட்ல்ல இருக்குறவங்களே பாத்துக்குறாங்க.”

  • News18
  • Last Updated :
முறையான கல்வி, மிகச்சிறந்த தொழிலுக்கான முதலீடு, குடும்பம், ஆதரவு, உதவி என எதுவும் கிடையாது. கைக்குழந்தையுடன் தனி ஒரு ஆளாக வெறும் 300 ரூபாய் முதலீட்டில் சுயதொழில் தொடங்கிய செளபர்ணிகா, இன்று கோலிவுட் உலகின் ஸ்டார் காஸ்ட்யூம் டிசைனர். நந்தினி சீரியலின் நித்யா ராம் முதல் விஜய் ஆண்டனி, அருண் விஜய் வரை கோலிவுட் நட்சத்திரங்களுக்கான நட்சத்திர டிசைனராகப் பணியாற்றி வரும் செளபர்ணிகா தன் பயணம் குறித்து நம்முடன் பேசுகிறார்.

"கோயம்புத்தூரைச் சேர்ந்தவள் நான். அம்மா- அப்பா என்னோட சின்ன வயசுலேயே பிரிஞ்சிட்டாங்க. ஸ்கூல் போறதை 14 வயதோட நிறுத்தியாச்சு. பிறந்ததில் இருந்தே எந்த ஆதரவும் இல்லாமலே தனியா வளர்ந்ததால் எனக்கான வழியை நான் தான் பார்த்துக்கணும்ன்னு முடிவு பன்னிட்டேன். சின்னச் சின்னதா நிறைய வேலைகள் பார்த்திருக்கேன். மார்க்கெட்டிங் தொழிலில் ரொம்ப வருஷமா வேலை செஞ்சிட்டு இருந்தேன். ஆனா, எந்த வேலையுமே திருப்தியும் தரலை புதுசா எதுவும் கத்துக்கவும் வைக்கலை.

அப்போதான், சென்னைக்குக் கிளம்பினேன். புதுசா நிறையா தெரிஞ்சுக்கலாம்ன்னு நினைச்சேன். மறுபடியும் மார்க்கெட்டிங் தொழில். அந்த சமயம் காதல், திருமணம் எல்லாம் நடந்தது. ஆனால், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், என்னையும் என் குழந்தையையும் தனிமைப்படுத்தியது. கர்ப்ப காலத்தில் யூட்யூப் பார்த்துக் கத்துக்கிட்ட தையல் இன்னைக்கு என்னை இவ்ளோ தூரம் கூட்டிட்டு வந்துருக்கு.

பிறந்த வீடு, புகுந்த வீடு எதுவும் இல்லை. யாருடைய துணையும் இல்லை. நண்பர்கள்கிட்ட வாங்குன 300 ரூபாய் வச்சு விளம்பரக் கம்பெனி தொடங்கலாம்ன்னு விசிட்டிங் கார்டு அடிச்சேன். அந்த 300 ரூபாய்க்கு அடிச்ச விசிட்டிங் கார்டு எல்லாத்தையும் வீடுவிடா போய் தந்து வாய்ப்பு கேட்டேன். யார் எது கேட்டாலும் அந்த வேலையைத் தெரியாதுன்னு சொல்லாம தேடித்தேடி கத்துக்கிட்டு செய்துகொடுத்தேன். பெருசா லாபம் இல்லை. அப்போதான் புதுசா கத்துக்கிட்ட தையல் உதவுச்சு. என் பாப்பாவுக்குப் புதுசா நிறைய டிரஸ் பண்னேன். பக்கத்து வீடுகளுக்கு அப்டியே தொழில் பெருகுச்சு. மறுபடியும் நண்பர்கள் கொடுத்த கொஞ்சம் பணத்துல ‘ஜூன்பெரி’ன்னு ஒரு பொட்டிக் தொடங்குனேன்.2017-ல ஜூன்பெரி தொடங்குனேன். ஆன்லைன் மார்க்கெட்டிங் கத்துக்கிட்டு பிசினஸ் பெருசாக வேலைப் பார்த்தேன். ஆங்கிலம் கத்துக்கிட்டேன். பொட்டிக்-ன்னு சாதாரணமா ஒரு கடை வச்சா போதாது. புதுசா செய்தாதான் நமக்கு அங்கீகாரம் கிடைக்கும். அதனால, நிறைய பிரபலங்களுக்கு ஃபேஸ்புக் மூலமா வாய்ப்புக் கேட்டேன். அப்படி பல பேருகிட்ட வாய்ப்பு கேட்டபோது என்னை மதிச்சு பதில் சொன்னாரு விஜய் ஆண்டனி சார்.

கோயம்புத்தூரிலிருந்து சென்னை கிளம்பி வாங்கன்னு விஜய் ஆண்டனி சார் சொன்னதும் கைக்குழந்தையோடு கிளம்பிட்டேன். முதல்ல விஜய் ஆண்டனி சார் படத்துக்கு மார்க்கெட்டிங் டீம்-ல வேலை கிடைச்சது. அடுத்து அவரோட ‘திமிரு பிடிச்சவன்’ படத்துக்கு என்னை நம்பி காஸ்ட்யூம் டிசைனர் வேலை கொடுத்தாரு. அந்தப் படத்துல காஷ்ட்யூம் டிசைனரா வேலை பார்த்ததுக்கு நிறைய பாராட்டுகள் கிடைச்சது. தொடர்ந்து சினிமா வாய்ப்புகளும் குவியுது” என்றார் மகிழ்ச்சியுடன்.செளபர்ணிகாவின் பயணம் நமக்கு ஒரு கதையாகத் தெரியலாம். ஆனால், அவர் சந்தித்த சவால்களும், போராட்டங்களும் அதிகம். யாருடைய ஆதரவும் இல்லாமல் தனி ஒரு பெண்ணாக தன் பெண் குழந்தையுடன் இன்று கோலிவுட்டின் ஸ்டார் காஸ்ட்யூம் டிசைனராக உயர்ந்துள்ளார் செளபர்ணிகா. தன் பணிகள் குறித்து நம்முடன் பகிர்கிறார்.

“வாழ்க்கை போயிடுச்சு, படிப்பு இல்லை, கையில் குழந்தையோட தனியா நிக்கிறோம்ன்னு எதுக்கும் துவண்டு போகல. இந்த வலிகள் எல்லாம் எனக்கு பலமாகத் தான் தெரிஞ்சது. வாய்ப்புக்கேட்டு முயற்சி பண்னேன். உழைப்பு அதிகம். இன்னைக்கு கோயம்புத்தூர்ல இரண்டு மாடியில் ‘ஜூன்பெரி’ பொட்டிக் வச்சிருக்கேன். சன் டிவி நந்தினி சீரியல் கதாநாயகி நித்யாவுக்கு நான் தான் பெர்சனல் டிசைனர். கலர்ஸ் சானல்ல திருமணம் சீரியலுக்கும் நான் தான் காஸ்ட்யூம் பண்றேன்.

ஒரு மலையாளத் திரைப்படம், நாலு தமிழ் திரைப்படம்ன்னு காஸ்ட்யூம் மட்டுமல்லாது அவுட்லுக் டிசைனும் பன்றேன். சினிமாவுல எனக்குக் கிடைச்ச வாய்ப்பை நல்லாப் பயன்படுத்திக்கணும். ஷூட்டிங் ஸ்பாட்டுக்குக் கூட குழந்தையோட தான் போறேன். என் குழந்தையையும் சினிமா ஸ்பாட்ல்ல இருக்குறவங்களே பாத்துக்குறாங்க. இப்போ நானும் என் குழந்தையும் ஒரு தமிழ்ப் படத்துக்காக இப்போதான் ஐரோப்பா டூர் முடிச்சிட்டு வந்திருக்கோம்” என நம்மை வியப்பில் ஆழ்த்தினார் செளபர்ணிகா.
Published by:Rahini M
First published:

Tags: Women Empower

அடுத்த செய்தி