Home /News /virudhunagar /

காமராஜரின் வரலாற்றைத் தாங்கி நிற்கும் நினைவு இல்லம்; விருதுநகர் வந்தா கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க

காமராஜரின் வரலாற்றைத் தாங்கி நிற்கும் நினைவு இல்லம்; விருதுநகர் வந்தா கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க

விருதுநகர் காமராஜர் இல்லம்

விருதுநகர் காமராஜர் இல்லம்

விருதுநகரின் மையத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் வாழ்ந்த நினைவு இல்லம் தமிழக அரசால் பாதுகாக்கப்பட்டுவருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
    கர்மவீரர், கல்வி கண் திறந்தவர், தென்னாட்டு காந்தி என்றெல்லாம் போற்றப்படும் காமராஜர், தம்மை இந்த நாட்டிற்காக அர்ப்பணித்தவர் என்பதை உலகு அறியும். சுதந்திர போராட்ட வீரராய், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராய், தமிழக முதல்வராய் அவர் ஆற்றிய பணிகள் ஏராளம். அதனால் தான் இன்றளவும் நம் மனதில் அவர் நினைவாய் நிற்கிறார்.

    இத்தகைய நாடு போற்றும் நல்லவர் "எங்க ஊருக்காரரு" என்று பெருமை கொள்கின்றனர் விருதுநகர் மக்கள். ஆம் காமராஜர் விருதுநகரில் பிறந்தவர், இங்கு இவர் வாழ்ந்த வீடு கூட உள்ளது. நகரில் மைய பகுதியில், எப்போதும் பரபரப்பாக இருக்கும் விருதுநகர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்திற்கு அருகில் தெற்குரத வீதியில் அமைந்துள்ளது காமராஜர் வாழ்ந்த வீடு.

    நினைவு இல்லத்திலிருக்கும் காமராஜர் சிலை


    தெற்கு ரத வீதி வழியாக செல்லும்போது காமராஜர் நினைவு வளைவு நம்மை வரவேற்கும். அதை கடந்து சிறிது தொலைவு சென்றால் குறுகிய தெருவில் கம்பீரமாய் நிற்கும் காமராஜர் இல்லம். காமராஜரின் மறைவிற்குப் பிறகு அவர் பிறந்து வாழ்ந்த இந்த இல்லம் அரசுடமையாக்கப்பட்டு தற்போது செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    நினைவு இல்ல வளைவு


    வீட்டின் மைய பகுதியில் காமராஜரின் மார்பளவு சிலை உள்ளது. விருதுநகருக்கு எந்த அரசியல் தலைவர் வந்தாலும் இங்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். விருதுநகருக்கு சுற்றுலா வருபவர்கள் காமராஜர் பற்றி அறிந்து கொள்ள இந்த வீட்டின் சுவர்களில் ஏராளமான புகைப்படங்கள் உள்ளன.

    காமராஜர் நினைவு இல்லத்தின் உள்பகுதி


    மறைந்த பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி மற்றும் பெரியார், அண்ணா, கருணாநிதி மற்றும் பல வெளிநாட்டு தலைவர்களுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளன. இதையெல்லாம் பார்க்கும்போது பெருந்தலைவர் காமராஜர் எத்துணை இன்றியமையாத தலைவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.

    காமராஜர் நினைவு இல்லத்தில் அரிய புகைப்படங்கள்


    இவை தவிர காமராஜரின் இளமை கால புகைப்படங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள், ஆடைகள், படுத்து உறங்கிய கட்டில் ஆகியவற்றையும் காணமுடியும். மொத்தம் நான்கு அறைகள் கொண்ட இவ்வீட்டை தமிழக அரசு எடுத்துக்கொண்ட பின்பு சில மாற்றங்கள் செய்து மக்கள் பார்வைக்கு வைத்துள்ளது.
    தினசரி சராசரியாக 70 முதல் 80 வரை பார்வையாளர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

    காமராஜர் நினைவு இல்லத்தில் அரிய புகைப்படங்கள்


    பார்வையாளர்கள் கட்டணம் ஏதும் இன்றி இலவசமாகவே பார்வையிடலாம். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதியளிக்கப்படும். விருதுநகரில் நிறைய புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. ஆனால் ‌இங்கு வரும் மக்கள் கட்டாயம் ஒரு முறையாவது வந்து பார்க்க வேண்டிய கோவில் என்றால் அது காமராஜரின் இல்லம் தான்.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி