• HOME
  • »
  • NEWS
  • »
  • women
  • »
  • ’என் வாழ்வை மீட்டெடுத்தது தூய்மைப் பணியாளர் அக்காக்கள் தான்’ - ’காதல்’ சரண்யா உருக்கம்!

’என் வாழ்வை மீட்டெடுத்தது தூய்மைப் பணியாளர் அக்காக்கள் தான்’ - ’காதல்’ சரண்யா உருக்கம்!

நடிகை சரண்யா நாக்

நடிகை சரண்யா நாக்

தற்கொலை பண்ணிட்டு செத்து போய்டுவேனோன்னு பயம் வந்துச்சு. இந்த வாழ்க்கையை பாதிலயே இழந்துடக் கூடாதுன்னு தான், வீட்ட விட்டு வெளில வந்தேன்.

  • Share this:
சினிமாவில் குறிப்பாக நடிகைகள் கொஞ்ச காலத்திற்கு ’சைலண்ட் மோடில்’ இருந்தால், முதல் விஷயம் அவர்களுக்கு தொழிலதிபர்களுடன் திருமணமாகி வெளிநாட்டில் செட்டில் ஆகியிருக்கலாம் அல்லது அவர்களே ஏதாவது சொந்த தொழிலில் பிஸியாகி இருக்கலாம் என்ற எண்ணம் தான் பொதுவாக நாம் அனைவருக்குமே வரும்.

சினிமாவில் ஆடி, பாடி, சிரித்து, மகிழ்ந்து தங்களை சந்தோஷமானவர்களாய் காட்டிக் கொண்ட பலரது தனிப்பட்ட வாழ்க்கை அதற்கு நேர் மாறாக இருப்பதை பல தருணங்களில் நாமே பார்த்திருக்கிறோம். அவர்கள் சொந்த வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் சினிமாவைப் போல இரண்டரை மணி நேரத்தில் முடியக் கூடியவைகள் அல்ல. யாருமே துணைக்கு இல்லாவிட்டாலும், எதோ ஒரு சூழலில் நண்பர்களோ, காதலனோ தன்னை காப்பாற்றும் சினிமாத்தனம் எல்லாம் நிஜ வாழ்க்கையில், பாலை வனத்தில் வறண்ட நாக்குடன் காத்திருப்பவனின் கதை போலத்தான்.

இப்படி தனது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட சில பல சிக்கல்களால் வெளியுலகத்துடனான தனது தொடர்பை துண்டித்து விட்டு, நான்கரை வருடத்தை வீட்டு சிறையில் கழித்திருக்கிறார் நடிகை சரண்யா நாக். இவர் யாரென்ற அறிமுகம் பெரிதாக தேவையில்லை என்றே தோன்றுகிறது. இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ திரைப்படத்தில், ஹீரோயின் சந்தியாவின் தோழியாக நடித்திருப்பாரே அவரே தான்... உண்மையில் காதல் திரைப்படத்தில் ஹீரோயினாக தான் நடிக்கவிருந்ததையும் இந்த உரையாடலின் போது நம்மிடம் தெரிவித்தார்.உள்ளுக்குள் பல சோகங்கள் இருந்தாலும் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல், நம்மிடம் புன்னகையுடன் பேசத் தொடங்கினார் சரண்யா.

“சின்ன வயசுல இருந்தே அப்பா இல்ல, அம்மா மட்டும் தான். எங்க வீடு கோடம்பாக்கத்துல இருந்துச்சு. அப்போல்லாம் தமிழ் சினிமாவோட ஹாட்ஸ்பாட்டே கோடம்பாக்கம் தான். அதனால அந்த ஏரியாவுல இருக்கவங்களுக்கு ஈஸியா நடிக்க வாய்ப்பு கிடைக்கும். எங்கம்மாவுக்கு நடிக்கணும்ன்னு ஆசை, ஆனா அது நடக்கல. அதனால என்ன எப்படியாச்சும் நடிக்க வைக்கணும்ன்னு முயற்சி பண்ணுனாங்க. ஆனா எனக்கு இதுல விருப்பம் இல்ல. நம்ம கூட கடைசி வரைக்கும் படிப்பு தான் வரும். அதனால நல்லா படிக்கணும்ன்னு ஆசைப்பட்டேன். அம்மா ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்புகளால விபரம் தெரியாத வயசுலயே, ‘நீ வருவாய் என’, ‘காதல் கவிதை’, ‘திருநெல்வேலி’ன்னு நிறைய படங்கள்ல குழந்தை நட்சத்திரமா நடிச்சிருக்கேன். பொண்ணு ஸ்கூல் லீவுல வீட்ல தான் இருக்கா, எதாச்சும் இருந்தா சொல்லுங்கன்னு, அம்மா தொடர்ந்து எல்லார் கிட்டயும் கேப்பாங்க.

 

Actress Saranya Nag, Kadhal Saranya, peranmai movie

‘போஸ்’ படத்துல சினேகா, ஸ்ரீகாந்த் கூட நடிச்சேன். அப்போ கேமராமேன் விஜய் மில்டன் சார் என்ன கூப்பிட்டு, காதல் படத்தைப் பத்தி சொன்னாரு. எனக்கு நடிக்கிறதுல இண்ட்ரெஸ்ட் இல்லன்னு சொன்னேன். சினிமா தான் சீக்கிரம் காசு சம்பாதிக்கிற தளம்ன்னு அம்மா கட்டாயப்படுத்துனாங்க. நீ தான் படத்துல ஹீரோயின்னு சொன்னதும், மனசளவுல கொஞ்சம் தயாராகிட்டேன். ஷூட்டிங் போகும் போது, இந்த கதைக்கு நான் ரொம்ப குட்டி பொண்ணா தெரியுறேன்னு சொல்லி, ரேவதியை (சந்தியா) ஹீரோயினா போட்டுட்டாங்க. படத்துல நான் ஃப்ரெண்ட் ரோல் பண்ணிருந்தாலும், இத்தனை வருஷத்துக்கு அப்புறமும், மக்கள் மறக்காம இருக்குறதுல ரொம்பவே சந்தோஷம்.”

நான்கரை வருஷம் எங்க போனீங்க?

Actress Saranya Nag Exclusive Interview, Kadhal Saranya
சரண்யா


“அம்மா வேற ஒரு ரிலேஷன்ஷிப்ல இருந்தாங்க. எனக்காக அவங்கள கஷ்டப்படுத்த விரும்பல. ஆனா அந்த ரிலேஷன்ஷிப் எனக்கு ரொம்ப கொடுமையா இருந்தது. ஒரு கட்டத்துல என்னால தாங்கிக்க முடில. அதனால ’பேராண்மை’ படத்துக்கு அப்புறம் வீட்ட விட்டு வெளில வந்துட்டேன். அம்மாவும் அவங்க வாழ்க்கையை பாத்துட்டு போய்ட்டாங்க. கட்டாயத்தின் பேர்ல வெளில வந்தேன். காரணம் நான் எங்க தற்கொலை பண்ணிட்டு செத்து போய்டுவேனோன்னு பயம் வந்துச்சு. இந்த வாழ்க்கையை பாதிலயே இழந்துடக் கூடாதுன்னு தான், வீட்ட விட்டு வெளில வந்தேன். அந்த சமயத்துல பாண்டியன் மாஸ்டரும், அவரோட குடும்பமும் எனக்கு ரொம்ப உதவியா இருந்தாங்க. ஹாஸ்டல்ல ஒன்றரை வருஷம் இருந்தேன். அப்போ, என்ன... ஒரு நடிகை போய் 4000-க்கு ஹாஸ்டல்ல இருக்காங்கன்னு ஆச்சர்யமா பாப்பாங்க. அப்புறம் பிஜி-ல கொஞ்ச வருஷம் ஓடுச்சு. இப்போ தனியா வீடு எடுத்து தங்கிருக்கேன். எனக்கு பொருளாதாரா ரீதியா இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சார் ரொம்ப சப்போர்ட் பண்ணிருக்காரு.

Actress Saranya Nag, Kadhal Saranya, peranmai movie
பேராண்மை படத்தில்...


இதுக்கிடையில 5 வயசுல இருந்து எனக்குள்ள இருந்த மன அழுத்தம் இன்னும் அதிகமாச்சு. மாதவிடாய் பிரச்னை, ஹார்மோனல் இம்பேலன்ஸ், தைராய்டு, பிசிஓஎஸ்-ன்னு அடுத்தடுத்து பல பிரச்னைகள். இதனால என் உடம்புல நிறைய மாற்றங்கள், எடை அதிகமாச்சு. இதனால வெளியுலகத்த பாக்க பயந்தேன், எனக்குள்ள தாழ்வு மனப்பான்மை அதிகமாச்சு. இப்போ வெளில வர்றதுக்கு தைரியம் வர, நாலரை வருஷம் ஆகியிருக்கு. நான் திரும்பவும் பழைய மாதிரி வரணும், படம் பண்ணனும்ங்கறது தான் என் மேல அக்கறை இருக்க எல்லாரோட எதிர்பார்ப்பும்.

Actress Saranya Nag Exclusive Interview, Kadhal Saranya
நடிகை சரண்யா


வெளியில் வருவதற்கு இப்போது தைரியம் வந்தது எப்படி?

எனக்கு உடல் எடை அதிகமானதால, எல்லாரும் என்ன கிண்டல் பண்ணுவாங்க. மனசு கஷ்டபடுற மாதிரி கமெண்ட் பண்ணிட்டு, அவங்க சிரிப்பாங்க. அதனால தான் நான் வெளில வர பயந்தேன். இந்த கொரோனா லாக்டவுன்ல எங்க தெருவுல தூய்மை பணியாளர் அக்காங்க தினமும் வந்து வேலை செஞ்சாங்க. ஆனா யாருமே அவங்கக் கிட்ட பேச கூட மாட்டாங்க. அதனால நான் போய் அந்த அக்காங்க கிட்ட பேச்சு கொடுக்க ஆரம்பிச்சேன். அவங்க எனக்குக் கொடுத்த பாஸிட்டிவிட்டிய வார்த்தைகளால விவரிக்க முடியாது. அவங்களுக்கு நான் நடிகைன்னு எல்லாம் தெரியாது. ரொம்ப எதார்த்தமா பேசுனாங்க. நாலரை வருஷம் ஏன்டா வேஸ்ட் பண்ணுனோம்ன்னு இப்போ ஃபீல் பண்றேன். பட் ஜனா சார், பாண்டியன் மாஸ்டரை தவிர்த்து கடந்த நாலரை வருஷத்துல என்ன சுத்தி இருந்தவங்க யாரும் பாஸிட்டிவா இல்ல.

உங்கள் பேச்சில் ஒரு வித வலி தெரிகிறதே?

Actress Saranya Nag Exclusive Interview, Kadhal Saranya
’காதல்’ சரண்யா


உடல் சம்பந்தமா நிறைய விமர்சனங்களை சந்திச்சிட்டு இருக்கேன். பின்னணி வேலைகளுக்காக இப்போ ஒரு படபிடிப்புக்கு போறேன். அங்க டைரக்‌ஷன் மற்றும் கேமரா டிபார்ட்மெண்ட தவிர மீதம் இருக்க 150 பேரும் வித்தியாசம், வித்தியாசமா ’பாடி ஷேம்’ பண்றாங்க. பல நேரங்கள்ல நான் டயர்டாகிடுறேன். ஒரு வழியா வெளில வந்துருக்கோம். திரும்பவும் பயந்து ஓடிட கூடாதுன்னு என்னை நானே ஆறுதல் படுத்திக்கிறேன். இங்க கொலை பண்ணவங்க கூட, கேஷுவலா வந்து பேட்டி கொடுக்குறாங்க. ஆனா உடல் எடை அதிகமா இருக்கேன்ற காரணத்தால, என்னைப் பாக்குறவங்கக் கிட்ட இருந்து வர்ற வார்த்தைகள் என்னை ரொம்பவே காயப்படுத்துது. பெண்களும் இயற்கையும் ஒண்ணுன்னு நிறைய பேருக்கு புரியவே மாட்டேங்குது. 5 வயசுல இருந்து பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகியிருக்கேன். அதுவும் ஒருமுறை, ரெண்டு முறை இல்ல, நிறைய முறை ஆளாகியிருக்கேன். இதெல்லாம் மனசுல ஆறாத காயமா இருக்கு.

லாக்டவுனில் நல்லது நடந்ததாமே?

எல்லாருக்கும் இந்த கொரோனா லாக்டவுன் பொருளாதார ரீதியா நிறைய இறக்கத்தைக் கொடுத்திருக்கு. ஆனா எனக்கு நடந்த ஒரு நல்ல விஷயம் நான் வெளில வந்தது தான். அதுக்குக் காரணம் அந்த தூய்மை பணியாளர் அக்காக்கள் தான். அவங்கக் கிட்ட தொடர்ந்து 3 மாசம் பேசுனேன். அவங்க என்ன டார்லிங்ன்னு கூப்பிடுவாங்க, நானும் அவங்கள திருப்பிக் கூப்பிடுவேன். அவங்க கொடுத்த தைரியம் தான் இதுக்குக் காரணம். நான் செங்கல், சிமெண்ட் எல்லாம் போட்டு ஸ்ட்ராங்க கட்டி வச்சிருந்த சில விஷயங்களை கூட அவங்க அன்பு உடைச்சிருச்சு. என் கிட்ட எந்த மேக்கப் பொருட்களுமே இல்ல. அப்புறம் புதுசா வாங்கி கண்ணுக்கு மை, உதட்டுக்கு லிப்ஸ்டிக் போட்டுட்டு, அந்த அக்காங்க கிட்ட நல்லாருக்கான்னு கேட்டேன். அவங்க சூப்பரா இருக்குன்னு என்ன இன்னும் என்கரேஜ் பண்ணாங்க. சொன்னா நம்ப மாட்டீங்க. என் கிட்ட மூணே மூணு ட்ரெஸ் தான் இருந்துச்சு. அதுக்கு அப்புறம் தான் கடைகள் திறந்த பிறகு, போய்  ட்ரெஸ்ஸா வாங்கினேன்!

சரண்யாவின் வலிகள் நீங்கி, வாழ்க்கை வளம் பெற வாழ்த்தி விடைபெற்றோம்...உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Shalini C
First published: