Home /News /virudhunagar /

Virudhunagar | படியில் தொங்கிக்கொண்டு ஆபத்து பயணம்: கூடுதல் பேருந்துகளை இயக்க பள்ளி மாணவர்கள் கோரிக்கை

Virudhunagar | படியில் தொங்கிக்கொண்டு ஆபத்து பயணம்: கூடுதல் பேருந்துகளை இயக்க பள்ளி மாணவர்கள் கோரிக்கை

படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள்

படிக்கட்டுகளில் தொங்கும் மாணவர்கள்

விருதுநகரில் போதிய பேருந்து வசதி இல்லாததன் காரணமாக பேருந்தில் தொங்கிக்கொண்டு மாணவர்கள் ஆபத்து பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி நேரங்களில் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் படிகளில் தொங்கியபடி ஆபத்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலும் மேல்நிலை மற்றும் உயர் கல்விக்காக இரண்டு மூன்று ஊர்களை கடந்து நகர்புற பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களுக்கு தினசரி வந்து செல்கின்றனர்.

    இவர்களுள் பெரும்பாலானோர் அரசு பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர்.‌ ஆனால் கிராமப்புற பகுதிகளுக்கு குறைந்த அளவே பேருந்துகள் இயக்கப்படுவதால் காலை மற்றும் மாலை வேளைகளில் பஸ்களில் சீட் இல்லாமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்து வருகின்றனர்.

    படிகளில் பயணம் செய்ய வேண்டாம் என காவல்துறையினர் பல முறை எச்சரித்தும் பலனில்லை. இதனால் பல இடங்களில் பேருந்து நடத்துனருக்கும் மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுவதை காணமுடிகிறது. குறைந்த எண்ணிக்கையிலே பேருந்துகள் இயக்கப்படுவதால் அவற்றிற்காக காத்திருக்கும் மக்கள் பேருந்து வரும் போது ஓடி சென்று இடம்பிடிக்கும் நிலை காணப்படுகிறது.

    கூட்டம் நிறைந்த பேருந்துகளில் மாணவர்கள்


     

    இயக்க நிலையில் இருக்கும் பேருந்தில் கூட்டமாக அடித்துக் கொண்டு ஏற முயற்சி செய்வதாலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே போக்குவரத்து துறையால் கிராம பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள் மோசமான நிலையில் உள்ளன.

    படிக்கட்டுகளில் மாணவர்கள்


    பல பேருந்துகளின் படிக்கட்டுகள் சேதமடைந்து பின்னர் அவை வெல்டிங் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் உள்ள படிகளில் பயணம் செய்து அவ்வப்போது படிக்கட்டுகள் உடைந்து படியில் பயணம் செய்த மாணவர்கள் காயமடைந்துள்ளனர். மூன்று நாட்களுக்கு முன்பு திருச்சுழி பகுதி மாணவி ஒருவர் இதே போன்று பள்ளி செல்லும் போது பஸ்ஸில் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் படியில் நின்றபடி பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக படியில் இருந்து தவறி விழுந்து காயம் ஏற்பட்டு உயிரிழந்தார். இது போன்று மாணவர்கள் படியில் இருந்து தவறி விழுவதும், உயிரிழிப்பதும் தொடர் கதையாகி உள்ளது.

    தற்போது பெண்களுக்கும் இலவசப் பயணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் கூட்ட நெரிசல் இன்னும் அதிகமாகி உள்ளது. இது குறித்து மாணவர் ஒருவர், தன் ஊருக்கு செல்ல தினசரி காலை மற்றும் மாலை என இரு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனாலே அதிக கூட்டமாக இருப்பதாகவும், பாதி நாட்கள் படியில் தொங்கியபடி தான் பயணம் செய்வதாய் கூறினார்.

    நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை கொண்டாடி வரும் இந்த வேலையில் தமிழ்நாட்டின் குக்கிராமங்களையும், சாலை இல்லாத மலைகிராமங்களையும் பேருந்து சேவைகள் மூலம் இனைத்த போக்குவரத்து துறையின் பணி பாராட்டுக்கு உரியது. எனினும் வாழ்வில் பல சாதனைகளை படைக்க பல கனவுகளோடு பள்ளிக்கு வரும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு போக்குவரத்து துறை இன்னும் கூடுதலான பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    செய்தியாளர்: அழகேஸ்வரன், விருதுநகர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி