பெண் சிசுக்களை கொல்லும் கள்ளிப்பால்.. மீண்டும் தலைதூக்குவது ஏன்? அதிர்ச்சி பின்னணி

Youtube Video

 • Share this:
  மதுரை மாவட்டத்தில் கள்ளிப்பால் கொடுத்து பெண் குழந்தைகளை கொலை செய்யும் சம்பவம் தொடர்ந்து வரும் நிலையில் அதற்கான காரணம் குறித்த அதிர்ச்சி தகவல்கள் நியூஸ் 18 தமிழ்நாடு கள ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

  மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புள்ளநேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வைரமுருகன்-சௌமியா தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், அந்த பச்சிளங்குழந்தைக்கு கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்து, வீட்டருகே புதைக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் குழந்தையை கொன்ற தம்பதி உள்பட 3 பேரை கைது செய்தனர்.

  இதையடுத்து, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் களிப்பால் கொலைகளைத் தடுப்பதற்காகவே, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார். மேலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கையால் கடந்த சில ஆண்டுகளாக மறைந்து போயிருந்த கள்ளிப்பால் கொலைகள் மீண்டும் முளைவிட காரணம் என்ன என நியூஸ் 18 தமிழ்நாடு கள ஆய்வு செய்தது.

  செக்கானூரணி, கருமாத்தூர், செல்லம்பட்டி, உசிலம்பட்டி என அனைத்து ஊரகப் பகுதிகளிலும் நேரடியாகச் சென்று பார்த்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

  பெண் குழந்தைகள் பிறந்ததில் இருந்து திருமணமாகி சென்ற பின்னரும் செய்யக்கூடிய செய்முறைகள் அதிக பொருட்செலவை கொண்டதாக இருக்கிறது. சமுதாயத்தில் கவுரவத்தை நிலைநிறுத்த ஏழைகளாக இருந்தாலும், நடுத்தர வசதி படைத்த குடும்பமாக இருந்தாலும், ஆடம்பரமாக நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். 

  இதற்காக வட்டிக்கு மேல் வட்டி வாங்கி, தங்களது வாழ்நாளையே கந்து வட்டிக்கு அர்ப்பணிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படும் இவர்கள், பெண் குழந்தைகள் என்றாலே வெறுத்து ஒதுக்கும் நிலைக்கு ஆளாகின்றனர். இதுதான் கள்ளிப்பால் கொலைக்கு அடித்தளம். மேலும், பெண் குழந்தைகள் மூலம் உறவினர்கள் கொடுக்கும் தொந்தரவும், விரக்தியின் உச்சம்.

  கள்ளிப்பால் கொலைகள் கறாராக ஒடுக்கப்பட்ட போது, ஸ்கேன் மூலம் பாலினம் அறிந்து கருவிலேயே சிசுக் கொலையை அரங்கேற்றினர். ஸ்கேன் மூலம் பாலினம் அழிவதை தடைசெய்த பின்னர், திருட்டுத்தனமாக சில இடங்களில் கருக்கலைப்புகள் நடைபெற்று வந்தன. இப்போது அதுவும் தீவிர கண்காணிப்பில் வந்ததால் குழந்தையைப் பெற்று பின்னர் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்யும் பழைய முறை திரும்பி இருக்கிறது.

  பெண் சிசுக் கொலைக்கு எதிராக முன்பு இருந்த விழிப்புணர்வு, தற்போது குறைந்து போனதும் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமாக கூறப்படுகிறது. பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு எதிராக மதுரை மாவட்டத்தில் தலைதூக்கும் கள்ளிப்பால் கலாச்சாரத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்துமா...?
  Published by:Vijay R
  First published: